Saturday, October 27, 2007

நாடகத் தமிழ்!

- அறிஞர் அ.ந.கந்தசாமி -

[அ.ந.க. வின் இக் கட்டுரை 'தமிழோசை' கார்த்திகை 1966 இதழில் வெளி வந்தது. இதன் மறு பகுதி எம்மிடம் இல்லை. யாரிடமாவதிருந்தால் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் தரப்படும். அ.ந.க. வின் சிறுகதைகள் , கட்டுரைகள், கவிதைகள் ஏனைய ஆக்கங்களை வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் வழங்கப் படும். ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.]

முத்தமிழின் முடிவான தமிழ் நாடகத் தமிழ் என்று நாம் பல படப் பேசிக் கொண்டாலும்நாடகத் தமிழ் என்று ஒன்று உண்மையிலேயே கிடையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. இவ்வாறு தமிழில் நாடகத் தமிழில் நாடகம் இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் கூட்டில் நிறுத்தப்பட்ட வழக்கின் எதிரிபோல் நொண்டிசாக்குகள் கூற ஆரம்பித்து விடுகின்றனர் தாமே தமிழின் காவலர்கள் என்று தம்மைப் பற்றித் தவறாகக் கணக்கிட்டு வைத்திருக்கும் ஒருசிலர். பூம்புகாரும் கபாடபுரமும் கடல் கோளுக்காளானதைச் சுட்டிக்காட்டி 'எத்த்னை எத்தனை நாடகங்களைக் கத்துங் கடல் விழுங்கிக்கொண்டதோ?' என்று கூறி நிறுத்தி விடுகின்றார்கள் இவர்கள். இவர்கள் கூறுவதை முழுவதும் உண்மையெனக் கொண்டாலும்கூட கடல் கோள் நிகழ்ந்து இப்பொழுது எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? கடல் கோளுக்கும் இன்றைக்குமிடையில் கழிந்த ஆயிரக்கணக்கான வருடங்களுள் பல மொழிகள் புதிதாக இலக்கணம் வகுத்து புத்திலக்கியங்களும் கண்டு முன்னேறி விட்டன.ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஜந்து நூறு வருடங்களுள் தானே அவ்விலக்கியம் உலகின் தலையாய இலக்கியங்களுள் ஒன்றாக மலர்ந்திருக்கின்றது. நாடகத் துறையில் உலக மகா மேதை ஷேக்ஸ்பியர் வாழ்ந்து மறைந்து நானூறு வருடங்களேயாகின்றன.இந்நிலையில் எப்போதோ நிகழ்ந்த சிலவற்றைக் கூறி நம்மை நாமே ஏமாற்றுதல் கையாலாகாத்தனம். உண்மையென்னவென்றால் தமிழ் மொழியினர் பல்லாயிர வருடங்களாகவே திறனும் ஊக்கமுமற்ற ஒரு சமுதாயாமாக மாறி விட்டனர். தமிழர்களாகிய நாம் இன்றைய சாதனையற்ற வாழ்வின் குறைபாட்டை மறக்கவும் மறைக்கவும் பழம் பெருமை பேசிப் போலி இறுமாப்படைய ஆரம்பித்து விட்டோம். இது இன்று நேற்று ஆரம்பித்த நோயல்ல. பல நூற்றுக்கணக்கான வருடங்களாகவே தமிழர்கள் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள்.

தனிமனிதர்களைப் பொறுத்தவரையில் வாழ்ந்து கெட்டவர்கள், முன் செல்வராயிருந்து பின்னே கீழ் நிலையுற்றவர்கள், தாம் முன்னர் வாழ்ந்த வாழ்வைப் பற்றி எண்ணுவதும் அது பற்றி அகமகிழ்வோடு பேசுவதும் சர்வசாதாரணமான ஒரு நிகழ்ச்சி. இதில் அவர்களுக்கு ஒரு திருப்தி. இவ்வாறு தாம் முன்னர் வாழ்ந்த வாழ்வைப் பற்றிப் பேசுகையில் அதை அவர்கள் சிறிது மிகைப்படுத்திக் கூறுவதும் வழக்கம். உதாரணமாக கிராமத்தில் நூறு ஏக்கர் காணி வைத்திருந்தவன் முழு கிராமமுமே தனக்குத்தான் சொந்தமாயிருந்தது என்று சிறிதும் பொறுப்பற்றுக் கூறி விடுவான். கேட்பவர்களும் "அவன் வாழ்ந்து கெட்டவனல்லவா" என்று அனுதாப உணர்ச்சியால் மறுத்துப் பேச மாட்டார்கள்.

ஆகவே புழுகுப் புராணத்தை அவன் மேலும் விரிவாகச் சாங்கோபாங்கமாக அவிழ்த்து விடுவான். இன்றைய தமிழ் மக்களின் பழம்பெருமைப் பேச்சும் இத்தகையது தான். இத்தகைய போக்கு ஒருவித போதையை மனதில் உண்டாக்குகிறது செயலைத் தடுக்கும் அவ்வித போதையால்தான் தமிழினம் இலக்கிய கலைத் துறைகள் உட்பட எல்லா துறைகளிலும் இன்று பின் தங்கிய நிலயில் இருக்கிறது. இப்போது தெளிந்து நாம் முன்னேற வேண்டுமானால் பொய்களைப் புட்டுக்காட்டி உண்மையை உணர்த்தவல்ல கலை விமர்சகர்கள் நமக்குத் தேவை. நமது அரசியல் இலக்கிய கலை வரலாற்றை அவற்றின் பளபளப்பை நீக்கி நம் முன்னர் நிறுத்தும் துணிவு கொண்ட உண்மை வரல்லாற்று வல்லுனர்களும் , எழுத்தாளர்களும் தேவை. வெறுமனே நிறைகளை மட்டும் பேசி நிம்மதியடையும் மனோபாவத்தை நீக்கி, குறைகளைக் கூறி அவற்றை நீக்க நமக்கு அறைகூவல் விடுக்கும் ஆசிரியர்கள் தேவை. உலக இலக்கிய கலை வளர்ச்சியோடு நமது வளர்ச்சியை ஒப்பிட்டு அவற்றுக்கு இருக்கும் உண்மைத் தாரதம்மியத்தை எடுத்துக் காட்டி இடித்துரைக்கும் எழுத்தும் பேச்சுமே இன்றைய தேவை. இவை இல்லாவிட்டால் நமது போதை தெளியாது. முன்னேற்றம் சித்திக்காது.

ஆகவே எவ்வளவு கசப்பாயிருந்தாலும் நாடகத் தமிழ் என்பது வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். உண்மையில் அப்படி ஒன்றில்லை என்பதை நாம் 'முழுங்கி'க்கொள்வது நல்லது. அதை நாம் அவ்விதம் முழுங்கிக்கொள்வது எதிர்காலத்திலாவது அத்தகைய ஒரு தமிழைத் தோற்றுவிக்க நமக்கு ஊக்கத்தைத்தரும். அத்திசையில் நாம் காலடி எடுத்து வைப்பதற்கும் அது ஏதுவாய் இருக்கும்.

தமிழில் நாடக இலக்கியம் என்பது இல்லாவிட்டாலும் உலக இலக்கியத்தில் நாடகம் மிகவும் பழமைவாய்ந்தது. சுமார் இரண்டாயிரத்து முந்நூறு நாநூறு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க நாட்டிலே அது மிகவும் சிறந்தோங்கியிருக்கிறது. அஸ்கிலஸ் (Aeschylus) சொபோக்கிளிஸ் (Sophocles) அரிஸ்றோ பெனஸ் (Aristophanes) யூரிப்பிடேஸ் (Euripides) என்ற புராதன கிரேக்க புலவர்கள் எழுதிய நாடகங்கள் இன்றும் உலக அரங்கங்களில் ஆடப்பட்டு வருகின்றன. ஏன் இந்தியாவை எடுத்துக் கொண்டால் கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் கவிரத்ன காளிதாசன் சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம் விக்ரம ஊர்வசியம் ஆகிய நாடகங்களை வடமொழியில் எழுதியுள்ளான். இந்நாடகங்களும் இன்னும் வழக்கொழியாது உலக நாடக அரங்குகளில் ஆடப்பட்டு வருகின்றன.

தமிழைப் பொறுத்தவரையில் 'நாடகத்தமிழ்' என்ற பதப்பிரயோகமிருப்பதைப்
பார்த்தால் ஒருகாலத்தில் தமிழிலும் நாடக இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டுமென்று துணிவதற்கு இடமில்லாமலில்லை. ஆனால் அதை வைத்துக்கொண்டே வெறுமனே முத்தமிழ் என்று மார்தட்டிப் பேசுவதில் அர்த்தமில்லை. இன்று இருப்பது இரண்டு தமிழ்தான். இயலும் இசையுமே அவை. நாடகத் தமிழ் இனிமேல் தான் தோன்றவேண்டும்.

வயதால் எடுத்துப் பார்க்கும் போது கிரேக்க இலக்கியமே உலக நாடகத்தின் தாய் எனக்கொள்ளலாம். காளிதாசனுக்கும் அதுவே வழிகாட்டியாயிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு முன் 326 ஆம் ஆண்டளவில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்ததாகச் சரித்திரம் சாற்றுகிறது.அவன் காலம் நாடகக் கலை மன்னர்களான் சொபோக்கிளிஸ் ,அரிஸ்றோ பெனஸ், யூரிப்பிடேஸ் காலத்துக்குப் பிந்தியதே என்பதைக் கவனிக்கும் போது அவனுடன் வந்த ராணுவ வீரர்கள் தமது நாடகக்கலையையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்தனர் என்று அனுமானிப்பதில் தவறில்லை. இந் நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டே பின்னர் வந்த காளிதாசன் போன்றோர் தமது நாடகங்களை எழுதியிருக்க வேண்டும்.ஆனால் இவ்விஷயத்தை ஒரு சில இந்திய வரலாற்றாளர்கள் தமது தேசிய உணர்வு காரணமாக ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் ஜரோப்பாவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினை கிடையாது. முழு ஜரோப்பாவும் ஏகோபித்து கிரேக்க நாடகமே ஜரோப்பிய நாடகக் கலையின் தாய் என்பதைப் பரிபூரணமாக ஒப்புக்கொண்டுள்ளது. இன்றைய உலக நாடக இலக்கியம் ஜரோப்பாவின் வழி வந்ததே. நமது அயல் நாடான இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் இன்று ஏற்பட்டு வரும் நாடகமறுமலர்ச்சிக்கு ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கில நாடகாசிரியர்களே வழிகாட்டிகளாக விளங்குகின்றனர். அமெரிக்க நாடக இலக்கியத்தின் நிலையும் அதுவே. ஆகவே கிரேக்க நாடகம் தான் இன்று உலக நாடகமாகப் பரிணமித்திருக்கின்றது. ஆகவே உலக நாடகத்தின் தோற்றுவாய் கிரேக்கா நாடு என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

தமிழைப் பொறுத்தவரையில் சமீப காலமாக நாடகங்கள் ஆடப்படுவது வழக்கமாகி விட்டபோதிலும் முறையான நாடகம் எதுவும் தமிழில் எழுதப்பட்டு விட்டது என்று சொல்வதற்கில்லை. பம்மல் சம்பந்த முதலியார் மக்களுக்குப் பிடிக்கத்தக்க சில வெற்றி நாடகங்களை எழுதினார் என்பது உண்மை என்ற போதிலும் அவை நாடகத்துக்குரிய இறுக்கமான அமைப்பையோ பாத்திர சிருஷ்டி போன்ற முறையான இலக்கிய அம்சங்களையோ பெற்றவையாக இல்லை. ராவ்பகதூர் சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணியம்' ஒன்றுதான் முறையான தமிழ் நாடகம். இதில் நாடகத்தன்மை கொண்ட கதையமைப்பும், பாத்திர அமைப்பும், உயிரோட்டமுள்ள உரையாடலும் இருக்கின்றன என்றாலும் முற்றிலும் கவிதையாக அமைந்திருப்பதால் இது போதியளவு வெற்றி பெறவில்லை. ஆனால் மேடையில் கவிதை நாடகத்துக்கும் இடமுண்டு. மேலை நாடுகளில் இன்றும் கவிதை நாடகங்கள் அரங்கேறவே செய்கின்றன.'மனோன்மணியமும்' அரங்கேற்றத்தக்க உயரிய கவிதை நாடகமென்பதே எனது அபிப்பிராயம். நாடகாசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களேஇந்நாடகம் மேடைகேற்றதன்று வாசிப்பதற்கே ஏற்றது என்று கூறியிருக்கிறாராம். ஆனால் மனோன்மணியத்தை வாசித்த எவரும் அதை ஒப்புக்கொள்ள முடியாது. எவ்விதம் ஷேக்ஸ்பியர் நாடகமும் , டி.எஸ்.எலியட்டின் நாடகமும் கவிதை நாடகங்களாயினும் மேடைக்கேற்ற நாடகங்களாக விளங்குகின்றனவோ அவ்வாறே 'மனோன்மணியமு'ம் மேடைக்கேற்ற நாடகந்தான் என்பதில் ஜயமில்லை. 'மனோன்மணியத்தின்' இலக்கிய அந்தஸ்த்துக்கு வேண்டுமானால் ஒரே ஒரு குறையை மட்டும் தான் நாம் கூறக் கூடும். ஆங்கிலக்கதை ஒன்றைத்தழுவி எழுதப்பட்ட நாடகமாக அது விளங்குகிறது என்பதே அது. ஆனால் அதைகூட நாடகத்துறையுள் ஒரு குற்றமாகக் கொள்வதற்கில்லை. ஏனெனில் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களும் காளிதாசனின் சாகுந்தலமும் கூட இவ்வாறு அமையப்பெற்றனதானே. சாகுந்தலம் காளிதாசனால் மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைதானே?

என்னைப் பொறுத்தவரையில் 'மனோன்மணியத்'துக்குக் கொடுக்கப்பட வேண்டிய அந்தஸ்து தமிழ் மக்களால் அதற்குக் கொடுக்கப்படவில்லை என்பதே எனது அபிப்பிராயம். 'மனோன்மணியத்தை'க் கவிதை நாடகமாக அரங்கேற்றினால் அதைப்பார்க்க ஆணும் பெண்ணும் கடல்போல் அள்ளுப்பட்டு வரமாட்டார்கள் என்பது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஒரு நாடகத்தின் வெற்றியை நாம் அதைக்கொண்டு அளவிடுதல் கூடாது. இன்று நாடகக்கலை சினிமா போல் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்குக் கலையாக மதிக்கப்படுவதில்லை. சித்திரம், சிற்பம் போல் அது குறிப்பிட்ட ஒரு சாராரின் கலைதான்.சித்திரக் காட்சிக்கோ, சிற்பக்காட்சிக்கோ முழு சமுதாயமும் அள்ளுண்டு வரவில்லை என்று நாம் கவலைப்படுவதில்லையே. அது போலவே, நாடகக் காட்சிக்கும் நாம் எல்லோரும் வரவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. 'மனோன்மணி'யத்தைக் கவிதை நாடகமாக அரங்கேற்றினால் நிச்சயமாக நாடகப்பிரியர்களும் அதற்கு வரவே செய்வார்கள். அவ்விதம் வருபவர்கள்பார்த்து மகிழ்ந்து மெச்சுதற்குரிய முறையில் அரங்கேற்றுதற்குரிய அம்சங்கள் யாவும் அதில் பொருந்தியிருக்கின்றன என்பதே 'மனோன்மணிய'த்தை மிகச்சிறந்த நாடகம் என்று சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு டி.கே.எஸ் சகோதரர்கள், நவாப்ராஜமாணிக்கம் போன்றோர் ஒளவையார், ஜயப்பன் போன்ற நாடகங்களை நடத்திப் பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். சினிமாப் பாணியில் அமைந்த இந்நாடகங்களில் ஓரளவு நல்ல நடிப்பும் இருக்கிறது. இருந்த போதிலும் உண்மையான நாடக இலக்கணத்தின் படி பார்த்தால் இவற்றை நாம் நாடகங்கள் என்று ஏற்பதற்கில்லை. இவை ருசிகரமான மேடைக்காட்சிகள் அவ்வளவுதான். கிரேக்க நாடகங்களை ஆராய்ந்து நாடகத் தன்மைகள் இவை என்று வகுத்துக் கூறிய அரிஸ்றோற்றில் (Aristotle) நாடகத்துக்கு இரண்டு பகுதிகள் அவசியம் என்று குறிப்பிடுகின்றார். அவையாவன சிக்கலை ஏற்படுத்தும் முற்பகுதி, சிக்கல் தீரும் பிற்பகுதி என்பன. காளிதாசனின் சாகுந்தலத்தை எடுத்துக் கொண்டால் அதில் இவ்விரு பகுதிகளும் நன்கு அமைந்திருப்பதைக் காணலாம். சகுந்தலைக்குத் துஷ்யந்தனால் தரப்பட்ட கணையாழி காணமல் போவதால் ஏற்படும் சிக்கல் அதன் முதற்பகுதி. செம்படவர் அதைக்கண்டு எடுத்துத் துஷ்யந்தன் கையில் தர அதனால் அவனது மறதி நோய் தீருதல் சிக்கல் தீரும் பிற்பகுதி. ஒளவையார் நாடகத்தில் இவ்வித நாடக அமைப்பு கிடையாது. அது வெறும் வாழ்க்கை வரலாறு. சில சம்பவங்களின் தொகுப்பு. ஜயப்பன் நாடகமும் இத்தகையது தான். டி.கே.எஸ். சகோதரர்களும் நவாப் ராஜமாணிக்கமும் வெறும் நிகழ்ச்சிக் கோவைகளை நல்ல நடிப்பு , சிறந்த உரையாடல் என்பவற்றின் மூலமும், ஒளி, ஒலி , இசை அமைப்பாலும் இதர மேடை மேடை உத்திகளாலும் நல்ல மேடைக்காட்சியாக மாற்றி இருப்பதைவிட வேறெதையும் சாதித்துவிடவில்லை. இவை உண்மையில் நாடகங்களே அல்ல. எவ்வளவு ருசிகரமாக எழுதப்பட்டாலும் எப்படி ஒரு பிரயாண நூலோ வாழ்க்கை வரலாற்று நூலோ இலக்கியக் கணிப்பில் ஒரு நாவல் அல்லது நவீனமாக முடியாதோ அவ்வாறே எவ்வளவு சிறப்பான மேடைக்காட்சியாக அமைந்த போதிலும் வெறும் சம்பவக் கோவைகள் நாடகங்களாகி விட முடியாது. அவற்றை நாடகம் என்று அழைத்தல் அவ்வார்த்தையைத் துர்ப்பிரயோகம் செய்வதாகும்.

தமிழ் நாடகத்தின் பொதுவான நிலையே இவ்வாறு இருக்கும் போது சமூக நாடகங்கள் எழுதுவதையே ஒரு தனிப்பிரச்சினையாக்கி அதைப் பற்றி எழுதுவது அர்த்தமற்ற படாடோபப் பேச்சாகாதா என்ற ஜயம் என் மனதில் எழத்தான் செய்கிறது. ஆனால் இதற்கு நல்ல மறுமொழியும் நாம் கூற முடியும். தமிழில் நாடகம் இல்லையென்பது உண்மையானால் அவசரப்பணியை மேற்கொள்ளும் போது அது பற்றிய சகல பிரச்சினைளையும் விடுவித்துக் கொள்ளுதல் மிக அவசியமான ஒன்று தான். அந்த வகையில் பார்க்கும் போது சமூக நாடகங்கள் எழுதுவதிலுள்ள பிரச்சினைகள், சரித்திர நாடகங்கள் எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் என்ற ரீதியில் இவற்றை தனித்தனியே ஆராயவேண்டும். அடுத்த இதழில் அப்பிரச்சினைகள் ஆராயப்படும்.

No comments: