Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -


14-ம் அத்தியாயம் சிவநேசர்!

சிவநேசர் பத்துப் பதினைந்து நிமிஷங்கள் கழித்து வெளியே வந்த போது, அவரது தலை மயிர் ஒழுங்காக வாரி விடப்பட்டிருந்ததோடு உடைகளும் சீர் செய்யப்பட்டிருந்தன. எப்பொழுதுமே தன்னைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும்போது அவர் இவற்றை அலட்சியம் செய்வதில்லை. அவரைக் கண்டதும் அதிகார் அம்பலவாணர் தம்மை அறியாமலே தம் ஆசனத்தை விட்டு எழுந்து விட்டார். சிவநேசரைப் பார்த்து “வணக்கம் ஐயா!” என்று கை கூப்பி வணங்கினார் அவர். சிவநேசரோ பதிலுக்கு வணங்கவில்லை. அவர் எப்பொழுதுமே யாரையும் வணங்குவதில்லை. வெறுமனே “அம்பலவாணரா, என்ன விசேஷம்? உட்காரும்” என்று மட்டும் சொன்னார். அம்பலவாணர் உட்கார்ந்தார். வள்ளியாச்சியோ சிவநேசரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவரது முகத்தில் தன் விழிகளைப் பதிய விட்டாள். ஆனால் அவரோ அதைச் சற்றும் இலட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட ஏமாற்றம் வள்ளியாச்சிக்குச் சிறிது துன்பத்தை அளித்ததாயினும், பாக்கியத்தின் கல கலப்பான பேச்சு அதை மாற்றிவிட்டது.

சிவநேசர் அம்பலவாணரிடம் “சென்ற வாரம் பட்டணத்தில், உமது மகள் நீர், கொழும்புக்குப் போயிருந்ததாகச் சொன்னாளே, எப்பொழுது வந்தீர்?” என்று கேட்டார்.

“நேற்றுத்தான் வந்தேன். அங்கு பல முக்கியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.”

“அப்படியா? அரசியல் விஷயங்களைப் பற்றித் தானே பேசுகிறீர்? எனக்கு அவற்றில் இப்பொழுது அக்கறை இல்லை. சுந்தரேஸ்வரர் கோயில் கோபுரத்தை இவ்வருடம் எப்படியும் கட்டி முடிக்க வேண்டும். அது ஒன்றில் தான் எனக்கு இப்பொழுது அக்கறை. அதற்காகக் கொழும்பில் இரண்டு மூன்று மாதங்கள் நான் தங்கும்படி கூட நேரிடலாம்.”

அம்பலவாணர் கூறிய முக்கிய விஷயம் அரசியல் விஷயமல்ல. உண்மையில் ஸ்ரீதர் விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டே அவர் அவ்வாறு பேசினார். எப்படி விஷயத்துக்கு வருவது என்று திக்கு முக்காடினார் அவர்.

இதற்கிடையில் சிவநேசர் சைமனிடம் அதிகாரை உபசரிப்பதற்காக மதுபான வகையறாக்கள் அடங்கிய தள்ளு வண்டியை அங்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

சிவநேசர் குடிகாரர் அல்லாவிட்டாலும் விருந்தினர்களை உபசரித்தற்கும் உணவருந்துவதற்கு முன்னர் தானே சிறிது குடித்துக் கொள்வதற்குமாக எப்பொழுது விஸ்கி போன்ற விலை உயர்ந்த குடி வகைகளைத் தமது மாளிகையில் வைத்திருப்பது வழக்கம். பளபளக்கும் வெள்ளித் தட்டுடன் கூடிய தள்ளு வண்டியில் அவை கண்ணாடிப் பாத்திரங்களுடன், வெண்ணெய்க் கட்டி, ‘பிஸ்கட்; போன்ற உணவு வகைகளுடனும் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விறாந்தையில் சலவைக் கல் தளத்தில் சைமன் அத்தள்ளு வண்டியைத் தள்ளி வந்ததைக் கண்ட அதிகார் அம்பலவானரோ ஒரு பரவச நிலையில் இருந்தார். அவர் வாயில் எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. பொதுவாகவே குடிப்பவர்களுக்குக் குடி வகைகளைக் கண்டதும் இவ்வித அனுபவம் ஏற்படுமாயினும், இலவசமாக வரையின்றிக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவர்கள் அடையும் ஆனந்தம் கொஞ்சமல்ல. அதிலும் சாதாரண சாராயத்தையும் பியரையுமே தினசரி குடித்துப் பழகியவர்களுக்கு விலையுயர்ந்த விஸ்கியைக் கண்டதும் பிறக்கும் இன்பத்தை அளவிட முடியாது.

ஆனால் அதிகார் பரவச நிலையில் இருக்க, வள்ளியாச்சிக்கோ “எங்கே மனிதன் அளவு மீறிக் குடித்துவிட்டு வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்துவிடுகிறாரோ?”” என்ற அச்சம் ஏற்பட்டது. அந்த அச்சத்தை அவருக்குத் தெரிவித்துக் கொள்வதற்காகத் தன் கண்களை அவர் முகத்தில் நாட்டி ஓர் எச்சரிக்கைப் பார்வை பார்த்தாள் அவள். இவ்விதம் கண்களால் பேசிக் கொள்வதில் சிறு வயதிலிருந்தே வள்லியாச்சி நல்ல சாமர்த்தியசாலி.

ஆனால் பாலைக் கண்ட பூனை எச்சரிக்கைப் பார்வையையா கவனிக்கும்? வெள்ளி பிரேமிட்ட நமது மூக்குக் கண்ணாடியைத் தமது கைக்குட்டையால் ஒரு தடவை நன்கு துடைத்து மாட்டிக் கொண்டு விஸ்கியில் முழுகி எழத் தயாராகிக் கொண்டிருந்தார் அவர்.

முதல் கிளாஸ் வயிற்றை அடைந்ததுமே நாக்கின் கட்டவிழத் தொடங்கியது அதிகாருக்கு. எனவே கொழும்பு அனுபவங்களைப் பற்றித் தாராளமாகப் பேச ஆரம்பித்தார் அவர். ஆண்கள் இவ்வாறு குடிக்க ஆரம்பித்ததும் பாக்கியம் “நீங்கள் குடியுங்கள். நாங்கள் வெளியே போகிறோம்” என்று குறிக் கொண்டு தோட்டத்தில் வேப்ப மர நிழலில் இருந்த சிமெந்து ஆசனத்தில் வள்ளியாச்சியுடன் போய் உட்கார்ந்து கொண்டாள்.

அதிகார் கல்கிசைக் கடற்கரையில் நடைபெற்ற நிச்சலுடைப் போட்டியைப் பற்றியும் தான் அதில் நடுவர் நாயகமாகக் கடமையாற்றியதைப் பற்றியும் பெருமையுடன் கூறினார். குடி போதை ஏற ஏற அதிலிருந்து ஸ்ரீதர் விஷயத்துக்கு தழுவுவது அவருக்குச் சிரமமாயிருக்க வில்லை.

“ஐயாவுக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். இந்தப் போட்டியின் போது, உங்க மகன் ஸ்ரீதரை நான் அங்கு சந்தித்தேன். ஆள் நன்றாயிருக்கிறான். உண்மையில் அவனது சிநேகிதி ஒருத்தி தான் - பத்மா என்று பெயர் - நீச்சலழகியாகத் தெரியப்பட்டாள்.”

“அப்படியா...”

"ஆனால் ஒன்று. அவள் எவ்வளவு அழகியாயிருந்தாலும் ஸ்ரீதருக்கு ஏற்றவனல்ல ஐயா. யாரோ வாத்தியாரின் மகளாம். இந்தத் தொடர்பை முற்றாக வெட்டிவிட்டு, ஸ்ரீதருக்கு ஒரு கல்யாணத்தை உடனடியாக நீங்கள் செய்து வைக்க வேண்டும்”

அதிகார் சொன்ன இச்செய்தியைக் கேட்டுச் சிவநேசர் திடுக்கிட்டு விடவில்லை. “அப்படியானால் ‘நன்மை விரும்பி’ எழுதியுள்ளது உன்மைதான். பாக்கியம் கூறியது போல் நான் அநாவசியமாகப் பதைத்துவிட வில்லை. உடனடியாக இது விஷயமாக நடவடிக்கை எடுத்து ஸ்ரீதரின் கல்யாணத்தை முடித்து விட வேண்டியதுதான்” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டார் அவர்.

ஆனால் அந்த எண்ணத்துடனேயே சகிக்க முடியாத ஒரு வகை ஆத்திரமும் அவர் உள்ளத்தில் பொங்கி எழுந்தது. “ஸ்ரீதர் - நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன் - என்னுயிர் என்றல்லவா நான் அவனைக் கருதுகிறேன் - அவன் என் அந்தஸ்துக்கும் மரியாதைக்கும் ஒவ்வாத முறையில் இவ்வாறு நடந்து கொள்கிறானே! இதை எப்படி பொறுப்பது” என்ற கலக்கம் ஏற்பட்டது அவருக்கு.

ஆனால் உண்மையில் அவருக்கு ஸ்ரீதரை விட அதிகார் அம்பலவாணர் மீதுதான் ஆத்திரம் அதிகமாக வந்தது. “இவன் போன்ற அற்ப மனிதன் என்னிடம் தன்னைப் பற்றிப் பேசக் கூடிய வகையில் ஸ்ரீதர் நடந்து கொண்டிருக்கிறானே! குறை கூறும்போது கூட என்னிடம் ஸ்ரீதரைப் பற்றி மரியாதையாகவும் கண்ணியமாகவும்தான் பேசுகிறான். ஆனால் மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேசும்போது எப்படிப் பேசுகிறானோ யார் கண்டது? “சிவநேசருக்கு ஒரு மகன். அவன் சாதி கெட்ட பெட்டையைப் பிடித்துக் கொண்டு அலைகிறான் என்று சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்?” என்று சிந்தித்தார் அவர்.

அதன்பின் சிறிது நேரம் அவர் ஒன்றுமே பேசவில்லை. மெளனமாக இருந்தார். அம்பலவாணர் ஒரு மிடறு விஸ்கியை உள்ளே தள்ளிக் கொண்டு தன்னை மீறி வந்த ஏப்பத்தை வெளியேற்றிய வண்ணமே, “ஏன் பேசாதிருக்கிறீர்கள்? இதைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்தேயாக வேண்டும். நான் ஸ்ரீதருக்குக் கல்யாணம் ஒன்று பேசட்டுமா ஐயா?” என்றார்.

“ஸ்ரீதர் கல்யானத்தைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அது எனக்குத் தெரியும். நீர் இப்போது போய் வரலாம்” என்றார் சிவநேசர். கர்வம் நிறைந்த அவரது உள்ளத்துக்கு, அதிகாரின் பேச்சு தன்னை இலேசாக மதித்து அவமானம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

“நீங்கள் என்னை பிழையாக விளக்குகிறீர்கள் போலிருக்கிறது. ஐயா, நான் பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொன்னேன்” என்று விநயமாகப் பேசினார் அதிகார்.

சிவநேசர் அதிகார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறிந்தவரேயாயினும் “ஏன் இவனுக்கு நான் விட்டுக் கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் மனதில் தோன்றவே, “எனக்கு ஸ்ரீதரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவனைப் பற்றி நீர் ஒன்றும் எனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. உம்முடைய மகன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ‘பார்’களில் குடித்து விட்டு விழுந்து கிடக்கிறான். அவன் விஷயத்தைக் கவனியும். ஒரு நாள் கொழும்பில் ஒரு ஹோட்டலில் குடி வெறியில் அவன் என்னிடம் வந்து தனக்குச் சிறிது பணம் வேண்டுமென்று கேட்டான். ரூபா நூறு கொடுத்து விட்டு வந்தேன். அவனைத் திருத்துவது பற்றி நீர் கவனியாமல் ஸ்ரீதர் விஷயத்தில் அக்கறை காட்டுகிறீர்? ஸ்ரீதர் என் மகன். அவனைச் சரியான முறையில் வளர்க்க எனக்குத் தெரியும். நீர் போய் வரலாம்.” என்று கடுமையாகக் கூறினார்.

சிவநேசரின் இக்கடும் முகத்தைக் கண்டு அதிகார் அம்பலவாணர் அப்படியே கலகலத்துப் போய்விட்டார். “என்னையோ, என் குடும்பத்தினரையோ என் மகனையோ குறை கூறுவது போற் பேசுவதற்கு, ஏ நாய்களே, உங்களுக்கு என்ன தகுதி?” என்று வினவுவது போன்ற ஒரு மனோபாவம் தொனித்தது. எப்பொழுதுமே சிவநேசர் அகம்பாவமும் கர்வமும் கொண்டவர் என்பது அதிகாருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அந்தஸ்தும் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் உடைய அவர் தன் மீது கோபம் கொள்வதை அந்தக் குடிவெறி நேரத்தில் கூட அவர் விரும்பவில்லை. ஆகவே எப்படியாவது அவரது தப்பபிப்பிராயத்தை நீக்கிச் சமாதானம் செய்து கொள்ளவிரும்பிய அதிகார் “என் மகன் விஷயம் தெரிந்ததுதானே ஐயா? அவனுக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அவன் உங்களிடம் பெற்ற ரூபா நூறையும் திருப்பிச் செலுத்திவிடுவேன். ஆனால் உங்களுக்குப் பணம் கொடுக்க என்னும் அத்துணிவு எனக்கில்லை. உண்மையில், நான் உங்கள் மனதை எவ்வகையிலாவது புண்படுத்திவிட்டேன் என்றால் என்னை மன்னிக்கவும், ஐயா” என்றார்.

சிவநேசரோ வெடுக்கென்று “அதிகார்! உமது பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. நீர் என்னோடு பேச வேண்டாம். நான் உம் மகனுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெறுவதற்கா கொடுத்தேன்? அதற்காகத்தான் அக்கதையை நான் இங்கு சொன்னேன் என்று நினைத்தீரா? மெலும் நீர் உம் மகனுக்காக வெடகப்படுவதாகக் கூறுகிறீர். நான் ஸ்ரீதருக்காக வெட்கப்படவில்லை. நீர் போய் வாரும்!” என்று கூறிக் கொண்டே தமது ஆசனத்திலிருந்து எழுந்து உள்ளே போய்விட்டார்.

அதிகார் அம்பலவாணர் தம் ஆசனத்தை விட்டெழுந்து திக்பிரமை பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தார்.

சிவநேசர் மனதில் ஒரே கொந்தளிப்பு. தன் அன்பு மகனை யாரும் குறை கூறித் தம் வாழ்க்கையிலேயே அவர் ஒரு போதும் கேட்டதில்லை. இதுவரை அவர் கேட்டுள்ளதெல்லாம் ஸ்ரீதரைப் பற்றிய பாராட்டுரைகள். சென்ற வாரம் கூடப் பண்டிதர் சின்னப்ப பாரதி “பிள்ளை என்றால் ஸ்ரீதர் போலல்லவா இருக்க வேண்டும்? படிப்பில் புத்திசாலி. கலைகளில் பேரார்வம், பண்பில் இணையற்றவன். கொடைக்குக் கர்ணன். அழகில் அந்தச் சுப்பிரமணியக் கடவுளே தான்” என்று வர்ணித்திருந்தார். அந்த ஸ்ரீதரைப் பற்றித் தான் இன்று இந்த அற்பன் அவதூறுகள் கண்டுபிடித்துக் கூறுகிறான். இவனை என்ன செய்யலாம்? - உண்மையில் அவர் அறிவிழந்த நிலையில் இருந்தார். நாம் என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்பதே அவருக்கு விளங்கவில்லை.

வேப்பமர நிழலில் வள்ளியாச்சியுடன் சைமன் கொண்டு வந்து வைத்திருந்த ஒரேஞ் பார்லியை அருந்தி வெற்றிலை போட்டுப் பேசிக் கொண்டிருந்த பாக்கியம் மாளிகை விறாந்தையில் பரபரப்பான பேச்சும் சம்பவமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனப்தைக் கண்டு கொண்டதும் “வா வள்ளியாச்சி, வீட்டுக்குள் போவோம்” என்று எழுந்து வந்தாள்.

அங்கே அதிகார் நின்று கொண்டிருந்த தோரணையைக் கண்டதும் பாக்கியம் " என்ன விஷயம்? ஆள் எங்கே” என்று கேட்டாள். “கோபித்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்” என்றார் அதிகார்.

“கோபமா? அவர் கோபிக்கும்படி நீர் என்ன பேசினீர்?” என்றாள் பாக்கியம்.

"இல்லை! ஸ்ரீதரைப் பற்றி..”

“ஸ்ரீதரைப் பற்றியா... ஓகோ.. வள்ளியாச்சியும் என்னிடம் சொன்னாள். அவரிடம் நீர் அதைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஸ்ரீதரைப் பற்றி யாரும் குறைவாகப் பேசுவதை அவர் ஒரு போதும் பொறுக்க மாட்டார்.”

“நான் குறைவாகப் பேசவில்லை, அம்மா”

“கொழும்பிலே எவ்வித அந்தஸ்துமில்லாத ஒரு பெண்ணின் பின்னால் அவன் திரிகிறான் என்றால் அது குறையில்லாமல் வேறென்ன?”

“உங்களுக்கு யார் சொன்னார்கள்? வள்ளியாச்சி சொன்னாளா? அப்படியானால் வள்ளியாச்சி மீது உங்களுக்குக் கோபமா?”

“எனக்கு யாரிடமும் கோபமேற்படுவதில்லை. மேலும் வள்ளியாச்சி பொய் சொல்லவில்லையே! ஆனால் உனமையைக் கூட ஆளையும் இடத்தியும் அறிந்து சொல்ல வேண்டும். எதையும் கண்ணை மூடிக் கொண்டு பேசலாமா?”

“நீங்கள் சொல்வது சரி. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஐயாவிடமும் என்னுடைய தெரியாத்தனத்திற்க்காக என்னை மன்னிக்கும் படி நீங்கள் சொல்ல வேண்டும்.”

“அதை அப்புறம் பார்ப்போம். இப்பொழுது நீங்கள் போய் வாருங்கள். அது போக ஸ்ரீதரின் கல்யாணம் சீக்கிரம் நடக்கும். உங்களுக்கும் அழைப்பு வரும். கட்டாயம் நீங்கள் வள்ளியாச்சியுடன் வர வேண்டும். தெரிகிறதா?”

“கட்டாயம் வருவோம், அம்மா.”

அதிகார் அம்பலவாணரின் பழைய மொடல் எலும்பு குலுக்கி “லொட லொடக்” கார் சில நிமிஷ நேரத்தில் ‘போர்ட்டிக்கோ’விலிருந்து சீறிக் கொண்டு கிளம்பியது. வள்ளியாச்சி அதிகாரிடம் “பெரிய மனுஷருடன் உங்ளுக்குப் பேசத் தெரியாது. அநாவசியமான விஷயங்களைப் பேசிவிட்டு வேண்டிக் கட்டிக் கொண்டு வருகிறார்” என்றாள்.

“சீ வாயை முடு” என்றார் அதிகார்.

பாக்கியம் அன்றிரவு எட்டு மணிக்கு ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வுக்கு டெலிபோன் செய்தாள். ஆனால் ஸ்ரீதர் வீட்டில்லை. ஆகவே வேலைகாரச் சுப்பையாவிடம் வழக்கத்தில் பேசுவது போல் ஸ்ரீதரின் சாப்பாடு முதலிய விஷயங்களைப் பேசிவிட்டு, அவன் வீட்டுக்கு வந்ததும் “அமராவதி”க்கு டெலிபோன் செய்யும்படி அவனுக்குக் கூறும்படி உத்தரவிட்டாள்.

“ஆகட்டும் அம்மா” என்றான் சுப்பையா.

அன்று ஸ்ரீதரும் சுரேசும் வீட்டுக்கு வந்தபொழுது பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. ஸ்ரீதருக்குத் தெரிந்த சில நண்பர்கள் நடத்திய நாடகமொன்றுக்கு அவர்கள் போய் விட்டு வந்தார்கள். வரும் வழியில் நாதசுரம் வேணு கூறிய விஷயத்தைப் பற்றிச் சுரேஷிடம் விவரித்தான் ஸ்ரீதர். “எனக்கு வேணு கூறிய விஷயத்தைக் கேட்டது தொடக்கம் மனம் கலங்கிப் போயிருக்கிறது. நான் பத்மாவைத் திருமணம் செய்வது பற்றி அப்பாவிடம் பேச எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் கந்தப்பரின் மகள் அமுதா விஷயம் இப்படி முளைத்திருக்கிறது. நான் பத்மாவை விட்டு வேறு யாரையும் ஒரு போதும் திருமணம் செய்யப் போவதில்லை. அம்மாவிடம் சொல்லி எப்ப்டியும் அவளையே திருமணம் செய்வேன். மேலும் அப்பா என் மிது எவ்வªவு அன்பு வைத்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் விருப்பத்துக்கு மாறாக அவர் எதையும் செய்ய மட்டார். என்றாலும் இப்படி ஒரு சிறு சிக்கல் தோன்றிவிட்டதே என்ப்து எனக்குக் கவலையாகத்தானிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் நன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சுரேஷ்” என்று கேட்டான் ஸ்ரீதர்.

சுரேஷ் சிறிது நேரம் பேசாதிருந்து விட்டு, ஸ்ரீதர், நீ முதல் முதலாகப் பத்மாவைப் பற்றி என்னிடம் கூறிஅய் போது நான் உன் அப்பா நீ பத்மாவைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள மாட்டார் என்று கூறியது ஞாபகமிருக்கிறதா? இன்றைய சமுதாய அமைப்பிலே இது போன்ற காதல் நிறைவேறுவது கடினம்,” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஏனா? இன்றைய உலகம் பணத்தைச் சுற்றிச் சுழலும் உலகம். நீ கோடீஸ்வரன். அதனால் ஓர் அந்தஸ்தும் இருக்கிறது. பத்மாவோ சர்வ சாதாரண மத்தியதர வர்க்கப் பென். நீ அவளைத் திருமணம் செய்ய உன் அப்பா மட்டுமல்ல, இன்றைய சமுதாயமே இடங் கொடாது. உன் அப்பா அதற்கு இடம் கொடுத்தால் இவ்வுலகமே அவரைப் பழிக்கும். என்னைப் போன்ற ஒரு சில இளைஞர்கள் வேண்டுமானால் அவரை மெச்சக் கூடும். அதனால் என்ன பயன்? “உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு” என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய உலகில், உயர்ந்தவர் என்பதற்குக் கூடப் பணமும் அந்தஸ்தும் உல்ளவர்கள் என்று தான் பொருள்?” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சை ‘உம்’ கொட்டிக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் மேலும் தொடர்ந்தான். “ஆனால் இதில் ஒரு விசித்திரம்! கோடீஸ்வரர் சிவநேசரின் மகன் கொட்டாஞ்சேனைப் பத்மாவைத் திருமணம் செய்தான் என்று கேட்டதும் குறை கூறுபவர்கள் பனக்காரர்களாகத்ட் ஹான் இருப்பார்கள் என்று நினைத்து விடாதே. ஏழை, மத்தியதர வர்க்கத்தினர்தான் இன்னும் அதிகமாகக் கண்டிப்பார்கள். போயும் போயும் சிவநேசரின் மகன் இப்படிப் போய்க் குப்புற விழுந்தானே என்று பேசுவார்கள் அவர்கள். இன்னும் பத்மா உன்னை என்னதான் உண்மையாகக் காதலித்தாலும் பத்மாவின் பக்கத்து வீட்டுக் காரர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? பத்மா கெட்டிக்காரி. எப்ப்டியோ ஒரு பெரிய பணக்காரனை ஏமாற்றிப் பிடித்து விட்டாள் என்று தான் பேசுவார்கள்...”

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சைத் தடுத்து, “இவைகளல்ல இப்போதுள்ல பிரச்சினை. பத்மாவை நான் எப்படியும் திருமணம் செய்தேயாக வேண்டும்.“ அதற்கு வழி என்ன?” என்றான்.

சுரேஷ், “இது கடினமான விஷயம்தான். உனது அப்பா அதை எதிர்க்கவே செய்வார். போராடிப் பார். இதில் என்னைப் பொறுத்தவரையில் நீ கந்தப்பர் மகளைக் கட்டிக் கொண்டு சந்தோசமாயிருக்க முடியுமென்று நான் நம்பவில்லை. என் விஷயம் வேறு. நான் யாரையும் காதலித்ததில்லை. ஆகவே எல்லாப் பெண்களும் ஒன்றுதான். ஆனால் ஒரு பெண்ணை மனதாரக் காதலித்த ஒருவன், இன்னொரு பெண்ணுடன் வாழும்போது பழைய காதலியின் நினைவு அடிக்கடி தோன்றிக் கொண்டுதானிருக்கும். அது குடும்ப வாழ்க்கைக்கு இன்பத்தைத் தராது” என்றான்.

ஸ்ரீதர் “ஆனால் வேணு சொன்ன விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்பது யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி அமமவிடம் கேட்கலாமென்றிருக்கிறேன். நாளை நிச்சயம் வீட்டுக்கு டெலிபோனில் பேச வேண்டும்.” என்றான்.

இவ்வாறு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வீடு வந்துவிட்டது. வேலைக்கார சுப்பையா ‘அமராவதி’யிலிருந்து வந்த செய்தியை ஸ்ரீதருக்குக் குறிப்பிட்டான். ஸ்ரீதர் டெலிபோனை எடுத்து ‘ட்ரங்க் கோல்’ போட்டு வீட்டுக்குப் பேசினான்.

என்னதான் மனக் குழப்பங்களிருந்தாலும் ஸ்ரீதர் தாயாரோடு மிகவும் உற்சாகமாகவும் வேடிக்கையாகவுமே பேசினான். பரிகாசமாகப் பேசுவதில் அவனுக்கு எப்பொழுதும் இஷ்டம். சிறு வயதிலிருந்தே தாயாரோடு விளையாட்டுப் பேச்சுப் பேசி அவனுக்குப் பழக்கம். வீட்டில் தனியாக வளர்ந்த ஒரே பிள்ளையாக இருந்ததால், பாக்கியம் அவனுக்குத் தாயாக மட்டுமிருக்கவில்லை. அவனோடு சேர்ந்து விளையாடும் சகோதரி அல்லது விளையாட்டுத் தோழி போலவும் விளங்கினாள் அவள்.

டெலிபோனில் தாய் வந்ததும் குரலை மாற்றிக் கொண்டு, “அது திரு. சிவநேசர் வீடா? திருமதி சிவநேசருடன் நான் பேசலாமா?” என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் “யாரது? நான் தான் திருமதி சிவநேசர். என்ன வேண்டும்?” என்றாள்.

“நான் யாழ்ப்பாணம் பொலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறேன். சிவநேசருடன் பேச வேண்டும்.”

“என்ன, பொலீஸ் ஸ்டேஷனிலிருந்தா? என்ன விஷயம்?”

“பாரதூரமான விஷயம். பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் சிவநேசர்.”

பாக்கியம் பதைபதைத்துப் போனாள். பதற்றத்தில் “ஆ” என்று சப்தமிட்டுவிட்டாள். ஸ்ரீதருக்கு அம்மா ஏமாந்து போனாளே என்ற அனுதாபம் ஏற்பட்டது. ஆகவே அதற்கு மேலும் நாடகத்தை நடித்துக் கொண்டு போகாமல் தன்னுடைய சொந்தக் குரலில் “அம்மா என்னைத் தெரியவில்லையா? நான் தான்.. சொல்லு பார்ப்போம்?” என்று கொஞ்சினான்.

பாக்கியம் பெருமூச்சு விட்டாள். ஒரு புறம் ஸ்ரீதரின் விளையாட்டு அவளுக்குச் சிரிப்பை மூட்ட, மறுபுறம் போலிக் கோபட்த்துடன் “ஓ ஸ்ரீதரா? ஆளைப் பார். நல்ல விளையாட்டு. இப்படி எல்லாம் விளையாடக் கூடாது. அப்பாவுக்கு நீ இப்படி விளையாடுவது தெரிந்தால் கோபம் வரும்.” என்றாள்.

“உனக்குத் தெரியாது அம்மா, அப்பா சும்மா கோபிப்பது போல் காட்டுவாரேயல்லாமல் கோபிக்கவே மாட்டார். நீ அவரிடம் சொல்லிப்பார். நிச்சயம் அவர் சிரிப்பார்”

“நீயே அவரிடம் சொல்லு. நான் சொல்ல மாட்டேன்.”

“ நான் சொல்லுவதா? என்னால் முடியாது. எனக்குப் பயம்?”

“அப்படியானால் அவர் கோபிப்பார் என்று தானே சொல்லுகிறாய்?”

“நான் சொன்னால் கோபிப்பார். நீ சொன்னால் கோபிக்கமாட்டார்.”?

“அது கிடக்கட்டும் ஸ்ரீதர். நீ நன்றாக உன் உடம்பைக் கவனித்து வருகிறாயா? சுப்பையா நன்றாய்ச் சமைக்கிறானா? உன்னுடைய சுரேஷ் எப்போது சீமைக்குப் போகிறான்?”

“என் உடம்பைக் கவனிக்கிறேனா என்று கேட்கிறாயா? அடுத்த வாரம் நான் யாழ்ப்பாணத்துக்கு வரும்போது நீ என்னைப் பார்த்தால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்ள மாட்டாய் அம்மா. அதற்காக “நான் தான் ஸ்ரீதர்” என்று கொட்டை எழுத்தில் என் பெயரை என் நெஞ்சில் எழுதி ஒட்டிக் கொண்டு வரப் போகிறேன்.”

“என்ன? அடையாளம் தெரியாத அளவுக்கு அவ்வளவு மெலிந்து போய் விட்டாயா ஸ்ரீதர்?”

“இல்லை. கொழுத்துபோய் விட்டேன் அம்மா. நீயே பார். ஆனால் ஒன்று நீ அனுப்பிய எலுமிச்சை ஊறுகாய் முடிந்து விட்டது. நேற்று சுப்பையா கடையிலிருந்து ஒரு போத்தல் ஊறுகாய் வாங்கி வந்தான். எனக்கு ஊறுகாய் இல்லாவிட்டால் சாப்பாடு செல்லாது.”

“**** எனக்கு அறிவிக்கவில்லை? இது எல்லாம் சுப்பையாவின் பிழை. அவனுக்கு இப்பொழுது வேலையில் கவனமேயில்லை. இல்லாவிட்டால் எனக்கு அறிவித்திருக்க மாட்டானா? ஆளை நான் என்ன செய்கிறேன் பார்? எல்லாம் நீ கொடுக்கும் இடம். நீ என்னோடு விளையாடுவது போல் தான் அவனோடும் விளையாடுவாய். அதனால் அவன் அப்படிச் செய்கிறான்.”

“சரி அம்மா. ஊருகாய்க் கதையை விட்டு விடு. சுரேஷைப் பற்றி நீ கேட்டாயல்லவா? சுரேஷ் அடுத்த வெள்ளிக்கிழமை சீமை போகிறான். அவனை அனுப்பியதும் உடனே யாழ்ப்பாணம் வருவேன். அம்மாவைப் பார்த்து இரண்டு மாதத்துக்கு மேலாகிறது. பார்க்க ஆசையாயிருக்கிறது/”

“அப்பாவும் உன்னைக் காணாமல் கவலையாயிருக்கிறார். உடம்பு சரியில்லாததால் அவர் முன்னர் போல் அடிக்கடி கொழும்புக்கு வர விரும்பவில்லை. இன்னும் அவர் வருவதென்றால் நானுமல்லவா வர வேண்டும்? இங்கு வீட்டைப் பார்ப்பதார்? அப்படியானால் நீ இங்கு சனிக்கிழமை வந்து விடுவாய். அப்படித்தானே!”

“அப்படித்தான்”

“சரி அப்படியானால் அப்பாவிடமும் நீ வருவதாகச் சொல்லி விடுகிறேன், ஸ்ரீதர்.”

“ம் - வேறென்ன விஷயம்?”

“ஒன்றுமில்லை. உன்னை உடனே வரச் சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் டெலிபொன் பண்ணினேன். ஊறுகாயை நாளைக்கே ரெயிலில் அனுப்பி வைக்கிறேன்.”

“வேண்டாம் அம்மா. இன்னும் ஐந்தாறு நாள் தானே கொழும்பில் இருக்கப் போகிறேன்.’

“அதனால் என்ன? நீ கடை ஊறுகாயைச் சாப்பிடக் கூடாது. உடனே அதை விட்டு விடச் சொல்லு.

ஸ்ரீதர் அதன் பின் பேச்சை வேறொரு முக்கிய விஷயத்துக்கு மாற்றினான்.

“அம்மா ஒரு விஷயம்.”

“என்ன அது?”

“நீயும் சரி. அப்பாவும் சரி என்னுடைய நாடகத்தைப் பார்க்கக் கொழும்புக்கு வர வில்லையல்லவா?”

“ஆமாம். உனக்கு அது மிகவும் மனவருத்தம். அப்படித்தானே?”

“இல்லை அம்மா. அடுத்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதே ¡டகத்தைப் போடுவதற்கு எங்கள் பேராசிரியர் ஏற்பாடு செய்திருக்கிறார். கல்லூரி நிதிக்காகப் போடுகிறோம். அங்கே வந்து பார் என்னுடைய நடிப்பை. நிச்சயமாக நீ வர வேண்டும். அப்பா வரவிட்டால் பரவாயில்லை. அவர் முன்னால் நடிக்க எனக்கு வெட்கமாயிருக்கிறது.”

“நல்ல நடிகன் நீ! வெட்கப்பட்டால் நடிக்க முடியுமா? அவருக்கும் உன் நடிப்பைப் பார்க்க ஆவல். கொழும்புக்கு உன் நாடகத்தைப் பார்க்க வராதது அப்பாவுக்கு எவ்வளவு மன வருத்தம் ¦தைர்யுமா? எத்தனையோ தரம் அவர் அதனை எனக்குச் சொல்லிவிட்டார்.”

“சரி அம்மா. அப்படியானால் இரண்டு பேரும் வந்து பாருங்கள். நான் அந்த நாடகத்தில் தேபேஸ் மன்னனாக வந்து என் கண்களைக் குத்திக் கொள்வேன். பார்க்கப் பயங்கரமாயிருக்கும். நீ அழுது விடுவாய்.”

“அப்படி அழ மாட்டேன் நான். நான் என்ன குழந்தைப் பிள்ளையா?”

“சரி, இருந்து பார்ப்போமே”

தாயும் மகனும் இப்படிப் பலவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டாலும் இருவரும் தங்கள் மனதை அலைந்துக் கொண்டிருந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஸ்ரீதரின் திருமணத்தைப் பற்றிய விஷயமே அது. வேணு தன்னிடம் கூறிய தகவல்களைப் பற்றிப் பேச ஸ்ரீதர் துடித்தானென்றாலும், அப்படியோ மனதை அடக்கிக் கொண்டாள். யாழ்ப்பாணம் போகும்பொது அங்கே அதைப் பேசிக் கொள்லலாம் என்பது அவனது திட்டம். பாக்கியத்தின் எண்ணமும் அதேதான். மேலும், சிவநேசரும் அதைப் பற்றிப் பேச வேண்டாமென்று அவளிடம் சொல்லியிருந்தாரல்லவா? சும்மா இருக்கிற சங்கை அவசரப்பட்டு ஊதினால், விஷயம் கெட்டுப் போய்விடலாம் என்ற அச்சம் இருவர் உள்ளத்திலும் இருந்தது. ஆகவே முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் பேசினார்கள் அவர்கள்.

அன்றிரவு வானம் மப்பும் மந்தாரமாயிருந்தது. சிவநேசர் அமராவதி மாளிகையின் மேல் மாடியில் நித்திரையின்றி நடந்து கொண்டிருந்தார். அவர் மனது இலகுவில்****பட்டால், மாடியிலுள்ள சேர் நமசிவாயத்தின் பெரிய படம் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டே சிந்திப்பது அவரது வழக்கமாகும். பல வருடங்களின் பின் அந்த மண்டபத்தில் அன்றிரவுதான் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார் அவர். நன்கு புகையிலை திணிக்கப்பட்ட சுங்கானை வாயிலே பிடித்துக் கொண்டு சிவநேசர் நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட சுங்கானை வாயிலே பிடித்துக் கொண்டு சிவநேசர் நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட அவர் மனைவி பாக்கியம் அவர் இப்போது படுக்கை அறைக்கு வர மாட்டார் என்பதைத் தெரிந்து கொண்டு, தான் படுப்பதற்குப் போய் விட்டாள். வேலைக்கார சைமன் கதவுகளைப் பூட்டி விட்டான். எங்கும் பேரமைதி சூழ்ந்த அந்த இரவிலே மாரி காலமானதால் தாமரைத் தடாகத்திலும் நீச்சற் குளத்திலும் கிடந்த தவளைகளின் கூச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

மணி பன்னிரண்டாகியும் அவர் இன்னும் நடந்து கொண்டேயிருந்தார். திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவர் போல பாட்டனார் சேர் நமசிவாயத்தின் படத்துக்கு முன்னால் சென்று அதனைப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். முழு ஆள் அளவில் வர்ணங்களில் தீட்டப்பட்ட அந்தப் படத்துக்குப் பக்கத்தில் அவரது தந்தையார் கனகசபையின் பெரிய படமும் காணப்பட்டது. அதற்குச் சற்றுத் தொலைவில் ஸ்ரீதர் தீட்டிய சிவநேசர் படமிருந்தது. மூன்றையும் நன்கு பார்த்துவிட்டு அங்கு மாட்டப்பட்டிருந்த ஸ்ரீதரின் புகைப்படங்களையும் பார்த்தார் அவர். சேர் நமசிவாயம் தொடக்கம் ஸ்ரீதர் வரை எல்லோர் முகத்திலும் காணப்பட்ட தோற்ற ஒற்றுமை என்றும் போல் அப்பொழுதும் அவரைக் கவர்ந்தது.

ஸ்ரீதர் படத்தைப் பார்த்த வண்னம் “ஸ்ரீதர்! நீதான் எங்கள் குடும்பத்தின் குலக் கொழுந்து. நீ என்னை ஏமாற்றி விடுவாயா? கந்தப்பர் மகளை நீ கட்டாவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் நிச்சயம் நீ அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்யக் கூடாது. வேண்டுமானால் சேர் நமசிவாயத்தின் தம்பி சேர் தம்பையா செய்தது போல ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிக் கொள். அதைக் கூட நான் அனுமதிப்பேன். ஆனால் நிச்சயம் மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டது போன்ற பெண்ணை நீ கட்ட முடியாது” என்று ஸ்ரீதருடன் பேசுவது போல் தன்னுள் தானே பேசிக் கொண்டார் அவர்.

அதன் பின் மண்டபத்தின் இன்னொரு புறத்தில் மாட்டப்பட்டிருந்த சேர் தம்பையா தம்பதிகளின் புகைப்படத்தைப் பார்க்கச் சென்றார் அவர்.

இவ்வாறு அவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க வானம் பிளந்தது போல் இடி முழக்கத்துடன் பெருமழை கொட்ட ஆரம்பித்தது. மின்னல் சீறியது; காற்று குமுறியது. திறந்து வைத்திருந்த ஜன்னல்கள் படார் படார் என்று மோத ஆரம்பித்தன. சைமன் படுக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தான். அவன் ஜன்னல்களை மூடிக் கொண்டிருக்க, சிவநேசர் திறந்திருந்த ஓரிரு ஜன்னல்களுக்கூடாக வெளியே மழையின் நர்த்தனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ‘அமராவதி’ வளவின் மரங்கள் காற்றில் ஹோவென்று அலறி ஆடிய காட்சி பயங்கரமாயிருந்தது. “புயலின் ஆரம்பமா இது?” என்று பயந்து போனார் அவர்.

பாக்கியம் படுக்கையறையிலிருந்து வெளியே வந்து “வாருங்கள். ஏன் நித்திரை விழிக்கிறீர்கள்?” என்று கேட்டது, முதலில் அவருக்குக் கேட்கவில்லை. இரண்டாவது முறையும் கூப்பிட்ட பின்னர் படுக்கை அறையை நோக்கிச் சென்றார் அவர்.

[தொடரும்]

No comments: