Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

13-ம் அத்தியாயம்: சிவநேசர்

ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது அவரை நேரில் ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. பல்கலைக் கழகத்து நாடகத்தன்று ஒரே ஒரு தடவை அவரை டெலிபோனில் சந்தித்து இருக்கிறோம். அன்று அவருக்குச் சிறிது சுகவீனம். இருந்தாலும் ஸ்ரீதரின் நாடகம் எப்படி நிறைவேறியது என்றறிவதற்காகவும், தன் அன்பு மகனுக்கு அவனது இஷ்டமான கலைத் துறையில் ஊக்கமளிக்க வேண்டுமென்பதற்காகவும் நள்ளிரவு வேளையில் அவனது நாடகத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவனுடன் பேசினார் அவர். சிவநேசரைப் பற்றி நாம் இதுவரை அறிந்த விவரங்களின் படி அவர் ஒரு கோடீஸ்வரர், படிப்பாளி, சாதிமான், தன் அந்தஸ்தில் பெரிது அக்கறைக் கொண்டவர் என்பன எங்களுக்குத் தெரியும். அந்தஸ்துதான் அவருக்கு உயிர். அது பெருமளவுக்கு ஒருவன் அணியும் ஆடைகளிலும் தங்கியிருக்கிறது என்பது அவரது எண்ணம். அதன் காரணமாக அவர் எப்பொழுதும் ஆடம்பரமாகவே உடுத்திக் கொள்வார், தமது மாளிகைக்கு வெளியே செல்லும் போது, அவர் ஒரு பொழுதும் தலைப்பாகை அணியாது செல்வதில்லை. எப்பொழுதும் வெள்ளைக் காற்சட்டையும் குளோஸ் கோட்டும் அணிந்திருப்பார். மேலும் தங்கச் சங்கிலியோடு கூடிய பைக் கடிகாரம் ஒன்று அவரது கோட்டை என்றும் அலங்கரித்துக் கொண்டே இருக்கும். கையில் தங்க மோதிரம் ஒன்றும் ஒளி வீசக் கொண்டிருக்கும். ஓரொருசமயங்களில் உள்ளூர்க் கோவிலுக்குப் போகும்போது மட்டும்தான் வேட்டி உடுத்திக் கொள்வார். அந்த வேட்டியும் சாதாரண வேட்டியாய் இராது. ஒன்றில் சரிகைக் கரையிட்ட வேட்டியாகவோ, பட்டு வேட்டியாகவோ தானிருக்கும். கோவிலுக்கு எப்பொழுதுமே அவர் வெறும் மேலுடன் தான் செல்பவரானதால் வடம் போன்ற பெரிய தங்கச் சங்கிலி ஒன்று அவர் பூரித்த நெஞ்சில் என்றும் புரண்டு கொண்டிருப்பதைக் காணலாம்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவனுக்கு அந்தஸ்தில் நம்பிக்கையில்லாவிட்டலும் தந்தையாரை போல் ஆடை ஆபரணங்களில் அவனுக்கும் விருப்பமுண்டு. தந்தையார் பழைய மோஸ்தரில் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டாரென்றால் மகன் நவீன மோஸ்தரில் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டான்.

தனது ஆடம்பர உடையுடன் ஆறடி உயாமும், கம்பீரமான உருவமும் படைத்த சிவநேசரைப் பார்ப்பவர்கள் யாவருக்கும் அவர் முன்னால் தம்மை அறியாமலே ஒரு வித மரியாதையும் பயமும் ஏற்படும். போதாதற்கு வார்த்தைகளில் அவர் மிகச் செட்டானவர். அத்தியாவசியமிருந்தாலொழிய அவர் பேசுவதேயில்லை. காரில் போய்க் கொண்டிருக்கும் போதோ யாராவது அறிமுகமானவர்களைக் கண்டால் தலையை இலேசாக அசைத்துப் புன்னகை பூப்பார். அந்தப் புன்னகையைப் பெற்றுக் கொண்டவர்கள் "சிவநேசர் தம்மைப் பார்த்துப் புன்னகை செய்தார்" என்று தமது நண்பர்களிடமும் குடும்பத்தாருக்கும் சொல்லக் கூடிய அளவுக்கு அதற்கு என்றைக்குமே ஒரு தனி மதிப்பு இருந்து வந்தது. ஆனால் அவரது மனைவி பாக்கியமோ இதற்கு முற்றிலும் மாறானவள். செல்வத்தின் செழிப்போடு பொலிந்த தோற்றத்துடன் விளங்கிய, அவள் என்றும் கலகலப்பாகவே இருப்பாள். கணவனைப் போலவே அவளும் பொன்னிறமான தோற்றங் கொண்டவள். தந்தையும் தாயும் அப்படி இருந்ததால்தான் மகள் ஸ்ரீதரும் மனத்தை மயக்கும் மன்மதனாகக் காட்சியளித்தாள். வயது நாற்பத்தெட்டாகிவிட்ட போதிலும் பாக்கியத்தின் முகத்திலே ஒரு சுருக்கங்கூட விழ வில்லை. அப்பிள் போல் உப்பியிருந்த அவளது முகத்திலே ஒரு அழகு இன்னும் நர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. சிவநேசர் முகமும் அப்படித்தான் சில காலத்துக்கு முன்னர் இருந்ததாயினும் இரண்டு மூன்று வருடங்களாக அவரைப் பீடித்திருந்த நீரிழிவு நோயும், அவரது வயது ஐம்பதைத் தாண்டி விட்டமையும் இப்பொழுது அவரது முகத்தில் ஓரளவு தளர்ச்சியைக் காட்டவே செய்தன. மேலும் அவரது மீசையும் இப்பொழுது நன்றாக நரைத்துப் போயிருந்தது. சிவநேசர் தன் ஒரே மகன் ஸ்ரீதருக்கு அடுத்தப்படியாகத் தன் மனைவி பாக்கியத்தின் மீது தான் தன் அன்பு முழுவதையும் சொரிந்து வந்தார் என்பது உண்மையேயாயினும், அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவது மட்டும் அவருக்குப் பிடிப்பதில்லை. அது தங்கள் குடும்பத்தின் உயர்ந்த அந்தஸ்திற்குப் பொருந்தாது என்பது அவரது எண்ணம், பல தடவைகளில் அவர் பாக்கியத்தை அதற்காகக் கடிந்து கொண்டது கூட உண்டு.

குடும்பத்தின் அந்தஸ்தைப் பேணுதல் என்ற விஷயத்தில் தனக்குப் பின்னால் தனது ஒரே வாரிசாக, சேர் நமசிவாயம் குடும்பத்தின் குலக் கொழுந்தாகத் தனது பெருஞ் சொத்துகள் எல்லாவற்றையும் அரசாளப் போகும் ஸ்ரீதர் எவ்வித பிழையும் அதில் விட்டு விட மாட்டான் என்பதே சிவநேசரின் எண்ணம். இந்த நம்பிக்கை அவருக்கு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஸ்ரீதர் வெளித் தோற்றத்தில் முற்றிலும் தன்னை உரித்து வைத்தது போல் இருக்கிறான் என்று பலரும் கூற அவர் கேட்டிருந்ததே யாகும். சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் முழு நம்பிக்கை கொண்ட அவர் உருவத்தில் அவ்வித ஒற்றுமை இருக்குமானால பண்புகளிலும் அதே வித ஒற்றுமை இருக்கவே செய்யும் என்று பரிபூரணமாக நம்பினார்.

தன் மகனின் தோற்றம், தலையை நிமிர்த்திச் சிங்க ஏறு போல், அவள் கம்பீரமாக நடந்து செல்லும் முறை ஆகியவை அவரை மிகவும் கவர்ந்திருந்தன. உண்மையில், ஸ்ரீதரின் தனிப் பண்பு போல் விளங்கிய அவனது இராஜ நடை சிவநேசருக்கு அவரது தந்தையார் திரு. கனகசபைப் பிள்ளையின் நடையையும், பாட்டனார் சேர் நமசிவாயத்தின் நடையையுமே ஞாபகமூட்டியது. அதை அவர் மெச்சாத நாளில்லை என்றே கூற வேண்டும். தன் மனைவி பாக்கியத்திடம் கூட "ஸ்ரீதர் நடந்து செல்லும் போது பார்த்திருக்கிறாயா? எங்கள் தாத்தா சேர் நமசிவாயம் போலல்லவா அவன் நடக்கிறான்?" என்று அவர் பல தடவை கூறியிருக்கிறார். இவ்விதம் இயற்கையாகவே தோற்றப் பொலிவைப் பெற்றிருந்த ஸ்ரீதர், தன் அந்தஸ்தைத் தன் வெறும் தோற்றத்தினாலேயே பெற்று விடுவான் என்பது அவரது எண்ணம்.

சிவநேசரின் தோற்றமும் போக்குகளும் மட்டுமல்ல, அவரது பெரிய இல்லமும் பார்த்த வரை மலைக்க வைக்கும் கம்பீரத்துடனேயே விளங்கியது. யாழ்ப்பாணம் பட்டினத்திலிருந்த காங்கேயந்துறை செல்லும் நெடுஞ் சாலையில் பரந்த பெரும் காணியொன்றில் அவரது மாளிகை அமைத்திருந்தது. ஒரு காலத்தில் முதலியார் வளவு என்ற பெயருடன் விளங்கிய அவ்வரண்மனை போன்ற பேரில்லம் சேர் நமசிவாயத்தால் அமராவதி என்ற புதிதாகப் பெயரிடப்பட்டிருந்தது. மாளிகை வாசலில் அப்பெயரும், சேர் கனகசபை நமசிவாயம் நைட் (KNIGHT) என்ற பெயரும், அதன் 2-ம் கனகசபை சிவநேசர்நோ.ஓ.பி.ஈ என்ற பெயரும் பித்தளைத் தகடுகளில் பொறிக்கப்பட்டிருந்தன. அத் தகடுகளின் கீழே தனது மகன் ஸ்ரீதரின் பெயரையும் சீக்கிரம் பொறித்துவிட வேண்டுமென்பது தந்தையின் திட்டமாகும்.

பல ஏக்கர் நிலத்தைக் கொண்ட அப்பெரிய வளவைச் சுற்றிப் பலம் வாய்ந்த மிக உயரமான மதில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அம்மதிலுக்கு மேலே உடைக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் கள்வர்களைத் தடுப்பதற்காக செங்குத்தாகக் குத்தி வைக்கப்பட்டிருந்தன. வளவு பூராவும் தென்னை மரங்களும், வேப்ப மரங்களும், மாமரங்களும் நிறைந்து இருள் நிழலைப் பரப்பிக் கொண்டிருந்தன. அவற்றுக்கிடையே மல்லிகை முல்லைப் பந்தர்களும் பெரிய பூக்கள் பூத்துக் கிடந்த பல ரோஜா செடிகளும் கூடக் காணப்பட்டன. யாழ்ப்பாணக் குடா நாட்டில் கிடையாத அந்நியப் பிரதேச மரங்கள் சிலவும் அங்கு நடப்பட்டிருந்தன. கித்துள் மரம், விசிறி வாழை போன்றவையும் வாசலுக்குச் சமீபமாகக் காட்சியளித்தன. அழகிய வேலைப்பாடுடன் இரும்பினால் செய்த அகன்ற உயரமான கேட்டுகள் வாசலை வழி மறைத்தன. எப்பொழுதும் பூட்டப்பட்டே இருக்கும் அந்தப் பெரிய கேட்டுகளுக்குப் பக்கத்தில் சிறியதொரு வாசல் ஒரு சிறு கேட்டுடன் காணப்பட்டது. அதற்கூடாகவே வேலைக்காரர்களும் மற்றவர்களும் போய் வந்தார்கள். அதற்குப் பக்கத்தில் மரத்தால் செய்த கூடு போன்ற ஒரு சிறு அறையில் காவலாளி இருந்தான். காக்கிக் கோட்டுடன் காணப்பட்ட அவன் முக்கியமானவர்களின் கார்கள் வரும் போது கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே அனுப்புவதும் பின்னே மூடுவதுமாக இருந்தான். ஆனால் சிவநேசரைக் காண்பதற்கு உள்ளே புகுந்து விடுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. முதலில் காவலாளி வந்தவரின் பெயரைத் தெரிந்து கொண்டு உள்ளில்ல டெலிபோன் மூலம் மாளிகைக்குப் பேசி, அங்கே இருந்து பதில் வந்த பின்னர் தான் கதவைத் திறப்பான்.

கேட்டிலிருந்து அகலமான வீதி ஒன்று உள்ளே மாளிகையை நோக்கிச் சென்றது. அதன் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்ற நெடுங் கமுக மரங்கள் வானை நோக்கி வளர்த்திருந்தன. அதன் வழி சென்றால் உயர்ந்த ‘போர்ட்டிக்கோ’வுடன் கூடிய அரன்மணை போன்ற பெரிய வீட்டை அடையலாம். எப்படி சிவநேசரின் ஆடம்பரமான தோற்றம் அவருடன் எடுத்த எடுப்பில் பேசுவதற்கும் கூட, மற்றவர்களைப் பின் நிற்க வைத்ததோ, அப்படியே அமராவதியின் தோற்றமும் அதற்குள் யாரும் அவசரப்பட்டுப் புகுந்து விட முடியாது தடுத்தது. நெடுஞ்சாலையில் சென்றவர்கள் மதிலையும் மரங்களையும் காண முடிந்ததே ஒழிய, அவற்றுக்குப் பின்னால் மறைந்த கிடந்த பெரிய வீட்டைக் காண முடியாதிருந்தது. ஒரு வித மர்மச் சூழல் அந்த வீட்டுக்கு ஒரு தனிக் கம்பீரத்தையும் தனி அந்தஸ்தையும் அளித்தது. "இது தான் சிவநேசர் பிரபுவின் வீடு" என்று அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் அந்த வீட்டைப் பற்றி வீதியில் சொல்லிச் செல்வார்கள். அதனால் வீதியில் அவ்வீட்டிற்குச் சமீபத்தில் இருந்த பஸ்தரிப்புக்குக் கூட சிவநேசர் வீட்டடி என்று பெயர் வந்து விட்டது. பஸ் பிரயாணிகள் பிரயாணச் சீட்டைப் பெறுவதற்கு "சிவநேசர் வீட்டடிக்கு ஒரு டிக்கெட்" என்று கேட்பது அப்பகுதியிலே நீண்ட காலப் பழக்கமாகிவிட்டது.

சிவநேசர் அமராவதி வளவில் அவரது பெரிய இல்லத்தைத் தவிர, ஒரு சிறிய சிவன் கோவிலும், அதற்குப் பக்கத்தில் நீந்திக் குளிப்பதற்கேற்ற ஒரு தடாகமும் கூட இருந்தன. வளவில் பிற்பகுதி சிறிது காடடர்ந்து கிடந்தது. ஏராளமான வாழை மரங்களும் அங்கே நடப்பட்டிருந்தன.**** பாக்கியம் அன்புக்குப் பாத்திரமான இரு புள்ளிமான்களும், ஒரு ஜோடி மயில்களும் எப்பொழுதும் நடமாடிக் கொண்டிருக்கும். பெரிய சீமை மாடுகள் இரண்டைக் கொண்ட பாற் பண்ணையும் அங்கு காணப்பட்டது. பொதுவாக யாழ்ப்பாணக் குடா நாட்டை சூடான **** தேசமென்று சொல்வார்கள். ஆனால் அமராவதி வளவை ஒரு தரம் சுற்றி வந்தவர்கள் அதை நம்ப மாட்டார்கள். ஏனெனில் பாரிய வேப்ப மரங்களும் புளிய மரங்களும், மா மரங்களும் அவ்வளவில் தம் தண்ணிழலை இடையீடின்றிப் பரப்பிக் கொண்டு நின்றதால் அங்கு எப்பொழுதும் குளுமை ததும்பிக் கொண்டிருந்தது. ஒரு புறத்தில் ஒரு சிறிய தாமரைத் தடாகம் கூட காணப்பட்டது. அதில் செந்தாமரை, வெண்டாமரை மலர்களோடு நீலோற்பலமும் , அல்லியும் கூட மலர்ந்திருந்தன. சிறிய வாளை மீன்கள் துள்ளி விளையாடிய மாலை நேரங்களில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ஏதாவது கதைப் புத்தகங்களை வாசிப்பது பாக்கியத்தின் வழக்கம். அப்பொழுது வேலைக்காரி தெய்வானை கொண்டு வந்து கொடுக்கும் உணவு வகைகளை மீன்களுக்கிட்டு அவை அவற்றை உண்பதற்குத் துள்ளி எழுவதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு நல்ல பொழுது போக்காயிருந்தது. ஸ்ரீதர் விடுமுறைகளுக்கு வீட்டுக்கு வரும் பொழுது தாயோடு தானும் அங்கே உட்கார்ந்து மீன்களுடன் விளையாடுவான். நான்கு மாதங்களின் முன்னர் அவன் கொழும்பிலிருந்து வந்த போது ஒரு ஜோடி ஆமைகளை கொண்டு வந்து அக்குளத்தில் விட்டிருந்தான். பாக்கியம் அவற்றை நன்கு கவனித்து வந்தாள். இரண்டு மாதங்களின் முன்னர் ஒரு நாள், ஸ்ரீதர் டெலிபோனில் பேசியபோது அந்த ஆமைகளின் சுகஷேமத்தைப் பற்றியும் விசாரித்திருந்தான். அவற்றை முன்னிலும் பார்க்க மேலும் அதிக அக்கறையோடு இப்போது கவனித்து வந்தாள் பாக்கியம். சிவநேசர் அந்த ஆமைகளுக்கு, இரண்டும் ஆண் ஆமைகளாக இருந்ததால் இராம, இலட்சுமனர் என்று பெயரிட்டிருந்தார். இதை ஸ்ரீதருக்கு அவள் தாயார் டெலிபோனில் சொன்ன போது ஸ்ரீதர் தான் ‘கிஷ்கிந்தா’வாசியானதால் வாலி, சுக்கிரீவன் பெயர்களே தனக்குப் பிடித்தமானவை என்று சிரித்துக் கொண்டு சொன்னான். இதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுரேஷ் டெலிபோனைப் படக்கென்று பறித்து "வேண்டாம். ஸ்ரீதர் சுரேஷ் என்று பெயரிட்டு விடுங்கள். ஏனெனில் இப்பொழுது கிஷ்கிந்தாவில் இருக்கும் வானரங்களின் பெயர்கள் வாலி, சுக்கிரீவன் அல்ல. ஸ்ரீதர் சுரேஷ் என்பதே அவற்றின் பெயர்கள்." என்று கூறிவிட்டான். அதற்குப் பதிலாக பாக்கியம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சிரித்த சிரிப்பு டெலிபோனில் கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸ் வரை கேட்டது!

அமராவதி வளவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது சிவநேசரின் மாளிகை **** மாளிகையில் மொத்தம் இருபது அறைகள் இருந்ததென்றால் அது எத்தகைய பெரிய மாளிகையாக இருக்க வேண்டுமென்று யூகித்துக் கொள்ளுங்கள். சலவைக் கற்களாலும், சித்திர ஓடுகளாலும் அழுகுற அமைந்த விறாந்தைத் தளமும், பெரிய கூடமும் மாளிகைக்கு விசேஷ கவர்ச்சியைத் தந்தன. கதவுகளும் ஜன்னல்களும் மாடிப்படிகளும் தேக்கு மரத்தில் பலவித வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. சேர் நமசிவாயம் காலத்தில் கட்டப்பட்ட அம்மாளிகை மிகவும் கவனமாகப் பரமரிக்கப்பட்டு வந்ததால் இன்றும் புதிது போலக் காட்சியளித்தது. உண்மையில் இது போன்ற அழகிய மாளிகை இலங்கையில் இன்னொன்று மட்டுமே இருந்ததென்றும், அது தென் இலங்கையில் ஒரு சிங்களப் பிரபுவிடனுடையதென்றும், பலர் பேசிக் கொண்டார்கள்.

சிவநேசரை நாம் சந்திக்கும் இன்று காலை, அவர் தமது மாளிகையில் விறாந்தையில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தமது மனைவி பாக்கியத்துடன் உரையாடிக் கொண்டிருகிறார். பாக்கியம் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பக்கத்திலுள்ள சிறிய மேசையிலிருந்த வெற்றிலைத் தட்டிலிருந்த வெற்றிலையைக் காம்பு முறித்துச் சுண்ணாம்பு தடவி வாயிலிடுவதற்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு கட்டம் போட்ட கொர நாட்டுச் சேலையை யாழ்ப்பாணத்துக்கே உரிய பாணியில் பின் கொய்யகம் வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள். சிவநேசரோ வேட்டி கட்டி வெறும் மேலுடன் சாய்வு நாற்காலியில் சாயாது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது செக்கச் செவேலென்ற நெஞ்சிலே தங்கச் சங்கிலி புரண்டு கொண்டிருக்கிறது. நெற்றியிலே சிறிய திருநீற்றுக் கீற்று மின்னுகிறது.

சிவநேசர் பாக்கியத்திடம் "ஸ்ரீதர் விஷயத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும். இன்று அவனோடு டெலிபோனில் பேசி அடுத்த வாரம் இங்கு வரச் சொல்லிவிடு" என்று கூறினார்.

பாக்கியம் "சரி" என்று கூறிக் கொண்டே வெற்றிலையை வாயில் திணித்த வண்ணம் "உங்களுக்கு வெற்றிலை வேண்டுமா" என்றாள்.

சிவநேசர் வேண்டாமென்று தலையை அசைத்து விட்டு, "பாக்கியம், நீ கந்தப்பர் மகள் அமுதத்தைச் சமீபத்தில் பார்த்தாயா? எப்படி இருக்கிறாள்?" என்று கேட்டார்.

பாக்கியம் "அவள் டாக்டர் பரீட்சையில் சித்தியாகிச் சீமையிலிருந்து வந்த அடுத்தக் கிழமை நல்லூர்க் கோவிலில் கண்டேன். அவளுக்கென்ன? நல்ல அழகாய்த் தானிருக்கிறாள். ஸ்ரீதருக்கு நிச்சயம் அவளைப் பிடிக்கும்" என்று பதிலளித்தாள்.

சிவநேசர் அதற்கு "இந்த சம்பந்தம் எனக்கு மிகவும் திருப்தி. முதலாவதாகச் சுழிபுரம் சேர் பாலசிங்கம் குடும்பத்தார் சாதியைப் பொறுத்த அளவிலோ அந்தஸ்தைப் பொறுத்த அளவிலே எங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். பணத்தைப் பொறுத்த வரையில் வேண்டுமானால் குறை சொல்லலாம். ஆனால் பணம் பெரிதல்ல. ஸ்ரீதருக்கிருக்கும் சொத்து பத்துத் தலைமுறைக்குப் போதும். ஆகவே இதை உடனே முடித்து விடுவதுதான் நல்லது" என்றார்.

அதற்குப் பாக்கியம் "ஆனால் எதற்கும் சாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாமா? மற்றப் பொருத்தங்களிலும் பார்க்க அதுதானே முக்கியம்" என்றாள்.

சிவநேசர் "அதை நான் பார்த்து விட்டேன். நேற்றிரவு பண்டிதர் பாரதியிடம் இரண்டு சாதகங்களையும் காட்டினேன். எல்லாம் நல்ல பொருத்தமென்று கூறிவிட்டார் அவர்" என்றார்.

"அப்படியானால் உடனே முகூர்த்தத்தை வைக்க வேண்டியதுதான். இன்று ஸ்ரீதருக்கு டெலிபோன் பண்ணுகிறேன். அவன் கலியாணம் என்றதும் திடுக்கிட்டு விடுவான். அமுதத்தை அவனும் ஒரு தடவை என்னோடு பார்த்திருக்கிறான். நான் அவள் பெயரைச் சொன்னதும் அவன் என்ன சொல்லுகிறான் பார்ப்போம்!" என்றாள் பாக்கியம்.
சிவநேசர் "இந்தக் கலியாணத்தை நான் விரும்புவதற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமிருக்கிறது. அது என்ன தெரியுமா? என்று கேட்டார்.

"என்ன சொல்லுங்கள் கேட்போம்." என்றாள் பாக்கியம்.

"எங்கள் குடும்பத்தின் பெரிய குறைதான் சந்ததிக் குறை. சேர் நமசிவாயம் தாத்தாவின் ஒரே பிள்ளைதான் என் அப்பா. அவரின் ஒரே பிள்ளை நான். எனது ஒரே பிள்ளை ஸ்ரீதர். இப்படி எங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு மேல் பிறப்பது அரிதாகி வருகிறது, பாக்கியம். இதனால் நமது சந்ததி நாளடைவில் முற்றாக மறைந்து போய்விடுமோ என்று கூட நான் பயப்படுவதுண்டு. கந்தப்பர் குடும்பமோ இதற்கு முற்றிலும் மாறானது. அமுதத்துக்குக் கூட ஒன்பது சகோதரர்கள் இருக்கிறார்கள். இன்னும் கந்தப்பருக்குக் கூட ஏழு சகோதரர்கள். அவர்கள் குடுமம் சந்தான விருத்தி நிறைந்த குடும்பம். அப்படிப்பட்ட இடத்தில் சம்பந்தம் செய்தால் ஸ்ரீதருக்கும் நல்ல சந்தான விருத்தி ஏற்படலாம். எப்படியும் ஒரு குடும்பத்தில் ஐந்து குழந்தைகளாவது இருக்க வேண்டுமென்பது எனது எண்ணம்" என்று தன் எண்ணத்தை விளக்கினார் சிவநேசர்.

பாக்கியமோ "பிள்ளைகள் பிறப்பது எங்கள் கை வசமில்லை. அது கடவுளின் கையில்தான் இருக்கிறது" என்றாள்.

சிவநேசர் "மனிதன் தன் கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால் கடவுலால் கூடப் பிள்ளைகளைப் பிறப்பிக்க முடியாது" என்று கூறினார்.

இதற்கிடையில் கேட் காவலாளி அன்றைய கடிதங்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். மொத்தம் பதினைந்து கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் ரெஜினாவின் குண்டு குண்டான எழுத்துகளில் எழுதப்பட்ட தங்கமணியின் மொட்டைக் கடிதமும் ஒன்று.

சிவநேசர் பேச்சை நிறுத்தி விட்டுக் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தார். கடிதங்களில் ஒரு சில வங்கிகளிலிருந்தும், வர்த்தக ஸ்தாபனங்களிலிருந்தும் வந்தவை. ஒன்று ஒரு வாரப் பத்திரிகையின் ஆரம்ப இதழ். சிவநேசர் தமக்குத் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைப் பாக்கியத்திடம் கொடுத்தார். பாக்கியம் வேலைக்காரன் சைமனுக்குக் குரல் கொடுத்தாள். சைமன் அவற்றை சிவநேசரின் கிளார்க் நன்னித் தம்பியின் காரியாலாய அறைக்கு எடுத்துச் சென்றான்.

சிவநேசர் முதலில் கிளிநொச்சியில் தமது வயல்களை மேற்பார்வை செய்யும் செல்லையாவின் கடிதத்தை வாசித்து முடித்தார். தனது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடக்கவிருப்பதாகவும் கல்யாணச் செலவுகளுக்கு ரூபா ஐநூறு தனக்குக் கடனாகக் தந்துதவ வேண்டுமென்றும் அவன் கேட்டிருந்தான். அதை அவர் பாக்கியத்திடம் காட்டிவிட்டு "என்ன செய்யலாம்? சொல்லு" என்றார்.

பாக்கியம் "செல்லையாவின் மகளை உங்களுக்குத் தெரியும் தானே? போன தடவை நாங்கள் கிளிநொச்சிக்குப் போன போது எங்களுக்குத் தேன் போத்தலொன்று கொடுத்தாளே? - அவள். அவளுக்குக் கல்யாணமென்றால் அதற்கு நாம் ஏதாவது கொடுக்கத் தானே வேண்டும். ஆனால் கடனாகக் கொடுக்க வேண்டாம். ரூபா ஐநூறையும் பரிசாகவே அனுப்பி விடுங்கள்" என்றாள்.

சிவநேசர் "அப்படி நாம் பரிசளிப்பதென்றால் ரூபா ஐநூறு போதாது. பத்துப் பதினைந்து வருடங்களாகச் செல்லையா வயல்களைப் பார்த்து வருகிறான். சிறிது அதிகமாக ஆயிரம் ரூபாவாகவே அனுப்பி விடுவோம். அவனுக்கும் மகிழ்ச்சி. அத்துடன் கிளிநொச்சிப் பகுதியில் நமக்கும் நல்ல பெயரேற்படும். அது ஸ்ரீதர் சொத்துகளைப் பாரமெடுத்து நிர்வகிக்கும் பொழுது, அவனுக்கும் நல்ல உதவியாயிருக்கும். மேலும் இந்த மாதிரி விஷயங்களில் நாம் எப்பொழுதும் தாராளமாகவே இருக்க வேண்டும்." என்று கூறிக் கொண்டு "நன்மை விரும்பி" எழுதிய மொட்டைக் கடிதத்தை உடைத்து வாசிக்கலானார்.

சிவநேசர் அதிலுள்ள நான்கு வசனங்களை வாசித்ததும் திடுக்கிட்டுப் போனார். "பாக்கியம், இதோ பார்"- என்று கூறிக் கொண்டு அக்கடிதத்தைத் தன் மனைவியின் கையில் திணித்தார் அவர்.

"நானிங்கே நல்ல இடத்தில் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்க ஸ்ரீதர் அங்கே வேறிடத்தில் மாட்டிக் கொள்ளவா பார்க்கிறான். இதை எப்படியும் நிறுத்தி விட வேண்டும். நானொன்று நினைக்க அவன் வேறொன்று நினைக்கிறான். ஆனால் இதில் அவன் பிழை இல்லை. நாங்கள் தான் அவன் திருமணத்தைத் தாமதித்துவிட்டோம். அமுதத்தை அவனுக்குச் சென்ற ஆண்டே கட்டி வைத்திருக்கலாம். படிப்பு முடியட்டும் என்றிருந்தேன். ஆனால் அது என் தவறுதான். என்றாலும் ஸ்ரீதர் ஒருபோதும் என் பேச்சைத் தட்ட மாட்டான். எதற்கும் விஷயத்தை உடனடியாகத் தீர்த்துவிட வேண்டும். இன்று டெலிபோனில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் வேறு ஏதாவது காரணம் சொல்லி, அவனிடம் நாளையே புறப்பட்டு வரும்படி சொல்லி விடு. அதற்கு அவனால் முடியாவிட்டால் நாங்களிருவரும் நாளை கொழும்புக்குப் புறப்படுவோம்" என்றார் அவர்.

பாக்கியம் "சரி" என்று கூறினாள் என்றாலும் சிவநேசரிடம் "ஒரு கடிதத்தைக் கண்டதும் இவ்வளவு பதை பதைக்கலாமா? நீங்கள் சிறிது யோசித்துப் பார்த்துக் காரியங்கள் செய்ய வேண்டும். எதற்கும் இன்று அவனுடன் டெலிபோனில் பேசி வரச் சொல்லுகிறேன்" என்று கூறினாள்.

சிவநேசரோ மூளை குழம்பி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டார். அச்சமயம் நன்னித்தம்பி தனது காரியாலய அறைக்குள் இருந்து வெளிப்பட்டு, "உங்களைப் பார்க்க அதிகார் அம்பலவாணரும் மனைவியும் வந்திருப்பதாகக் காவலாளி தெரிவிக்கிறான் ஐயா" என்றார்.

சிவநேசருக்கு அதைக் கேட்டதும் சினம் ஏற்பட்டது. "இப்பொழுது என்னால் எவரையும் சந்திக்க முடியாது. வேறு நாளுக்கு வரச் சொல்" என்றார்.

ஆனால் பாக்கியம் உடனே தலையிட்டு, "வேண்டாம் அந்த மனிதன் பதினைந்து மைல் தூரத்திலிருந்து வந்திருக்கிறார். ஒருவரையும் அப்படி அலைகழிக்கக் கூடாது. வரச் சொல்வோம். நீங்கள் உள்ளே போங்கள். நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் ஓர் அரை மணி நேரம் கழித்து வந்து அவர்களைச் சந்தியுங்கள்" என்றாள்.

சிவநேசர் "சரி" என்று கூறிக் கொண்டே விறாந்தையிலிருந்து உள்ளே செல்ல, நன்னித்தம்பி டெலிபோனில் வாசற் காவலாளியிடம் அதிகாரின் காரை உள்ளே அனுமதிக்கும்படி சிவநேசர் உத்தரவிட்டிருப்பதாக அறிவித்தான்.

அதைத் தொடர்ந்து ஒரு சில நிமிட நேரங்களில் அதிகார் அம்பலவாணரின் லொட லொட மோட்டார் கார் போர்ட்டிக்கோவில் வந்து நின்றது. அதிகாரும் வள்ளியாச்சியும் அதிலிருந்து இறங்கினார்கள். பாக்கியம் அவர்களை "வாருங்கள் அதிகார்" என்று வரவேற்றாள்.

விறாந்தையிலுள்ள நாற்காலிகளில் அதிகாரும் மனைவியும் அமர்ந்தார்கள். "எங்கே ஐயா? காணோ¡மே!" என்றார் அதிகார். "அவர் உள்ளே அலுவலில் இருக்கிறார். சிறிது நேரத்தில் வந்து விடுவார்!" என்று கூறிய பாக்கியம் வள்ளியாச்சியுடன் அடுத்து வரவிருந்த செல்வச் சந்நிதித் திருவிழா பற்றி ஏதோ பேச்சுக் கொடுத்தாள்.

அதிகார் ‘போர்ட்டிக்கோ’வுக்குச் சற்றுத் தள்ளி நிலத்தில் பூம்பாவாடை விரித்திருந்த வேப்ப மரத்தின் இலைகளைச் சலசலக்கச் செய்து விறாந்தையை நோக்கி வீசிய குளிர்ந்த தென்றல் காற்றில் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய மனம் சிவநேசரிடம் ஸ்ரீதர் விஷயத்தை எப்படிப் பேசுவது, பத்மாவுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு கூற வேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது. எந்த விஷயத்தையும் எடுத்த எடுப்பில் படாரென்று பேசிவிடும் அம்பலவாணருக்குக் கூட சிவநேசர் முன் அப்படிப் பேசும் துணிவில்லை. வார்த்தைகளை எவ்வாறு அளந்து பேசுவது என்பது பற்றித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார் அவர்.

[தொடரும்]

No comments: