Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரண்டாவது முறையாக அரங்கேறவிருந்த "ஈடிப்பஸ் மன்னன்" நாடகத்திற்காகவும் தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஸ்ரீதர் இரண்டு மூன்று தினம் கழித்து டிரைவர் சுப்பிரமணியத்துடன் தனது காரில் யாழ்ப்பாணம் புறப்பட்டான். புறப்படும் முன் வழக்கம் போல் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பரிசுகள் வாங்கத் தவறவில்லை. தாயைப் பொறுத்த வரையில் அவளுக்கு எது பிடித்தமென்பது அவனுக்குத் தெரியும். தென்னிலங்கையில் கிடைக்கும் பொருள்களில் அவளுக்குப் பிடித்தமானது முந்திரிக் கொட்டையும், கித்துள் கருப்பட்டியுமே. அவற்றை வேலைக்காரனை அனுப்பி வாங்காது, தானே புறக்கோட்டைச் சந்தைக்குச் சென்று வாங்கிக் கொண்டான். தந்தையைப் பொறுத்த வரையில் தத்துவ சாத்திரத்தில் அதிக ஈடுபாடுடைய அவர் சில காலமாக நீட்சே என்ற ஜெர்மானிய தத்துவ தரிசகரின் நூல்களையும் கட்டுரைகளையும் தேடித் தேடிச் சேகரிப்பது, அவனுக்குத் தெரியுமாதலால் லேக் ஹவுஸ் புத்தகசாலைக்குச் சென்று அங்கு புதிதாக வந்திருந்த நீட்சே எழுதிய நூல்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

பெரும் பணவசதியுள்ள சிவநேசரரால் இப் புத்தகங்கள் எதையும் நினைத்தவுடன் வாங்கிவிட முடியுமென்றாலும், அன்பு மகன் அவற்றை அக்கறையுடன் விலைக்கு வாங்கிப் பரிசாகக் கொண்டு வரும்போது, அவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஒரு தனி இன்பம் அவருக்கு ஏற்படும் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்திருந்ததே அவன் அவற்றை வாங்கிச் சென்றதற்குக் காரணம். அது போலவே தாய் பாக்கியமும் நினைத்தவுடன் எவ்வளவு முந்திரிக் கொட்டைகளையும் கருப்பட்டியையும் வாங்கிக் கொள்ளக் கூடியவளே என்றாலும் தமது கையிலிருந்து அவற்றைப் பெறும்போது அவற்றின் உருசி அவளுக்கு இரட்டிப்பாய் இருக்கும் என்பது ஸ்ரீதருக்குத் தெரியும். அன்பெனும் பாகில் தோய்த்தெடுத்த முந்திரிக் கொட்டைகள் சுவையில் விருந்தாயிருக்கும் என்பது அவள் அனுபவத்தில் கண்ட உண்மை. வேறெந்தத் தேன் பாகும் அந்தச் சுவையை அவற்றுக்கு அளித்துவிட முடியாது.

ஸ்ரீதர் இவ்வாறு கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்க, ‘அமராவதி’ தனது அருமை வாரிசை வரவேற்பதற்காகத் தடல் புடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. மாதத்திற்கு இரண்டு மூன்று தடவை வந்தால் கூட ஒவ்வொரு தடவையும் சிவநேசரும் பாக்கியமும் அவனுக்கு இராஜ வரவேற்பளிக்கத் தவறுவதில்லை. இம்முறையோ அவன் மூன்று மாதம் கழித்து வீட்டுக்கு வருகிறான். ஆகவே வரவேற்பு ஏற்பாடுகள் மிகவும் அமர்க்க்களமாயிருந்தன.

அவன் வருவதற்கு முதல் நாளே தாய் பாக்கியம் அவனது மாடி அறையை வேலைக்காரரைக் கொண்டு அப்பழுக்கில்லாமல் சுத்தம் செய்வித்து வைத்தாள். அவனது படுக்கைக்குப் புதிய விரிப்புகள் விரிக்கப்பட்டன. தலையணைகளுக்கு அழகான உறைகள் இடப்பட்டன். வெளியே இருந்த ரேடியோ கிராமும், புதிதாக வாங்கப்பட்ட பல இசைத்தட்டுகளும் அவன் படுக்கைக்கு அருகே கொண்டு போய் வைக்கப்பட்டன. இன்னும் படுக்கைக்கு அருகே முக்காலியில் இருந்த டெலிபோன் கிருமி நாசினியால் சுத்திகரிக்கப்பட்டு அத்தரால் வாசனையூட்டி வைக்கப்பட்டது. அறையில் நடுவே அழகான இரத்தினக் கம்பளம் ஒன்றும் விரிக்கப்பட்டது. ஸ்ரீதர் இவற்றை எல்லாம் விரும்பி அனுபவிப்பவன் என்பது அவன் தாய்க்கு நன்கு தெரிந்திருந்ததே அவன் இவ் விஷயங்களில் இவ்வளவு கவனமெடுத்ததற்குக் காரணம். சாதாரணமாக அவன் படுக்கையில் படுத்திருக்கத் தாய் பாக்கியம் கம்பளத்தில் உட்கார்ந்து வெற்றிலையை மென்று கொண்டு அவனோடு உரையாடுவது வழக்கம். அவ்வாறு உட்கார்ந்து பேசுவது அவளுக்கு எல்லையில்லாத ஒரு மன நிறைவைக் கொடுத்தது. ஆகவே இரத்தினக் கம்பளத்தை அவள் விரித்தது ஸ்ரீதருக்காக மட்டுமல்ல. தன் வசதிக்காகவும் தான், இன்னும் ஸ்ரீதர் சித்திரம் வரையும் ‘ஸ்டான்’டையும் ஜன்னலுக்கு அருகே வெளிச்சம் நன்கு விழும் ஓரிடத்தில் வைக்கும் படி ஏற்பாடு செய்தாள். அந்த ‘ஸ்டான்டில்’ அவன் அரை குறையாக எழுதி நிறுத்திய ‘மோகனா’ என்னும் அமராவதி இல்லத்தின் பஞ்சவர்ணக் கிளியின் படத்தையும் அவள் எடுத்து வைத்தாள். ஸ்ரீதர் வந்ததும் அவனிடம் அந்தப் படத்தை எழுதி முடித்துவிடும்படி கூற வேண்டுமென்றும், அதற்குத் தக்க முலாமிட்ட ‘பிரேம்’ போட்டு விறாந்தைகளில் மாட்டி வைக்க வேண்டுமென்பதும் அவள் அவா.

"ஸ்ரீதர் எவ்வளவு கெட்டிக்காரன். என்ன அழகாகப் படமெழுதுகிறான் பார்த்தாயா? அவனைப் போல் தத்ரூபமாகப் படமெழுத யாராலும் முடியாது" என்று வேலைக்காரி தெய்வானையிடம் கூறிய வண்ணமே படத்தில் பட்டிருந்த தூசைத் தன் சேலையின் முன்றானையால் தட்டிவிட்டாள் பாக்கியம்.

வேலைக்காரி தெய்வானை அதைக் கேட்டு "ஆம் அம்மா. நீங்கள் சொல்வது முற்றிலும் மெய். அவர் படமெழுதியதை தான் நேரில் பார்த்திருக்காவிட்டால், இப்படம் மனிதர் கையால் எழுதப்பட்டதென்று யாராவது எனக்குச் சொல்லியிருந்தால் நான் அதை நம்பி இருக்கவே மாட்டேன்." என்று கூறினான்.

"மோகனா"வின் படத்தைப் பார்த்ததும் பாக்கியம் தெய்வானையிடம் "வீட்டின் பின் புறத்திலிருக்கும் மோகனாவைக் கூட்டோடு தூக்கி வா. இங்கே படுக்கை அறையிலேயே தூக்கி வைத்து விடுவோம். ஸ்ரீதர் அறையுள் நுழைந்ததுமே அது அவனை "ஸ்ரீதர்" என்று அழைக்கட்டும். அவனுக்கு அது சந்தோஷமாயிருக்கும்" என்றாள்.

தெய்வானை "அம்மா சரியான வேடிக்கைக்காரி. அத்துடன் மகன் மீது எவ்வளவு அன்பு. அவரை மகிழ்விப்பதற்காக எவ்வளவு ஏற்பாடுகள்" என்று மெச்சினாள்.

"அவனைப் போல் மகனிருந்தால் யாருக்குத்தான் அன்பேற்படாது. அவன் என் மகனாகப் பிறக்க நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்." என்றாள் பாக்கியம். "ஆம் அம்மா, அவரைப் போல் அழகானவரையும் திறமையுள்ளவரையும், அன்புள்ளவரையும் நான் பார்த்ததில்லை. கதையில் வரும் அர்ச்சுனராசா அப்படியிருந்திருப்பாரோ என்னவோ" என்றான்.

ஆனால் பாக்கியம் அறை விஷயத்தை மட்டும் நான் கவனித்தாள் என்பதில்லை. அவனுக்கு வேண்டிய உணவு வகைகளையும் ஏற்பாடு செய்து வைத்தால். கோழி சூப், கருணைக் கிழங்குக் கறி, பொரி விளங்காய் போன்ற அவனுக்குப் பிரியமான உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வைத்தாள். வேப்பம் பூ வடகம், எலுமிச்சங்காய் ஊறுகாய் என்பதையும் போதிய அளவு இருக்கின்றனவா என்று கவனித்துக் கொண்டாள். இன்னும் சீமைச் சொக்கிளேட் வகைகளும், பிஸ்கட்டுகளும், கொக்கோ போன்ற பான வகைகளும் அவளால் அலுமாரியிலிருந்து மேசை மீது எடுத்து வைக்கப்பட்டன. அத்துடன், அடுத்த நாட் காலையிலிருந்து ஸ்ரீதர் வரும் வரைக்கும் அமராவதி வளவின் பெரிய இரும்பு கேட்டுகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென்றும் வாயிற் காப்பாளனுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த நாட் காலையில் வீதியில் சென்றவர்கள் யாவரும் அமராவதி மாளிகைக்கு யாரோ ஒரு முக்கிய விருந்தினர் வருவதாக அறிந்து கொண்டனர். கொழும்பிலிருந்து இலங்கையின் பிரதம நிதியரசர், சிவநேசரின் விருந்தினராக வருவதாகப் பொய்க் கதையொன்றும் வீதியோரத்திலிருந்த தேநீர்க் கடையில் பிறந்து பாவி விட்டது.

பாக்கியத்தின் பரபரப்பைப் பார்த்து சிவநேசரும் ஒரு வகைப் பரபரப்பை அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியத்திடம் ஒரு விஸ்கி போத்தலையும் கிளாஸ்களையும் நல்ல தட்டொன்ற்¢ல் ஸ்ரீதரின் அறையில் வைக்கும்படி கூறினார் அவர்.

"எதற்கு? அவன் தான் குடிக்க மாட்டானே?" என்றாள் பாக்கியம்.

"உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளை என்றால் இப்படிப்பட்ட விஷயங்களிலும் ஓரளவு பயின்றல்லவா இருக்க வேண்டும்? சிறிது குடிப்பது உடம்புக்கும் நல்லது. நானும் அவனைப் போலவே குடிகாரனல்லாவிட்டாலும், அவன் வயதில் ஒரு நாளுக்கு அரை போத்தல் விஸ்கி குடித்து விடுவேனே" என்றார் சிவநேசர்.

"ஆமாம். குடிக்காதவர் தான் நீங்கள். அது தான் அரைப் போத்தல் குடித்தீர்களா. என் மகன் குடிக்கவே மாட்டான்" என்று பாக்கியம் சிவ நேசரைக் கிண்டல் பண்ணிக் கொண்டே விஸ்கி போத்தலைத் தேடிக் கிளம்பிவிட்டாள். இந்த உலகில் சிவநேசரைக் கிண்டல் பன்ணும் துணிவு பாக்கியத்துக்கு மட்டும் தான் இருந்தது. அவளது கிண்டலை அவர் சில சமயம் விரும்பி இரசிப்பதுமுன்று.

பாக்கியம் விஸ்கித் தட்டை ஸ்ரீதர் அறையில் வைத்தது அவன் குடிப்பான் என்ற எதிர்பார்ப்பில் அல்ல, அவன் விரும்பினால் அந்தக் குறைக் கூட அவனுக்கு இருக்கக் கூடாது என்றது அவளது அன்னை உள்ளம்.

ஸ்ரீதர் பகல் பத்து மணியளவில் காரில் வீடு வந்து சேர்ந்தான். மோகனா "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று ஒரே ரகளைப் படுத்திவிட்டது. வேலைக்காரி தெய்வானை கூட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அதைப் பேசும்படி தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதர் மோகனாவுக்குப் பக்கத்தில் சென்று "ஏ! மோகனா என்ன ஒரே கூச்சல்" என்று கூறிக் கொண்டே தான் கொறித்துக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டையிலொன்றை அதன் வாயில் திணித்தாள். மோகனா நிசப்தமாகியது.

தாய் பாக்கியம் " நீ போன முறை மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்யாமல் போனாயல்லவா? அதுதான் அதைப் பூர்த்தி செய்யும்படி சப்தம் போடுகிறது அது" என்றாள்.

ஸ்ரீதர், "ஆமாம் அதைப் பூர்த்தி செய்து, அடுத்த மாதம் நடக்கும் கலைக் கழகப் போட்டிக்கு அனுப்ப வேண்டும். எனக்கு முதலாம் பரிசு கிடைக்கும் அம்மா" என்றான் உற்சாகமாக. அத்துடன் "அம்மா உனக்கு நிறைய முந்திரிக்கொட்டையும் கருப்பட்டியும் வாங்கி வந்திருக்கிறேன். தெய்வானை அவை எல்லாவற்றையும் அம்மாவுக்கு எடுத்துக் கொடு" என்று உத்தரவிட்டான் அவன்.

பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். ஸ்ரீதருக்குச் சமீபமாகச் சென்று "அப்பாவுக்கு என்ன கொண்டு வந்தாய்" என்றாள் மெல்லிய குரலில்.

"புத்தகங்கள். அவர் அறிஞர். உன்னைப் போல் சாப்பாட்டு ராமரல்லவே அவர்" என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் செல்லமாக அவனை அடித்து விடுவது போல் கையை ஓங்கினாள். ஸ்ரீதர் சிரித்து விட்டு, "அம்மா அடிக்காதே. நான் விளையாட்டுக்குச் சொன்னேன்." என்று சொல்லிக் கொண்டே புத்தகங்களை எடுத்துத் தெய்வானை மூலம் சிவநேசர் அறைக்கு அனுப்புவித்தான்.

சிவநேசர் புத்தகங்களின் தலைப்புகளை மட்டும் வாசித்து விட்டு, ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தார். புத்தகங்கள் எல்லாமே அவர் தேடிக் கொண்டிருந்த நீட்சேயின் புத்தகங்கள். அவர் எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நூலொன்றுக்கு அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய துணை நூல்கள் அவை. ஆகவே அவர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

சிவநேசர் ஸ்ரீதரைப் பார்க்க வெளியே வந்தது. அவனுடன் உரையாடி அளவளாவுதற்கல்ல. அவ்வித கலகலப்பான பழக்கம் தான் அவரிடம் எப்பொழுதுமே இல்லையே. அவன் கொழுத்திருக்கிறானா மெலிந்திருக்கிறானா என்பதை நேரில் பார்க்க வெண்டும். அவ்வளவுதான் அவர் எண்ணம். அவர் அதற்காக வெளியே வந்து பார்த்தபோது ஸ்ரீதர் மொனா மொனா என்று காட்சியளித்தது அவருக்கு இன்பத்தையே அளித்தது. நவீன மோஸ்தரில் அமைந்த டீ ஷேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து ஸ்ரீதர் பாக்கியத்துடன் சிரித்துப் பேசி கொண்டிருந்ததைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்தார்.

தந்தையைக் கண்டதும் மகன் அவரை நோக்கித் திரும்பினான். சிவநேசர் மகனைப் பார்த்து "என்ன வீடு மறந்து போய் விட்டதா? மூன்று மாதமாக வீட்டுக்கே வரவில்லையே" என்றார்.

ஸ்ரீதர் பதிலளிக்கவில்லை. புன்னகை செய்து கொண்டு நின்றான்.

சிவநேசர் தொடர்ந்து "சுரேஷ் சீமை போன பிறகு தான் வீடு ஞாபகம் வந்தது போலிருக்கிறது. ஏன் ‘கிஷ்கிந்தா’வில் தனியாய் இருக்கப் பயமாயிருக்கிறதா? பழையபடி பேய் நடமாட்டம் உண்டாகி விட்டதா?" என்றார். கொழும்புக்குப் போய்த் தனியாக வாழத் தொடங்கிய புதிதில் ஸ்ரீதர் தனியாய் இருக்கப் பயமாய் இருக்கிறது என்று தபால் எழுதி டெலிபோனிலும் பேசியதை அவ்வாறு ஞாபகமூட்டினார் அவர்.

"நான் இப்போது பெரியவனாகி விட்டேன். எனக்குப் பேய்க்குப் பயமில்லை" என்று சிறிது அடக்கமாகவே முனகிய ஸ்ரீதர். வாயில் வந்த ஒரு நகைச்சுவை வார்த்தையை அடக்க முடியாதவனாக "இப்போது நான் பேயைக் கண்டு பயப்படுவதில்லை. பேய்க்குத்தான் என்னைக் கண்டு பயம், அப்பா." என்று மெதுவாகக் கூறிவிட்டான். சிவநேசர் சிரித்தார். "சுரேஷ் உனக்கு நன்றாகப் பேசப் பழக்கி விட்டிருக்கிறான். அவன் எவ்வளவு காலம் இங்கிலாந்திலிருப்பான். அவன் மிகவும் நல்ல பையன். அவன் பிரயாணத்தின் போது நீ அவனுக்கு ஏதாவது பரிசளிக்க வில்லையா?" என்றார்.

"பரிசளித்தேன். ஒரு ஜோடி உடுப்பு" என்றான் ஸ்ரீதர்.

"என்ன விலை?" என்றார் சிவநேசர். எங்கே தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாத முறையில் மலிந்த செலவில் ஏதாவது பரிசைக் கொடுத்து விட்டானோ என்று அவர் அஞ்சினார்.

"ரூபா எழுநூற்றைம்பது. வைட்டவேய்ஸில் வாங்கினேன்." என்றான் ஸ்ரீதர்.

"எங்கே மலிந்த பரிசு ஏதாவது கொடுத்துவிட்டாயோ என்று நான் நினைத்தேன். இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் பணத்தைப் பார்க்கக் கூடாது. எங்கள் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார் சிவநேசர் திருப்தியுடன்.

பாக்கியம் "ஸ்ரீதர் சின்னப் பையனல்ல. அவனுக்கு இப்பொழுது இவை எல்லாம் நன்கு தெரியும்" என்று சிபாரிசு செய்தாள் . அவ் வார்த்தைகளுக்காக அன்னையை நன்றியோடு பார்த்து புன்னகை செய்தான் ஸ்ரீதர்.

"பரிசளிக்கப் பணத்திற்கு எங்கே போனாய்? என்னைக் கேட்டிருக்கலாமே" என்றார் சிவநேசர்.

"ஏன்? என்னிடம் பணம் நிறைய இருக்கிறது." என்றான் ஸ்ரீதர்.

"எப்படி?"

"ஏன் என்னுடைய **** மிஞ்சியிருக்கிறது"

"எவ்வளவு?"

"50 அல்லது 60 ஆயிரம் இருக்கலாம்"

"அப்படியானால் நீ பணத்தைச் செலவழிப்பது இல்லையா?"

"எனக்கு என்ன செலவு? சாப்பாடு, பெட்ரோல் எல்லாம் தான் சும்மா கிடைக்கின்றன. புத்தகங்கள் வர்ணங்கள், வெளியே போனால் கைச் செலவு, உடைகள் அவ்வளவு தானே என் செலவு" என்றான் ஸ்ரீதர்.

சிவநேசர் புன்னகை பூத்தார். "நீ எங்கள் குடும்பத்திலேயே பெரிய கருமியாய் வருவாய் போலிருக்கிறது. என்னுடைய இறந்து போன மாமனார் ஒருவர் இப்படித்தானாம். சாகும் போது அவர் தலையணையுள் ஐயாயிரம் தங்கப் பவுன்களை வைத்திருந்தார். ஆனால் ஒன்று. ஒருவன் எவ்வளவுதான் கருமியாயிருந்தாலும் கருமி என்று பெயரெடுக்கக் கூடாது. அதைப் போன்ற அபவாதம் உலகிலேயே வேறு இல்லை. எவனாவது ஒருவன் ஊதாரியாக வாழ்ந்தான் என்று உலகம் ஏசும் போது, அந்த எச்சில் கூட ஒருவித அன்பு தொனிக்கும். ஆனால் கருமியை ஏசும்போது ஒரு புழுவை ஏசுவது போல் ஏசுவார்கள்." என்றார்.

பாக்கியம் "ஸ்ரீதர் கருமியல்ல" என்று இடை மறித்தாள். சிவநேசரும் தம் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

வெளிப்படையாக, சிவநேசர், ஸ்ரீதர், பாக்கியம் ஆகிய மூவரும் இவ்வாறு உல்லாசமாகப் பேசிக் கொண்டாலும் நீரு பூத்த நெருப்புப் போல அவர்கள் எல்லோர் உள்ளத்திலும் ஸ்ரீதரின் திருமணப் பிரச்சினை ஒரு பெரிய பாரமாகவே கிடந்தது. பாக்கியம் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதிலும் அதனை மறப்பதற்கு முயன்றாள். ஸ்ரீதரோ படுக்கையில் சாய்ந்து கொண்டு அடுத்த நாள் நாடக வசனங்களை மனனம் செய்து கொண்டிருப்பதிலும் அதனை மறப்பதற்கு முயன்றான். ஸ்ரீதரோ படுக்கையில் சாய்ந்து கொண்டு அடுத்த நாள் நாடக வசனங்களை மனனம் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே அவன் அவற்றைத் தலை கீழாக மனனம் செய்திருந்தது உண்மையேயாயினும், சிறு தவறுமின்றி மிக நேர்த்தியாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முன்னிலையில் நடிக்க வேண்டுமென்ற பேரார்வத்திலேயே அவன் அவ்வாறு அதில் அதிக கவனம் செலுத்தலானான். பாக்கியத்தின் உத்தரவின் படி ஐஸ் போட்டுக் குளிரச் செய்யப்பட்டிருந்த செவ்விளநீரைத் தெய்வானை உயர்ந்த பெரிய ‘கிளாசில்’ ஊற்றி ஸ்ரீதரின் படுக்கைக்கு அருகே வைத்திருந்தாள். அதை இடையிடையே அருந்தியவாறு ஸ்ரீதர் நாடக வசனங்களை உரக்கப் பேசிப் பழகிக் கொண்டிருந்தான். இடையிடையே கூண்டிலிருந்த மோகனா அவனைப் பார்த்து "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று அழைத்தது. "சப்தம் போடாதே. எனக்கு வேலையிருக்கிறது." என்று விரலை வாயில் வைத்து அதற்குச் சைகை காட்டிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

சிவ நேசர் சிறிது நேரம் நீட்சேயின் கருத்துகளோடு மல்லாடிவிட்டு விஸ்கி அருந்தினார். தோட்டத்தில் உலாவினார். இயற்கை மர நிழலுக்குச் சென்று புள்ளி மன்களுக்கும் மயில்களுக்கும் தம் கையால் உணவு கொடுத்தார். பின்னர் காரியாலய அறைக்குள் சென்று கிளாக்கர் நன்னித்தம்பிக்கு வேலைகள் சொல்ல ஆரம்பித்தார். அப்பொழுதும் ஸ்ரீதரைப் பற்றி மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டிருந்த விஷயங்களும் அதிகார் அம்பலவாணர் கூறிய விஷயங்களும் அவருக்கு ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் நாளை நாடகம் முடித்து வேலைப் பரபரப்புகள் அடங்கிய பிறகு - அதாவது நாளை மறு தினம் இவ்விஷயங்களைக் கவனிக்கலாம் என்றிருந்து விட்டார் அவர்.

ஆனால் அவர் அவ்வாறு நினைக்கச் சுழிபுரம் கந்தப்பர் வேறு விதமாக நினைத்தார். சுழிபுரத்திலிருந்து ‘ட்ரங் கோல்’ போட்டுப் பேசினார் அவர்.

"நாளைக்கு உங்கள் மகன் ஸ்ரீதர் இந்துக் கல்லூரி நாடகத்தில் நடிக்கிறாராமே உண்மைதானா?"

"ஆமாம். நீங்களும் வாருங்கள். நன்றாக நடிக்கிறானாம்"

"நான் வராமலிருப்பேனா. டாக்டரையும் கூட்டி வருகிறேன்."

"டாக்டரா? யாரது?... ஓகோ உங்கள் மகளைக் கூறுகிறீர்களா? சரி. அழைத்து வாருங்கள்... இல்லை... இன்னும் நான் ஸ்ரீதரிடம் பேச வில்லை. எதற்கும் நாளைக்கு நாடகத்தில் சந்திப்போம்."

டெலிபோன் பேசி முடித்த பின்னர் சிவநேசர் எழுந்து சென்று விட்டார்.

அவர் போய்ச் சிறிது நேரத்தில் காரியாலய அறைக்கு ஸ்ரீதர் வந்தான். கிளாக்கர் நன்னித்தம்பி எழுந்து நின்று "தம்பி ஸ்ரீதரா, வாருங்கள்" என்று விநயமாக வரவேற்றார்.

ஸ்ரீதரின் தந்தையின் சுழல் நாற்காலியில் உல்லாசமாக உட்கார்ந்து சுழன்று கொண்டே "நன்னித்தம்பி என்ன புதினம்?" என்று கேட்டான்.

நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு "புதினமா? ஒரு புதினமுமில்லை. என் மகள் சுசீலா பீ.ஏ பாஸ் பண்ணிவிட்டாள். அப்பாவிடம் அவளுக்கு எங்காவது ஒரு வாத்தியார் வேலை பார்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் அவளை நாளை மறு தினம் இங்கே அழைத்து வரும்படி சொல்லியிருக்கிறார். மற்றப்படி உங்கள் புதினம் தான் பெரிய புதினம்?"

"எனது புதினமா? இது என்ன புதுக் குழப்பம்? எனக்கொன்றும் விளங்கவில்லையே. விவரமாய்ச் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

நன்னித்தம்பி, "இல்லை, உங்கள் திருமண விஷயமாகச் சொன்னேன். கந்தப்பசேகரர் மகள் டாக்டர் அமுதாவை உங்களுக்குக் கல்யாணம் பேசி இருக்கிறார் அப்பா. நான் சொன்னேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை இந்துக் கல்லூரி நாடகத்துக்கு உங்களைப் பார்க்க டாக்டர் வருகிறாளாம். இப்பொழுதுதான் அது பற்றிச் சுழிபுரத்திலிருந்து கந்தப்பர் டெலிபோனில் பேசினார்" என்றார் விநயமாக.

"அப்படியா? ஆனால் டாக்டர் பார்ப்பதற்கு எனக்கொன்றும் சுகவீனம் இல்லை...அல்ல.. மறந்து விட்டேன். இரு நாட்களாக கண்ணில் தண்ணீர் வருகிறது. சில சமயங்களில் எரிச்சல் கூட எடுக்கிறது. அதை வேண்டுமானால் டாக்டருக்குக் காட்டலாம்" என்றான் சிரித்துக் கொண்டு.

"நீங்கள் குறும்பாகப் பேசுகிறீர்கள். ஆனால் கண்ணில் சுகவீனமென்பது உண்மைதானா தம்பி? அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். எனது இறந்து போன மைத்துனர் சிவலிங்கத்துக்கு இப்படித்தான் கண்ணில் சுகவீனமாகிப் பின்னர் பார்வையே பழுதாயிற்று. அதற்காகச் சந்திர சிகிச்சை செய்தோம். ஆனால் அச் சந்திர சிக்கிச்சை அவர் உயிரையே கொண்டு போய் விட்டது" என்றார் நன்னித்தம்பி.

"என்ன கண்ணில் சந்திர சிகிச்சை செய்ததால் உயிர் போயிற்றா? நான் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதேயில்லை" என்று ஆச்சரியத்தோடு கூறினான் ஸ்ரீதர்.

அதற்கு நன்னித்தம்பி, "எனக்கும் அப்படிப்பட்ட கண் நோயைப் பற்றியோ சந்திர சிகிச்சையைப் பற்றியோ முன்னர் தெரியாதுதான். அவருக்கு நோய் ஏற்பட்ட பிறகு தான் இது விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். எதற்கும் முன் ஜாக்கிரதையாக டாக்டருக்குக் காட்டுவது நல்லதல்லவா?" என்றார்.

ஸ்ரீதர் "காட்டத்தான் வேண்டும். ஆனால் இந்த லேடி டாக்டருக்கல்ல." என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.

க்¢ளாக்க்ர் அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே வேலையில் மூழ்கினார்.

அன்று மாலை நாலரை மணியளவில் தாயாருடன் சேர்த்து அமராவதி வளவு முழுவதும் சுற்றித் திரிந்ததான் ஸ்ரீதர். மான்கள், மாடுகள், மயில்கள் ஆகியவற்றோடு விளையாடினான். தடாகத்திலிருந்த தாமரைப் பூக்களையும் அல்லியையும் கொய்தான். வளவிலிருந்த கோயிலுக்குப் போய் அங்கிருந்த சந்தனக் கல்லில் தன் கையாலேயே சந்தனத்தை அரைத்துத் தன் நெற்றியில் அழகாகப் பொட்டிட்டுக் கொண்டு அம்மாவின் நெற்றியிலும் பொட்டு வைத்தான்.

தாயார் கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலைப் பற்றி விசாரித்தாள். கோவிலின் தெற்குக் கோபுரத் திருப்பணியைத் தந்தையார் சீக்கிரம் தொடங்கவிருக்கிறாரென்றும் தானும் அப்போது அங்கே வந்து ‘கிஷ்கிந்தா’வில் ஒரு வாரம் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள் அவள். "அந்தக் கோவில் உனது பரம்பரைக் கோவில். அதுதான் இந்த அமராவதி வளவையே எப்பொழுதும் பாதுகாத்து வருகிறது. மணவாள சுந்தரேஸ்வரர் தான் எங்களுக்கு இந்த இலங்கை முழுவதுமே இவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே நீ கோவில் நிர்வாகத்தில் அப்பொழுதும் அக்கறையாயிருப்பதோடு நேரடியாக அதைக் கவனிக்கவும் வேண்டும்." என்றாள் பாக்கியம்.

"ஆம். அப்படியே செய்வேன்" என்று வாக்களித்தான் ஸ்ரீதர்.

பின் தாயும் மகனும் வேலைக்காரி தெய்வானையுடன் ஸ்ரீதர், சுரேஷ் என்ற ஈர் ஆமைகளையும் பார்க்கச் சென்றனர். அவற்றுக்கும் அவற்றோடு வாழ்ந்த மீன்களுக்கும் உணவளித்தான் ஸ்ரீதர். "மிருகங்களுக்கு உணவளித்தல் பெரிய புண்ணியம். கடவுள் எங்களுக்குச் செல்வம் அளித்திருப்பது மனிதருக்கும் மிருகங்களுக்கும் உதவுவதற்காகத்தான்." என்று கூறிய பாக்கியம் ஸ்ரீதரிடம் "கிஷ்கிந்தா"வில் கண்னாடி நீர்ப் பெட்டிகளை வைத்துச் சில மீன்களை வளர்க்கலாமே என்றும் ஆலோசனை கூறினான். அத்துடன் " நீ கொழும்புக்குப் போகும் போது மோகனாவையும் எடுத்துச் செல். அது "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று உன்னை அழைத்துக் கொண்டே இருப்பது உன் நண்பர்களுக்கு வேடிக்கையாயிருக்கும்" என்றும் சொன்னாள் அவள்.

பின்னர் இருவரும் குளத்தின் கட்டில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். ஸ்ரீதர் குழந்தை போல் அம்மாவின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான். "அம்மா என் தலையில் பேனிருக்கிறதா பார்" என்று குறும்பாகச் சொன்னான் அவன். பாக்கியத்துக்கு அவன் தலையில் பேனில்லை என்பது தெரிந்தாலும் பொய்க்குப் பேன் பார்த்தாள். தெய்வானை அதைப் பார்த்துச் சிரித்தாள்.

திடீரென ஸ்ரீதர் "அம்மா, நான் அப்பாவைப் படம் எழுதியிருக்கிறேன். உன்னை எழுதவில்லையல்லவா? இன்றைக்கு எழுதப் போகிறேன்" என்றான்.

பாக்கியத்துக்கும் அது பிடித்தது. "சரி எழுது. நான் எப்படியிருக்கிறேன் என்று படத்தில் பார்க்க எனக்கும் ஆசைதான்" என்றாள் அவள்.

" நான் உன்னை உனது மான்களுடன் ரவிவர்மாவின் சகுந்தலை படம் போல் எழுதப் போகிறேன்." என்றான் ஸ்ரீதர்.

"சகுந்தலை இளம் பெண். என்னை அப்படி எழுத முடியுமா? அது நல்லாயிருக்காது" என்றாள் பாக்கியம்.

"யார் சொன்னது? சகுந்தலை இளம் பெண்ணென்று? அவளும் அவள் மகன் பரதனுக்கு இருபத்து முன்று வயதாயிருக்கும்போது உன் வயசை அடைந்திருப்பாள் தானே? அநேகமாக, அவளும் உன்னைப் போல் உருண்டு திரண்ட, பூசணிக்காயாகத்தான் இருந்திருப்பாள். அப்படி நினைத்துக் கொண்டு நானுன்னைச் சகுந்தலை போலவே எழுதப் போகிறேன்." என்றான் ஸ்ரீதர்.

"ஆனால் பரதனுக்கு இருபத்துமூன்று வயதான பொழுது சகுந்தலை காட்டில் இல்லையல்லவா? ஆகவே மான்களை எழுதக் கூடாது" என்றாள் பாக்கியம்.

"ஏன்? மான்களோடு வனத்தில் வளர்ந்த சகுந்தலை நிச்சயம் அரண்மனையிலும் மான்களை வளர்த்துத்தான் இருப்பாள். துஷ்யந்தன் என்ன எங்க அப்பாவைவிடக் குறைந்தவனா? தன் மனைவிக்கு மான்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்க மாட்டானா?" என்றான் ஸ்ரீதர்.

பாக்கியம் சிரித்தாள். "உன்னோடு என்னால் வாதிட முடியாது. சரி. படத்தை எழுது. எப்படி விருப்பமோ, அது போல் எழுது. ஆனால் ஒன்று. என்னை அதிகம் கிழவியாக எழுதிவிடாதே. வயசைச் சிறிது குறைத்தெழுது" என்றாள் பாக்கியம்.

"ஆ! அப்படியா? எவ்வளவு தூரம் வயசைக் குறைக்க வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்னாக எழுதிவிடட்டுமா?" என்று கேலி செய்தான் ஸ்ரீதர்.

பாக்கியம் "இப்படி நீ என்னைப் பரிகாசம் செய்வதாயிருந்தால் படம் எழுதவே வேண்டாம். நீ அப்பாவின் படத்தை எழுதி விட்டாயல்லவா? நீ அப்பாவின் மகன் தானே? என்னை எழுத வேண்டாம்." என்று கோபித்துக் கொண்டாள்.

ஸ்ரீதர் அதற்கு "இல்லையம்மா. உன்னை எழுதித்தான் தீருவேன். ஆனால் உன் வயசை ஐந்து வயதுக்கு மேல் குறைக்க முடியாது. என்ன சொல்கிறாய்?" என்றான்.

"அது போதும். ஐந்து வயதுக்கு முன் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? நானும் அப்பாவும் அப்பொழுது கவர்னர் மாளிகை விருந்துக்குப் போன போது, அங்கிருந்த வெள்ளைக்கார ஆண்களும் பெண்களும் அப்பாவிடம் என் அழகை மிகவும் புகழ்ந்தார்களாம். என் படம் பத்திரிகைகளில் கூட வெளி வந்தது. நான் அப்பொழுது இன்று போல் கிழவியல்ல" என்றாள் பாக்கியம்.

"என்ன என் அம்மா கிழவியா? யார் சொன்னது? இதோ படத்தை எழுத ஆரம்பிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே படம் எழுதுவதற்கு வேண்டிய பொருள்களைத் தெய்வானையை அனுப்பி எடுத்து வரச் செய்து, படம் வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

படம் எழுத அரம்பித்த சிறிது நேரத்தில் பாக்கியம் வேலைக்காரி தெய்வானையை ஸ்ரீதருக்குத் தேநீரும் தனக்கு வெற்றிலையும் எடுத்து வர அனுப்பி வைத்தாள். இதனால் ஏற்பட்ட தனிமையை உபயோகித்து அம்மாவிடம் பத்மாவைப் பற்றிப் பேசுவதற்குத் தீர்மானித்தான் ஸ்ரீதர்.

"அம்மா, உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். ஆனால் பேச வெட்கமாயிருக்கிறது. என்றாலும் பேச வேண்டிய விஷயந்தான்.." என்று பீடிகை போட்டான் ஸ்ரீதர்.

"எதென்றாலும் பேசு. என்ன விஷயம்? சொல்லு" என்று வினவினாள் பாக்கியம்.

ஸ்ரீதர் தட்டுத் தடுமாறிக் கொண்டு முடிவில் எப்படியோ விஷயத்துக்கு வந்து சேர்ந்தான். ‘அப்பா எனக்குக் கல்யாணம் பேசியிருக்கிறாராமே. அது உண்மையா?" என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான் ஸ்ரீதர்.

"ஆம். அது உனக்கு எப்படித் தெரியும்" என்றாள் பாக்கியம்.

"கொழும்பில் நாதசுரம் வேணுவைச் சந்தித்தேன். வேணு சொன்னான்"

"இதைக் கேட்கத்தானா நீ இவ்வளவு வெட்கப்பட்டாய்? நீ இன்னும் சின்னப் பையன் அல்லவே? கல்யாணம் செய்யும் வயதுதானே? அதுதான் அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்." என்றாள் பாக்கியம்..

"மணப்பெண் யார்?"

"வேணு சொல்லவில்லையா?"

"சொன்னான். கந்தப்பருடைய மகள் அமுதா என்று."

"ஆமாம். அவள் தான். படித்தவள். அழகி. நீயும் அவளும் நல்ல ஜோடி. அவள் அமெரிக்காவுக்குப் படிக்கப் போகு முன் இங்கு பல தடவை வந்திருக்கிறாள். நீ பார்த்திருக்கிறாயல்லவா? இன்னும் அவள் ஒரு லேடி டாக்டர். எல்லா வகையிலும் அவள் உனக்கேற்றவள்."

"அம்மா. எனக்கு லேடி டாக்டர்களைப் பிடிக்காது."

"அப்படியானால் அவளை டாக்டர் வேலை செய்ய வேண்டாமென்று சொல்லிவிட்டால் போகிறது. அவள் சம்பாதித்தா நீ சீவிக்க வேண்டும்? சுந்தரேஸ்வரர் அந்த நிலையில் எங்களை வைக்கவில்லை.

"இல்லை அம்மா. எனக்கு அமுதாவைப் பிடிக்காது. எனக்கு இந்தத் திருமணம் வேண்டவே வேண்டாம் அம்மா"

" நீ அமுதாவிடம் பேசிப் பழகாததால் அப்படிச் சொல்கிறாய். போன மாதம் கீரிமலையில் நான் அவளைச் சந்தித்தேன். மிகவும் இனிமையான குணம். நிச்சயம் அவளை உனக்குப் பிடிக்கும். அது மட்டுமால்ல. அவளுக்கு உன் மீது மிகவும் பிரியம். உன்னுடைய நாடகப் படம் ‘தினகரனி’ல் வெளிவந்ததல்லவா? அதை அவள் வெட்டி ஒட்டி வைத்திருப்பதாக அவளது தாயார் எனக்கு இரகசியமாகச் சொன்னாள். அப்பாவும் அவர்களும் ஏன் நானும் கூடத்தான் இந்தத் திருமணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பர்த்திருக்கிறோம்."

ஸ்ரீதருக்கு விஷயம் தலிக்கு மேல் போய்விட்டது போல் தோன்றியது. திடீரென அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து திகிற் கோலம் தோன்றியது. இருந்த போதிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "அம்மா, அமுதாவிலும் பார்க்க நல்ல மருமகளை நான் உனக்குக் கொழும்பிலே பார்த்து வைத்திருக்கிறேன் . அமுதா எனன அமுதா? அவளை விட எத்தனயோ மடங்கு நல்ல பெண்ணை நான் பார்த்து வைத்திருக்கிறேன்" என்றான் ஸ்ரீதர்.

"என்ன? கொழும்பிலே உனக்கேற்ற பெண்னா? அமராவதி வளவின் அந்தஸ்துக்கேற்ற பெண் கொழும்பில் எங்கே இருக்கிறாள்? இந்த இலங்கை முழுக்கப் பார்த்தாலும் கந்தப்ப்சேகரர் குடும்பத்தை விட எஙகளுக்கு சமமான அந்தஸ்துள்ள குடும்பம் வேறு இல்லை. அவர்கள் கூடப் பணத்தைப் பொறுத்த வரையில் எங்களுக்குக் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே எங்களுடன் சம்பந்தம் செய்யத்தக்கவர்கள்."

"அம்மா, நீ கூறும் அந்த அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை."

"அதற்கென்ன செய்வது? அப்பாவுக்கு அதில் முழு நம்பிக்கை. அதை மாற்ற யாராலும் முடியாது."

"அப்படியானால் நான் பத்மாவைக் கட்ட முடியாதா?"

ஏக்கம் நிறைந்த ஸ்ரீதரின் இவ்வசனத்தைக் கேட்டதும் தாயுள்ளம் ஸ்தம்பித்துவிட்டது. நம்பிக்கை இழப்பதனால் ஏற்பட்ட சோகத்தில் எல்லைக் கோட்டில் நின்று ஒலித்த திகிலும் பயமும் நிறைந்த அந்தப் பரிதாப வார்த்தைகளை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை. ஆம், ஸ்ரீதர் பத்மாவின் மீது கொண்ட முழுக் காதலும் அக்கேள்வியில் அப்படியே எதிரொலித்தது. பத்மா இல்லாத வாழ்வு வாழ்வல்ல, சாவே என்ற முடிவான தீர்மானத்தில் எழுந்த வார்த்தைகள் போல் தோன்றின அவை. சற்றும் எதிர்பாராத வகையில் நம்பிக்கைக் கோட்டைகள் யாவும் இடிக்கப்பட்டவனின் வாயிலிருந்து வெளி வந்த சக்தியற்ற சொற்களாகத் தோன்றின அவை.

பாக்கியம் ஸ்ரீதரின் முகத்தைப் பார்த்தாள். வெளிறிப் போலிருந்த அவன் முகத்தை வேதனை நிறைந்த அந்த நிலையில் அவள் அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை. அவனை அப்படியே அணைத்துக் கொண்டு தேறுதல் கூற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருந்தாலும் மனதைக் கெட்டிப்படுத்திக் கொண்டு "பத்மாவா அது யார்?" என்று ஒன்றுமறியாதவள் போல் கேட்டாள் அவள்.

ஸ்ரீதர் "பத்மா என்னுடன் படிக்கும் ஒரு மாணவி. ஒரு வாத்தியாரின் மகள். அவள் என்னை நேசிக்கிறாள். நானும் அவனை நேசிக்கிறேன். அம்மா, அவளை விட்டு வேறு ஒருவரையும் ஒரு போதும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன். என்னால் அமுதாவைக் கட்ட முடியாதம்மா?" என்றான்.

பாக்கியம், "அப்பா உனது பத்மாவை ஒருபோதும் ஏற்க மாட்டார், ஸ்ரீதர். நீ அமுதாவைக் கட்டுவதுதான் சரி" என்றாள்.

ஸ்ரீதர் "இல்லையம்மா. நீ அப்பாவிடம் பேசு. விஷயங்களை எடுத்துச் சொன்னால் அவர் நிச்சயம் ஒப்புக் கொள்ளுவார். பத்மா மிகவும் நல்லவன். நீ கொழும்புக்கு வந்தால் பத்மாவை ‘கிஷ்கிந்தா’வுக்கு அழைத்து வந்து உனக்குக் காண்பிப்பேன். உனக்கு அவளை நன்றாய்ப் பிடிக்கும். அப்பாவுக்கும் பிடிக்கும். அம்மா, நீ அப்பாவிடம் பேசுவாயா?" என்றான்.

பாக்கியத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கலங்கியிருந்த அவன் கண்களைக் கண்டு அவள் கண்களும் கலங்கிவிட்டன.

"சரி. பேசிப் பார்க்கிறேன். ஆனால் எனக்கென்னவோ இவ்விஷயங்களில் அப்பா விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை." என்றாள்.

இமயமலையை அசைத்தாலும் அசைக்கலாம். ஆனால் சிவநேசர் மனதை மட்டும் இப்படிப்பட்ட விஷயங்களில் அசைக்க முடியாது என்பது பாக்கியத்துக்கு நன்கு தெரியும். எனவே ஸ்ரீதரின் எதிர்காலத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

இன்னும் ஸ்ரீதரின் பேச்சிலே அவனது காதலின் வலிமையும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதுவும் அசைக்க முடியாததாகவே அவளுக்கு பட்டது. சிறிய விஷயங்களில் எல்லாம் அவன் விருப்பபட்டதை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்துப் பழகிய அவள் கல்யாணம் போன்ற பெரிய விஷயத்தில் அவன் மனதுக்கு மாறாக எப்படி நடிப்பது என்றறியாது திக்குமுக்காடினாள்.

நிச்சயம் சிவநேசர் இதில் விட்டுக் கொடுக்க மாட்டார். என்னதான் மென்மை நிறைந்தவனாகக் காட்சியளித்தாலும் ஸ்ரீதரும் அவர் வளர்ப்பில் வளர்ந்தவன்தான். அவனும் இக்காதலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இந்த நிலையில் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ என்று அஞ்சினாள் பாக்கியம். காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தவர்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் ஸ்ரீதரின் உயிருக்காக அவள் அஞ்ச ஆரம்பித்தாள் அவள். தாய் உள்ளம் நடுங்கியது.

அதன் பின் தாயும் மகனும் சிறிது நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீதர் குளக்கட்டில் உட்கார்ந்து ஆமைகளைப் பார்த்தான். அங்கே சுரேசும் ஸ்ரீதரும் ஒன்றுக்கொன்று அருகருகாகக் காணப்பட்டன. இப்பொழுது எனது சுரேசும் அந்தச் சுரேஷைப் போல என் பக்கத்திலிருந்தால் அவனிடம் நான் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டிருக்கலாமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டான்.அவன்.

இதற்கிடையில் நேரம் ஆறு மணியாகி இருந்தது. இரணியனைக் கொன்ற நேரம். இது வரை இயற்கை மர நிழலை மட்டும் நிலவிய இருள் இப்பொழுது நாலாதிசைகளிலும் பார்த்து தாயையும் மகனையும் விழுங்கிக் கொண்டிருந்தது.


[தொடரும்]

No comments: