Saturday, October 27, 2007

"மதமாற்றம்"

- அ.ந.கந்தசாமி -

['மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த 'செய்தி' இதழில் எழுதிய சுயவிமர்சனக் கட்டுரையிது.]

சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.

கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.

நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.

நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

'மதமாற்றம்' நாடகத்தின் முதற் சிறப்பு, அது இலங்கையில் சுயமாக எழுதப்பட்ட ஒரு மூல நாடகமென்பதாகும். மேலே நான் கூறிய நாடகங்கள்- சிங்கள நாடகமாகட்டும், ஆங்கில நாடகமாகட்டும் - எதுவுமே இலங்கையில் எழுதப்பட்ட மூல நாடகங்களல்ல. 'கர்ணன் போர்' இதிகாசத்தின் வழி வந்த கர்ணபரம்பரை நாடகம். 'சலோமியின் சபதம்' ஓஸ்கார் வைல்ட் தழுவல். ஆங்கில நாடகங்களிரண்டும் உலகின் பிரசித்தி பெற்ற அன்னிய நாடகாசிரியர்களின் சிருஷ்டிகள். 'நரிபேனா' கிராமியக் கதை. 'ஹரிம படு ஹயக்' இத்தாலிய நாடகாசிரியர் பிரான் டெல்லோ எழுதியது. என்னைப் பொறுத்தவரையில் நாடகம் என்பது எழுத்தும் தயாரிப்பும் சேர்ந்தது. ஒரு மொழியில் சுயமான நாடக இலக்கியங்கள் எழுந்து அவை மேடையில் அரங்கேற்றப்படுவதுதான் சிறப்பு. ஆனால் இதற்கு உலகின் சிறந்த நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுவதை நான் ஆட்சேபிப்பதாக பொருள் கொண்டு விடக் கூடாது. உண்மையில் அவை மூலத்திலுள்ள மாதிரியே இங்கு அரங்கேற்றப்படும்போது நமது நாடக எழுத்தாளர்களுக்கு அவை வழிகாட்ட வல்லனவாய் அமையும். அத்துடன் நமது நாடக ரசிகர்களின் ரசிகப்புலன் வரையும் அவை உதவும் என்பது என் அபிப்பிராயம்.
ஆனால் ஐந்து வேற்று நாடகங்கள் அரங்கேற்றும் பொழுது ஒரு சுயமான நாடகமாவது எழுதி அரங்கேற்றப்படாது விட்டால் நாடகம் இங்கு ஒரு இலக்கியத் துறையாக வளர்வது எப்படி? 'மதமாற்றத்தை'ப் பொறுத்தவரையில் அது சுயமாக எழுதப்பட்ட மூல நாடகம். மூலநாடகமாயிருந்து விட்டால் மட்டும் ஒரு நாடகம் சிறந்ததாகி விடாது. அதில் போதிய நாடகத்தன்மை கொண்ட நாடகக் கதையுண்டா, நல்ல உரையாடல்கள் இருக்கின்றனவா, மனதைத் தாக்கும் கருத்துகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வகையில் 'மதமாற்றம்' நல்ல நாடகமே. அதனால் தான் பல ஆங்கில தமிழ் விமர்சகர்கள் அதை இப்சனோடும், ஷாவோடும், சாட்ரேயோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒப்பிட்டவர்களில் டெயிலி மிரர் 'அர்ஜூனா' , சில்லையூர் செல்வராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். சென்ற வாரம் இலங்கை வானொலியின் ஆங்கில ஒலிபரப்பில் பேசிய கே.எஸ்.சிவகுமாரனும் ஷாவின் 'ஆர்ம்ஸ் அண்ட் மான்' நாடகத்துடன் 'மதமாற்றை'த்தை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இந்நாடகத்தை இலக்கியம் என்ற முறையில் துருவி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருப்பவர் ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய விமர்சகரான கலாநிதி கே.கைலாசபதியேயாவர். 'இதுவே தமிழில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ள மிகவும் சிறந்த காத்திரமான நாடகம் (Serious Play). இவ்வாறு நான் சொல்கையில் தென்னிந்தியாவையும் அடக்கியே கூறுகிறேன்' என்று சமீபத்தில் 'சிலோன் ஒப்சேர்வர்' பத்திரிகையில் தமிழ் நாடக நிலை பற்றி எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிப்பு
ஒரு நாடகம் எவ்வளவு தான் சிறப்புள்ளதானாலும் அது அரங்கில் சிறப்படைவது நடிகர்களாலும் தயாரிப்புத் திறனாலுமே. காவலூர் ராசதுரையின் மதமாற்றம் இந்த வகையில் எவ்வாறு அமைந்திருந்தது? நாடகக்கதையைப் பற்றி எழுதும்போது நாடகத்தை எழுதியவன் நானென்ற காரணத்தினால் மற்றவர்களின் கருத்துகளையேதான் அதிகமாக எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. ஆனால் நடிப்பைப்பற்றி எழுதும்போது இந்தத் தொல்லை எனக்கில்லை. இதில் எனது கருத்துகளை நான் மிகப்பட்டவர்த்தனமாகவே கூறிவிட முடியும்.
கலாநிதி கைலாசபதி தனது ஆங்கிலக் கட்டுரையில் 'மதமாற்றத்'தின் முன்னைய தயாரிப்புகள் பற்றிக் கூறுகையில், அவை தயாரிப்புத்தரம் குறைந்திருந்ததால் முழுப் பொலிவையும் பெற்று மிளிரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். புதிய 'மதமாற்றத்தைப்' பற்றி எவரும் அவ்வாறு கூறுவதற்கில்லை. பல இடங்களில் அது முழுப் பொலிவையும் பெற்றுச் சோபித்ததென்றே சொல்ல வேண்டும். ஆகச் சிறந்த ஆங்கில சிங்கள நாடகங்களுக்குச் சமதையான, சிறந்த நடிப்பை நான் 'மதமாற்றத்தில்' கண்டேன். நடிப்பைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அதிகப் புள்ளிகள் பெறும் தமிழ் நாடகம் இதுதான். நடிகர்களில் என் மனதைக் கொள்ளை கொண்டவர் சில்லையூர் செல்வராஜனே. அர்த்தபுஷ்டியுள்ள வசனங்களை நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டிய பொறுப்பு அவருக்கேற்பட்டது. அதை அவர் மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி விட்டார். இயற்கையான நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்ற பிரமையை எவருக்கும் ஏற்படுத்தத்தான் செய்யும்.

பொதுவாகக் கருத்து நாடகங்களை எழுதும் ஷா போன்ற பெரிய நாடகாசிரியர்களின் படைப்புகளில் சில சமயங்களில் பாத்திரங்கள் மிக நீண்ட பிரசங்கங்களைச் செய்ய ஆரம்ப்பிப்பார்கள். செயிண்ட் ஜோன், பாக்டு மெதுசேலா என்ற அவரது நான்கு மணி நேர நாடகங்களில் நாலைந்து பக்கங்களுக்குச் செல்லும் இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கங்களைக் காணலாம். நல்ல வேளையாக 'மதமாற்றத்'தில் இக்குறையில்லை. எந்த பாத்திரமுமே தொடர்ந்தாற்போல் ஐந்து வசனங்களைக் கூடப் பேசவில்லை. இது செல்வராஜனின் நடிப்புக்கும் பேச்சுக்கும் ஓரளவு உதவி செய்யவே செய்தது. இதனால் தனது கருத்து நிறைந்த வசனங்களை அதிகப் பிரசங்கத் தன என்று தோன்றாமலே பொழிந்து தள்ள முடிந்தது அவரால்.

செல்வராஜனுக்கு அடுத்தபடி என் மனதைக் கவர்ந்தவர் கதாநாயகியாக நடித்த ஆனந்தி. தன்னம்பிக்கையோடு மேடையைத் தன் வீடுபோல் கருதி வசனங்களைக் கொட்டித் தள்ளினார் ஆனந்தி. சபையோரிடையே மிகுந்த பரபரப்பையூட்டிய பாலச்சந்திரன் - ஷீலா சந்திப்பு சீனில், அவர் நடிப்பு மிகச் சோபித்தது. ஆனால் இரண்டோர் இடங்களில் அவர் வசனங்களை மறந்து திண்டாடியதை மட்டும் என்னால் மன்னிக்க முடியாது. நாடகத்தில் நடித்த மற்றையவர்கள் எல்லோருமே தம் தம் பாகங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தனர். சில நடிகர்கள் சிறிய பாகங்களை வகித்ததால், தமது முழு நடிப்புத் திறனையும் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காக எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கு நாடகத்தை யாராலும் எழுதிவிட முடியாதல்லவா?

செட்டுகள்
நாடகத்தின் அடுத்த சிறப்பம்சம் அதன் செட்டுகளாம். அனேகமான தமிழ் நாடகங்களில் ஆர்ப்பாட்டமான செட்டுகளை அமைத்து சபையோரின் கவனத்தை நாடகத்திலிருந்து செட்டுக்குத் திருப்பி விடுகிறார்கள். லடீஸ் வீரமணியின் செட்டுகளில் இக்குறையில்லாதிருந்ததே அதன் தனிச் சிறப்பு. ஆனால் கடைசிக் காட்சியில் ஒளி அமைப்பு பிரமாதமாயிருந்த போதிலும் நாடகத்தின் சுறுசுறுப்பை ஓரளவு குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். பின்னணியைப் பொறுத்தவரையில் லடீஸ் வீரமணியின் 'நாடகத்தின் காவியத்தில்..' என்ற பாரதி பாட்டு அதிக அற்புதமாக இருந்தது.

இயக்கம்
'மதமாற்றம்' டைரக்டர் லடீஸ் வீரமணி ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவரென்றாலும் இந்நாடகமே அவரது மிகசிறந்த தயாரிப்பு என்று நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் அவர் நாடகப் பிரதியை கூடியவரை அடியொற்றிச் சென்றமையும் நல்ல நடிகர்கள் பலர் அவருக்குக் கிடைத்தமையுமேயாகும்.

பொதுவாகச் சொல்லப் போனால் 'மதமாற்றத்தின்' நான்காவது அரங்கேற்றம் அந்நாடகத்துக்கு முன்னில்லாத சிறப்பை அளித்திருக்கிறது. நடிப்புத் துறையிலும் தயாரிப்பிலும் இலங்கையின் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குச் சமமாக விளங்கும் அது, எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கையையூட்டுகிறது. இத்தகைய ஒரு நாடகத்தை தயாரித்தளித்தற்காக தன் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரையைப் பாராட்டுகிறேன்

நன்றி: 'செய்தி' , ஜுலை 3, 1967

No comments: