வாழ்க்கைக் குறிப்பு
அ.ந.க.வின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ம் நாள் இறந்து விட்டார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.
அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன
அ.ந.க
அளவெட்டி மண்மேல் மிகுந்த அபிமானம் கொண்ட அ.ந.க தன் பெயருக்கு முன் அ.ந. என்னும் ஈரெழுத்துகளைச் சேர்த்துக் கொண்டார் என்பர் சிலர். தனது பெயருக்கு முன்னால் அ.ந. என்று தன்னை அ.ந.க. அழைத்ததற்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றை கூறலாம்.
அளவெட்டி மண்ணின் மேல் கொண்ட பற்றினால் 'அ'வென்பதையும், தந்தையின் மீதான பற்றுதலைக் குறிப்பிட 'ந' என்பதையும் இணைத்து அ.ந.கந்தசாமி என்று தன்னை அ.ந.க அழைத்துக் கொண்டதாகக் கூறுவர் சிலர்.
இலக்கியப் பணி
அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம். மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாக்களில் ஒருவர். ஏனையவர்கள்: தி. ச. வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே.
சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். 1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நாநா' (நாவல்), பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவர்.
சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்ல. ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி க. கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர்.
மரபுக் கவிதை
மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை. நெஞ்சினை அள்ளுபவை. வள்ளுவர் நினைவு' என்னுமவர் கவிதையில்வரும் பின்வரும் வரிகளே அதற்குச் சான்று:
'கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில் கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில் கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை கணக்கில்லா நூல்களெல்லாம் கடலோடு போச்சு! கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக் கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ? '
அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது 'வில்லூன்றி மயானம்' என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்ட அ.ந.க. 'வில்லூன்றி மயானம்' கவிதையில்
'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில் நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக் கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள் நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும் நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க் வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும் வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வ•து' என்று அறைகூவல் விடுத்தார்.
நான் ஏன் எழுதுகிறேன்?
அ.ந.க 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னுமொரு அற்புதமான கட்டுரையொன்றினைத் தனக்கேயுரிய துள்ளு தமிழ் நடையில் எழுதியுள்ளார். அதில் அவர் தனது இளமைக்கால அனுபவங்களையெல்லாம், தான் எழுதுவதற்குரிய காரணங்களையெல்லாம் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையை அவரது மறைவுக்குப் பின்னர் தேசாபிமானி பத்திரிகை அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வெளியிட்டிருந்த சிறப்பிதழில் வெளியிட்டிருந்தது. அப்பதிப்பில் 'போர்ச்சுவாலை அமரச் சுடராகியது' என்று நல்லதொரு ஆசிரியத்தலையங்கத்தினையும் வெளியிட்டிருந்தது. மேற்படி கட்டுரையினை மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையும் மீளப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரைப் பகுதிகள் அ.ந.க.வைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.
பன்முக ஆளுமை
அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை எவ்விதம் தமிழ் இலக்கியப் பரப்பினை ஆட்கொண்டிருந்ததென்பதை அவர் மறைவுக்குப் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைள் கியவற்றில் வெளிவந்த அவர் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், 'நினைவலைகள்' ஆகியன புலப்படுத்துகின்றன. அ.ந.க. மறைவைத் தொடர்ந்து வெளிவந்த அன்றைய ஈழத்துத் தமிழ்த் தினசரிகளைப் பார்த்தால் தெரியும் எவ்வளவுதூரம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் தூணாக அன்று விளங்கினாரென்பதை. இந்நிலையில் இதுவரையில் அ.ந.க. வின் பன்முக ஆளுமையைனைப் புலப்படுத்தும் வகையிலான தொகுப்புகளெதுவும் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது.
அ.ந.க.வின் 'மதமாற்றம்' நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணமே கவிஞர் சில்லையூர் செல்வராசன் தான். அவருக்கும் அ.ந.கவுக்குமிடையிலிருந்த நட்பு நீண்டது. அவர்களது இளமைக்காலத்திலிருந்தே தொடர்ந்ததொன்று. இதுபற்றி அவர் மறைவதற்கு முன்னர் வீரகேசரியில் கூடக் 'கந்தனுடன் சில கணங்கள்' என்னுமொரு கவிதை கூட எழுதியிருந்தார். அவரிடம் மதமாற்றம் மூலப்பிரதியிருந்ததால்தான் அது நூலுருப் பெற முடிந்தது. அது போல் அவரிடம் அ.ந.கவின் .மனக்கண்' மூலப்பிரதியும் இருந்தது. ஆனால் அவற்றைக் கமலினி செல்வராசன் மட்டக்களைப்புப் பல்கலைக் கழகத்துக்கு வழங்கி விட்டதாக அறிகின்றோம்.
அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். செ. கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளார்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.
அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். அவர்களிலொருவர் அந்தனி ஜீவா. அந்தனி ஜீவா 'கலசம்' சஞ்சிகையில் (மாசி 1974) 'நினவின் அலைகள்' என்னும் கட்டுரையில் பின்வருமாறு நினைவு கூர்வார்: "இன்று நான் கலை, இலக்கியம், அரசியல் கிய முத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளேன். இன்று நான் கலை, இலக்கியம் , அரசியல் ஆகிய மூன்று துறைகளிலும் புகழும் பெயரும் பெற்றவர்களால் மதிக்கப்படுகின்றேன். தலை சிறந்த கலா விமர்சகர்களால் எனது பங்களிப்புகளும், படைப்புக்களும் விமர்சிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மூல காரணம் யார்? அ.ந.க என்ற மூன்றெழுத்து. அ.ந.க என்ற மூன்றெழுத்தில் பிரபல்யம் பெற்ற அமரரும் அறிவுலக மேதையுமான அ.ந.கந்தசாமி முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகின்றார். அந்த ஒளியிலே நடை பயின்றவர்கள் கணக்கற்றோர். அவரின் பின்னால் அணி திரண்டோர் ஆயிரம், ஆயிரம். என்னைப் போன்ற எத்தனையோ பேரை அவர் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளார். இன்று அவர் மறைந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரைக்கும் நாம் அவருக்கு என்ன செய்தோம்? இனி வரும் இளைய தலைமுறைக்குக் கந்தசாமியை இனங்கண்டுகொள்ளுமளவுக்கு இலக்கியப் படைப்புகளை அச்சில் வெளியிட்டோமா? அ.ந.க.வுடன் பழகுவதைப் பெருமையாகக் கருதியவர்கள், அவருடன் உறவாடியவர்கள், நண்பர்கள் எனப் பெருமைப்பட்டவர்கள் இன்று காரும், பணமுமாக, வீடும் வளவுமாக அரச துறைகளில் அதிபதிகளாகத் திகழ்கிறார்கள். அந்த நண்பர்கள் நினைத்தால் கந்தசாமி என்ற இலக்கிய மேதையின் படைப்புகளை அச்சில் போட்டிருக்கலாமே?"
தமிழமுது என்னுமோர் சிற்றிதழ் சரவணையூர் மணிசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அது அறிஞர் அ.ந.க மறைந்தபொழுது அவரது படத்தினை அட்டையில் பிரசுரித்து ஆசிரியத் தலையங்கமும் ('அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்' என்னும் தலைப்பில்)எழுதியது. அதில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்.... ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? 'தமிழமுது' அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது."
எழுத்துக்காக வாழ்ந்த அ.ந.கந்தசாமி!
சுதந்திரனில் அ.ந.க.வின் படைப்புகள் 1951/1952 காலகட்டத்தில் வெளிவந்திருக்கின்றன. எழுத்தாளர் காவலூர் ராசதுரையையும் பிரமிக்க வைத்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் 'எழுத்துக்காக வாழ்ந்த கந்தசாமி' என்னும் தினகரன் கட்டுரையில் (தினகரன்; மார்ச் 14, 1968) பின்வருமாறு கூறுகின்றார்:
'ஈழத்து இலக்கிய வரலாற்றிலே 1967ம் ண்டு "கந்தசாமியின் ஆண்டு" என்று சொவது தவறாகாது. 1967இல் 1. சாகித்திய மண்டல ஒழுங்கு செய்த கருத்தரங்குகளிலே கந்தசாமியின் ஆய்வுரைகள் சிறப்பிடம் பெற்றன. நாடகத்துறை பற்றியும் நாவல் பற்றியும் அவர் வாசித்த கட்டுரைகள் முற்போக்கு இலக்கியவாதிகளை மட்டுமல்லாமல், கொள்கை அடிப்படையில் முற்போக்காளர்களைச் சாடியவர்களையும் கவர்ந்தன. தேசிய இலக்கியத்தின் கர்த்தாக்களில் ஒருவரான கந்தசாமி சிறுகதை, நாவல் முதலிவற்றிலே எத்தகைய வசன நடை கையாளப்பெறல் வேண்டுமென்பதுபற்றி வெளியிட்ட கருத்து பலருக்கு வியப்புண்டாக்கிய போதிலும், எவராலும் எதிர்க்கப்படவில்லை. அவருடைய கருத்து வெளியானதன் பின்னர், பிரதேச மொழி வழக்கிலே உரையாடல்களை அமைத்து உருவக்கப்பெற்ர தொடர் நவீனமொன்று, செந்தமிழ் நடையில் புதுக்கி எழுதப்பெற்றதை இக்கட்டுரையாளர் அறிவார்.
2. சாகித்திய மண்டலத்தின் "பா ஓதல்" கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. "கடவுள் என் சோர நாயகன்" என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. "நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?" என்றார் கந்தசாமி.
3. தினகரனில் 'மனக்கண்' என்னும் தொடர் நவீனம் சுமார் ஒன்பது காலம் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானோரை பரவசத்தில் ஆழ்த்தியது.
4. "மதமாற்றம்" என்ற நாடகம் (மூன்றாவதுமுறையாக) அரங்கேற்றப்பட்டதும், "நாடகவிளக்கு" என்று கந்தசாமி வர்ணிக்கப்பட்டதும் 1967ம் ஆண்டிலேயாகும்.
5. வானொலியில் "கலைக்கோல" நிகழ்ச்சியில் மாதந்தோறும் கந்தசாமியின் விமரிசினங்களும், "உலக நாடகாசிரியர்கள்" பற்றிய அறிமுகவுரைகளும் ஒலித்தன. (மொழிபெயர்ப்பு) நாடகம் (கந்தசாமியின் கடைசிப் படைப்பு) ஒலிபரப்பாயிற்று.
6. "வெற்றியின் இரகசியங்கள்" என்ற மனத்தத்துவ நூல் வெளியாயிற்று.
க, நாடகம், கவிதை, நாவல், கட்டுரை யாவற்றிலும் 1967இல் கந்தசாமி தமது ஆற்றலைக் காட்டினார். இவ்வாறு இலக்கியத்துறையின் சகல கிளைகளையும் ஆக்கிரமித்தவரைப்போலக் காட்சியளித்த கந்தசாமி வாழ்ந்தது எழுத்துக்காக; எழுதியது வாழ்க்கைக்காக.'
இவ்விதம் அக்கட்டுரையில் காவலூர் ராசதுரை குறிப்பிட்டுள்ளார். மேற்படி கட்டுரையில் அ.ந.க எவ்விதம் நோய்களுடன் மல்லுக்கட்டியபடியே எழுதிக் குவித்தாரென்பதையும், அவரது எதிர்கால இலக்கிய முயற்சிகள் பற்றியும் மற்றும் அ.ந.க.வின் இறுதிக்கால வாழ்வு பற்றியும் காவலூர் ராசதுரை விபரித்திருக்கின்றார்.
அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் 'நாநா'!
எமிலிசோலாவின் நாவலான 'நாநா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நாநா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ' நாநா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நாநா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
- வ.ந.கிரிதரன் -
No comments:
Post a Comment