Sunday, July 13, 2008

ஆதிசங்கரரின் 'ஏகசுலோகி' என்பதன் ஆங்கிலவழித்
தமிழாக்கம்!

தமிழில்: அ.ந.கந்தசாமி

பகலில் எந்த விளக்காலே
பார்வை நீயும் பெறுகின்றாய்?
ஐயா அந்த ஆதவனால்
அதனை நானும் பெறுகின்றேன்!

இரவில் எந்த ஒளியாலே
இவண் நீ பார்வை பெறுகின்றாய்?
தீபத்தாலே மின்னலினால்
திங்கள் நிலவால் பெறுகின்றேன்.

தீபம் மின்னல் திங்களினைத்
தெரியக் காண்பதெதனால் நீ!
கண்களிரண்டால் அவை கண்டேன்.
கண்ணே காட்சி காட்டிடுமே!

கண்கள் மூடும் காலையிலே
காண்பதெதனால் காட்சிகளை.
மனதால் அவற்றைக் காண்கின்றேன்.
மனதே கண்ணும் ஆகியதே!

மனமே என்றாய் மனத்தினையே.
மண்ணில் அறிந்தார் யாருளரோ?
நானே மனமாம் நிலமீது.
நானும் மனமும் ஒன்றேயாம்.

மனிதா நன்கே சொன்னாய் நீ.
மங்கா ஒளியும் நீயேதான்!
உன்னால் தானே உலகினிலே
உள்ள வெல்லாம் ஒளியாகும்.


நன்றி: தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967.
அனுப்பியவர்: வ.ந.கிரிதரன்


****



சிந்தனையும் மின்னொளியும்!

- அறிஞர் அ.ந.கந்தசாமி
-


சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -

- அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-
எனக்கு மிகவும் பிடித்த அ.ந.க.வின் கவிதையிது.
-

No comments: