தொடர்நாவல்: மனக்கண்!
- அ.ந.கந்தசாமி -
18-ம் அத்தியாயம்: இருள் சூழ்ந்தது
அடுத்தநாட் காலை ஸ்ரீதர் படுக்கையை விட்டு எழுந்த போது பகல் பதினொரு மணியாகிவிட்டது. சிறிது கண்ணயர்வதும், மீண்டும் மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுமாக நேரம் போய் விட்டது. பாக்கியம் அவனைப் பத்துப் பதினைந்து தடவை வந்து பார்த்துவிட்டுப் போய் விட்டாள். உடலும் மனமும் சேர்ந்து அவன் கட்டிலில் படுத்திருந்த காட்சி அவளுக்கு மிகவும் பரிதாபமாகத் தோன்றியது. பாவம், எவ்வளவு கலகலப்பாக இருக்க வேண்டியவன் இப்படிச் சோர்வுறும்படி ஏற்பட்டுவிட்டதே என்று வாடிப் போய்விட்டாள் அவள்.
காலையில் சிவநேசர் முதல் நாள் மாலை சூரை மரத்தடியில் தானும் மகனும் செய்து கொண்ட ஏற்பாடுகளைப் பாக்கியத்துக்குச் சுருக்கமாகக் கூறியிருந்தார். அத்துடன் "ஸ்ரீதர் உண்மையில் என் மகன் தான். எங்கள் குடும்ப அந்தஸ்தைத் தான் கெடுக்கப் போவதில்லை என்றும், பத்மாவை, நான் சம்மதித்தாலொழிய தான் திருமணம் செய்ய மாட்டான் என்றும் ஒப்புக் கொண்டுவிட்டான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்திருக்கிறான். தன்னை யாரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தக் கூடாது என்பது தான் அது. பத்மாவின் நினைவை மறக்கும் வரை அவனை நாம் இது விஷயத்தில் அவள் போக்கிலே தான் விட வேண்டும். ஆறு மாதமோ ஒரு வருடமோ போன பிறகு, அவன் மன நிலையை அறிந்து மீண்டும் அவன் திருமணப் பேச்சைத் தொடங்கலாம். இப்போதைக்கு நாம் மெளனமாகவே இருக்க வேண்டும். நாட் செல்ல அவன் எங்கள் வழிக்கு வந்தே தீருவான். மேலும் ஸ்ரீதருக்கு என்ன வயதா போய்விட்டது? இன்னும் இருபத்துமூன்று வயதுதானே நடக்கிறது?" என்று கூறினார் அவர்.
"அப்படி என்றால் இன்று பெண் பார்க்கச் சுழிபுரம் போவதாக இருந்த ஏற்பாடு பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றாள் பாக்கியம்.
"இப்பொழுதே டெலிபோன் பண்ணி ஸ்ரீதருக்கு உடம்பு சுகமில்லை. வேறொறு நாள் பார்க்கலாம் என்று கூறிவிட்டால் போகிறது." என்றார் சிவநேசர்.
சொன்ன மாதிரி காலை எட்டு மணிக்கு முன்னரே சுழிபுரத்துக்கு ‘ட்ரங் கோல்’ போட்டு, பெண் பார்க்கும் ஏற்பாட்டை இரத்து செய்து விட்டார் அவர். கந்தப்பசேகரருக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்ததாயினும் வேறு வழியில்லாததால் ஒப்புக் கொண்டார்.
பாக்கியத்துக்கு ஸ்ரீதர் காலையில் எழுந்து தேநீரோ கோப்பியோ அருந்தாதது அதிக கவலையைத் தந்தது. ஆகவே ஓரிரு தடவை தாயின் வாத்சல்யத்துடன் அவன் நெற்றியையும் தலை மயிரையும் தன் கைகளால் தடவிவிட்டு "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று மெல்ல அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவனோ நித்திரையிலிருந்து எழும்புவதாகக் காணோம். எனவே "சரி தூங்கட்டும். தூக்கத்தைக் கலைக்கக் கூடாது" என்று போய் விட்டாள். பின்னர் நேரம் பதினொரு மணியாவதைக் கண்டதும் இனியும் சாப்பிடாமல் பட்டினியாகத் தூங்கவிடக் கூடாதென்று எண்ணிய அவள் மோகனாவைத் துண்டிவிட்டு "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று அழைக்கும்படி செய்தாள்.
மோகனா "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று பல முறை தன் தத்தை மொழியில் அவனைக் கூப்பிட்டது. ஸ்ரீதர் விழித்துக் கொண்டு "சத்தம் போடாதே மோகனா பேசாமலிரு" என்று கூறினான். பாக்கியம் கட்டிலில் அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டே "ஸ்ரீதர்! மோகனா உன்னைச் சாப்பிடக் கூப்பிடுகிறது. எழுந்து சாப்பிட்டுவிட்டுப் படு" என்று கூறினான். ஸ்ரீதர் பதிலுக்கு ஒன்றும் பேசாமல் தலையணையிலிருந்த தலையைத் தாயின் படிக்கு மாற்றிக் கொண்டான்.
"ஸ்ரீதர், உனக்குப் பிரியமான கருணைக்கிழங்குக் கறியும் கோழி இறைச்சியும் சமைத்து வைத்திருக்கிறேன். எழுந்து சாப்பிடுகிறாயா/" என்றாள் பாக்கியம்.
"சாப்பிடுகிறேன். அது இருக்கட்டும் அம்மா. இன்று நாங்கள் சுழிபுரம் போவதாக இருந்ததே, அது என்ன ஆச்சு?" என்று கேட்டான் ஸ்ரீதர்.
"அதை அப்பா ஒத்தி போட்டு விட்டார்" என்றாள் பாக்கியம், அவனுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கத்துடன்.
"அப்படியா? அது நல்ல செய்திதான்" என்று சொல்லிக் கொண்டே அவன் படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிச் சாப்பிடுவதற்குச் சென்றான்.
சாப்பாட்டு மேசையில் அவன் தாயாரிடம் "அம்மா என் கண் பார்வை சிறிது மங்கி வருகிறது. மேலும், கண்களில் அடிக்கடி எரிச்சல் உண்டாகி வருகிறது. என்னவென்றே தெரியவில்லை. டாக்டரிடம் காட்ட வேண்டும்." என்றாள்.
"அதற்கென்ன? டாக்டர் நெல்சனுக்கு உடனே டெலிபோன் பண்ணி வரவழைக்கிறேன். அவர் நல்ல கண் வைத்தியர், அப்பாவுக்கு நன்கு தெரிந்தவர். போன தடவை அவரிடம் காட்டித்தான் அப்பா கண்ணாடி வாங்கினார்." என்றாள் பாக்கியம்.
அவ்வாறு சொல்லிவிட்டு, சிவநேசர் அறைக்குச் சென்று டாக்டருக்கு டெலிபோன் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, சாப்பாட்டு மேசைக்கு மீண்டும் வந்தாள். ஸ்ரீதருக்குப் பக்கத்திலிருந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து மகனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.
" நேற்று தகப்பனும் மகனும் கல்யாணத்துக்கு ஒரு முற்று எடுத்து விட்டீர்களல்லவா? என்ன ஏற்பாடு" என்று ஒன்றுமறியாதவள் போல் ஆரம்பித்தாள்.
"ஏற்பாடா? அம்மா விசித்திரமான ஏற்பாடு. அப்பாவுக்கு அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்வதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறதாம். அவர் உண்மையைத்தான் சொல்கிறார். என்ன செய்வது? அவர் தம் மனதை அவ்வாறு பயிற்றி விட்டர். இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும். அந்தஸ்துக் குறைந்த இடத்தில் திருமணம் செய்வதில்லை - அப்பாவே தம் மனம் மாறிச் சம்மதித்தாலன்றி நான் பத்மாவைக் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டேன். ஆனால் அப்பாவைப் போன்ற ஓர் அருவருப்பு எனக்கும் இருக்கிறது. அதாவது பத்மாவைத் தவிர வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை நினைத்தாலே எனக்கு ஒரே அருவருப்பாயிருக்கிறது. உண்மையில் உன்னையும் பத்மாவையும் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் கூட எனக்கு எரிசல் ஏற்படுக்கிறது. அம்மா இந்த நிலையில் என்னை வேறெந்தப் பெண்ணையும் திருமணம் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது என்று நான் அப்பாவிடம் கூறிவிட்டேன். அவரும் ஒப்புக் கொண்டுவிட்டர்" என்றான்.
"உன்னையும் பத்மாவையும் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தால் கூட எனக்கு எரிச்சல் ஏற்படுகிறது, அம்மா" என்ற அந்த வசனத்தில் ஸ்ரீதர் பத்மா மீது எத்தகைய அழுத்தமான அன்பு வைத்திருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டாள் பாக்கியம். இவ்வாறு கள்ளங்கபடற்ற தன் மகனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட பத்மா எப்படியிருப்பாள். அவளைப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் கூட அவளுக்கு ஏற்பட்டது. இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற உண்மைக் காதலை நானும் அவருமாக உடைத்தெறிந்து கொண்டிருக்கிறோமே, இது எவ்வளவு பாவம் என்று வருந்தினாள் அவள். இன்னும் பத்மாவையே சதா எண்ணிக் கொண்டு நித்திய பிரமச்சரியாகவெ ஸ்ரீதர் காலத்தைக் கழித்துவிட்டால் "அமராவதி" வளவு தன் தொடர்ச்சியை இழந்து மறக்கபட்டுவிடுமோ என்றும் பயந்தாள் அவள். காலமும் மாவிட்டபுரம் கந்தசாமியும்தான் ஸ்ரீதரின் மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணிய அவள், ஒரு நல்ல சாஸ்திரியாரிடம் ஸ்ரீதரின் சாதகத்தைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
"நேற்று நீயும் அப்பாவும் பேசச் சென்ற போது நான் மிகவும் பயந்து விட்டேன். அப்பா சிங்க லக்கினக்காரர். தான் பிடித்ததை ஒரு போதும் விட மாட்டார். அவரை எதிர்த்து வெல்ல இந்த உலகத்தில் யாராலும் முடியாதும். நீயும் அப்படித்தான். நீயும் சிங்க லக்கினக்காரன். ஆகவே சண்டை போட்டுக் கொள்வீர்களோ என்று பயந்தேன். ஆனால் ஆண்டவன் காப்பாற்றி விட்டான்" என்று ஸ்ரீதரிடம் கூறினாள் அவள். இடையிடையே "கோழிக் கறி ருசியாயிருக்கிறதா?" என்று கேட்டு வைத்தாள். "இன்றைக்கு ஒன்றுமே ருசிக்கவில்லையம்மா. இனிமேல் எனக்கு எந்தக் கறியுமே ருசிக்காது." என்று கையை அலம்பிக் கிளம்பிச் சென்றான் அவன். அவன் முகத்தை இருள் கப்பியிருந்தது.
அதன் பின் பாக்கியம் சிவநேசரைத் தேடிப் புறப்பட்டாள். அவர் தமது நூல் நிலையத்தில் ஏராளமான புத்தகங்களை மேசையில் பரப்பி வத்துவிட்டு எதிலும் மனம் செல்லாதவராய் உட்கார்ந்திருந்தார். பாக்கியம் அங்கிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டே " நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அவனைக் கசக்கிப் பிழிந்துவிட்டீர்கள். அவ்வளவுதானே உங்களுக்குத் தேவையாயிருந்தது" என்றாள். பாக்கியத்தின் சொற்களிலே அவள் அடக்க முயன்று கொண்டிருந்த அவளது எல்லையற்ற கோபம் தெரிந்தது.
சிவநேசர் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு "பாக்கியம் நீ அநாவசியமான சொற்களைப் பேசி என் மனதைத் துன்புறுத்தாதே. என்னை என் பாட்டில் விட்டு விட்டுப் போய் விடு. என் மனதின் வேதனை உனக்குச் சிறிதும் தெரியவில்லையே" என்றார்.
‘அமராவதி’ வளவை இவ்வாறு அன்று காலையிலிருந்து சூழ்ந்து கொண்டிருந்த இருள் அன்று மாலை மேலும் மோசமாகியது. பிரபல கண் வைத்தியர் டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களைப் பரிசோதித்து விட்டு, சிவ நேசரிடம் கூறிய வார்த்தைகளே அதற்கும் காரணம்.
டாக்டர் நெல்சன் இலங்கையில் மிகச் சிறந்த கண் வைத்தியர் என்று புகழ் பெற்றவர். கண் வைத்தியத் துறையில் அவருக்குச் சமமான பட்டமும் படிப்பும் பெற்றவர் இன்னொருவரே இலங்கையில் இருந்தார். கொழும்பு கண்ணாஸ்பத்திரியின் பிரதான வைத்தியரே அவர்.
டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களைப் பரிசோதித்துவிட்டு வேடிக்கையாக, ‘ஸ்ரீதர், கண்ணில் உனக்கு இப்படி நோய் வரக் காரணமென்ன? பெண்களைப் பார்த்து அதிகமாக கண்ணடிப்பதுண்டோ?" என்றார். மற்ற நேரங்களில் என்றால் ஸ்ரீதர் இதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்திருப்பான். ஆனால் அன்று அவன் சிரிக்கக் கூடிய மன நிலையில் இல்லை.
பரிசோதனையில் டாக்டர் நெல்சன் சிவநேசருடைய அறையில் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
"ஸ்ரீதருக்குக் கண்ணில் ஏற்பட்டிருக்கும் நோய் மிகவும் பயங்கரமான ஒரு நோய். இரண்டு கண்களிலும் ஒரே மாதிரி நோய் கண்டிருக்கிறது. மிகவும் அரிதாகவே ஏற்படும் இந்நோய்க்குச் சந்திர சிகிச்சை செயய வேண்டுமென்றாலும் அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இன்னொன்று, இந்நோய் அவன் கண்கள் இரண்டையும் குருடாக்குவதையும் தடுக்க முடியாது. அநேகமாக அவன் கண் பார்வை இன்னும் ஒரு மாதம் கூட நீடிக்குமோ என்பதே சந்தேகம்." என்றார்.
சிவநேசர் திகைத்துவிட்டார். "என்ன, உண்மையாகவா மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றாவது அவனுக்குச் சிகிச்சை செய்ய முடியாதா? நீங்கள் சொல்வது என்னைத் திகிலடைய வைக்கிறது, டாக்டர்" என்றார்.
அதற்கு டாக்டர் நெல்சன் தம் தலையை இலேசாக அசைத்தார். "ஸ்ரீதரை மேல் நாடுகளுக்குக் கொண்டு செல்வதால் நன்மை ஏற்படும் என்று நான் நம்பவில்லை. இதே நோயுற்ற இன்னோர் இளைஞனை நான் அறிவேன். இந்நோய் நரம்புகளோடு சம்பந்தமுடையது. சிகிச்சையை அதிகம் செய்யப் போவதால் நாம் அவனுக்கு இன்னும் அதிக கேட்டை உண்டாக்கிவிடலாம். அதனால் இது பற்றி ஒன்றும் செய்யாதிருப்பதே நல்லது. கண்ணில் ஏற்பட்டுள்ள எரிச்சல், நோவு முதலியற்றைக் குறைப்பதற்கு மட்டும் வேண்டுமானால் மருந்து கொடுக்கலாம். வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை."
இவ்வாறு கூறிச் சில மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு டாக்டர் போய்விட்டார். சிவநேசர் பாக்கியத்திடம் விஷயத்தைக் கூறினார். அவள் பயந்து போய்விட்டாள். "ஸ்ரீதர் குருடாவதா? கடவுள்தான் அவனைக் காப்பாற்றவேண்டும்." என்று தனக்குத் தெரிந்த தெப்பங்கள் எல்லாவற்றுக்கும் நேர்த்திக் கடன் வைத்தான் அவள்.
அமராவதி வளவில் இவை நடந்து கொண்டிருக்க கொழும்பு கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 48/3 இலக்க வீட்டில் பத்மா என்ன நினைவில் இருந்தாள் என்பதைப் பார்ப்போம்.
ஸ்ரீதரும் பத்மாவும் கால்பேசில் மழை நீராடி இப்பொழுது பத்து நாட்களாகியிருந்தன. அவள் ஸ்ரீதரிடமிருந்து ஏதாவது செய்தி வருமென்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "ஸ்ரீதர் என்னை மறந்து விட்டனா" என்று கூட அஞ்சினாள் அவள். "ஒரு வேளை நான் முதலில் அஞ்சியது போலவே அவள் என்னை மோசம் செய்து விடுவானா" என்று கூட எண்ணினாள் அவள்.
தினசரி பல்கலைக் கழகத்தில் அவனைச் சந்திக்கும் இடத்தைக் கடந்து செல்லும் போது அவள் உள்ளம் வேதனைப்பட ஆரம்பித்தது. தனிமை நோய் அவளைக் கொன்றது. ஸ்ரீதருடன் சிரித்துப் பேசி அவன் விரல்களைப் பற்றி விளையாடுவதும், வசதியான இடங்களில் இலேசாக அவனுடன் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதுமாகச் சென்று இரண்டு மூன்று மாதங்களாக அவள் அனுபவித்து வந்த காதல் வாழ்வு திடீரென நின்று போனதும் அவள் வாழ்க்கையே உப்புச் சப்பற்றதாகத் தோன்றியது அவளுக்கு. அழகனான ஸ்ரீதரின் அணைப்பிலே அவளுக்கு வழக்கத்தில் பொழுது போவதே தெரிவதில்லை. ஆனால் இப்போது அந்த அணைப்புகளும், வேடிக்கைப் பேச்சுகளும், காதல் மொழிகளும் நின்று போக, அவளுக்கு நேரம் போக மாட்டெனென்றது. நேரத்தைப் போக்குவதற்கு என்ன செய்வதென்றறியாது மயங்கினாள் அவள். தான் அனுபவித்து வந்த இன்பம் இப்படித் திடீரென நின்று போகும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. உண்மையில் ஸ்ரீதரின் சேர்க்கை அவளுக்கு ஓர் உள்ளத் தேவையாக மட்டுமல்ல ஓர் உடல் தேவையாகவே ஆகியிருந்ததால், அது இல்லாது போகவே "வயல் மீது தண்ணீர் வற்றி வாடுகின்ற நெற் பயிர் போல்" வாடி வதங்க ஆரம்பித்தாள் அவள். பல்கலைக் கழகத்துக்குப் போகும் வழியிலும் வரும் வழியிலும் காதல் ஜோடிகளை அவ்வப்பொழுது காணும் நேரங்களிலெல்லாம் தாங்கொணாத விரக தாபம் அவளைப் பீடிக்க ஆரம்பித்தது. காதற் கதைகளை வாசிக்கும்போதும், சினிமா விளம்பரங்களில் ஆடவர், அரிவையர் கட்டியணையும் காட்சிகளைக் காணும்போதும் அவளை அறியாமலே உள்ளத்தில் ஒரு தீ எரிவது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அந்தத் தீயை அணைக்க முடியாது தத்தளித்த அவள் மனதிலே கமலநாதன் அடிக்கடி தோன்றலானான்.
கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருடன் சேற்றில் புரண்டு விளையாடிய நிகழ்ச்சியை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்ட அவள், ஸ்ரீதர் எவ்வளவுதான் நல்ல காதலனாயிருந்த பொதிலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்பம் அனுபவைக்கத் தெரியாத ஓர் அப்பாவியாகவே அவளுக்குக் காட்சியளித்தான். பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் உலக வாழ்வின் மர்மங்களை இன்னும் முற்றாக அறிந்தவளல்ல. ஆனால் அவற்றை அறிவதற்கு உள்ளமும் உடலும் துடித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரணப் பெண்ணே அவள். அவளால் ஸ்ரீதரின் அமைதியான போக்கைச் சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்விதமான மன நிலையில் அவள் புழுங்கிக் கொண்டிருந்த போதுதான் கமலநாதனின் சகோதரிகளான விமலாவும் லோகாவும் அன்று காலை அவள் வீட்டுக்கு வந்தார்கள். தந்தை பரமானந்தர் வீட்டிலே இல்லாததால் விமலாவும் லோகாவும் ஒரே கும்மாளம் போட்டார்கள்.
விமலா பத்மாவிடம் "டீச்சர், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் முனிசிப்பல் விளையாட்டுச் சங்க ஆண்டு விழாவில் நடனமாடுவதற்காக நான் ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட் நடனமெல்லாம் பழகியிருக்கிறேன்.’ என்று ஜம்படித்துக் கொண்டாள். லோகாவோ விமலாவை விட நான் தான் நன்றாய் ஆடுவேன். "ஆடிப் பார்ப்போமா?" என்று அறை கூவல் கூட விடுத்துவிட்டாள்.
பின்னர் விமலாவும் லோகாவும் பத்மாவுக்குத் தமது நடனங்களை ஆடிக் காட்டினர். அவர்கள் துள்ளிக் குதித்துப் போட்டிப் போட்டு ரொக்-இன்-ரோல் நடனமாடியதையும், நெளிந்து நெளிந்து டுவிஸ்ட் நடனம் செய்ததையும் பத்மா மெச்சினாள். "டீச்சர், நீங்களும் ஆடுங்கள். ஆண்டு விழாவுக்கு நீங்களும் வருகிறீர்களல்லவா? அங்கே எல்லோரும் நடனமாடும் போது நீங்கள் மட்டும் பொம்மை போல் ஆடாமலிருந்தால் உங்களை அசல் பட்டிக்காடென்றல்லவா நினைப்பார்கள்?" என்றாள் விமலா. பத்மாவுக்கும் அது சரியாகவே பட்டது. இன்றைய சமுதாயத்தில் மதிப்போடு வாழ்வதற்கு இவற்றை எல்லாம் பயிலவே வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. ஆகவே லோகா கூறியது போலவே கொட்டாஞ்சேனை தேவாலயத்துக்குப் பின்னாலிருந்த மிஸ் ரோஸ்மேரி டீ வுட்டென்னும் பறங்கிப் பெண்ணிடம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக நடனப் பாடங்கள் பெற ஆரம்பித்தாள் அவள்.
ரோஸ்மேரி டீ வுட்டின் இல்லம் ஓர் உல்லாசபுரியாகவே பத்மாவுக்குத் தோன்றியது. பகல் இரவு என்றில்லாமல் எப்பொழுதும் நடன வகுப்புகள் அங்கே நடந்து கொண்டிருந்தன. பால்ரூம் நடனம், ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட்,..என்று எத்தனையோ வித நடனங்கள் அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டன. பெரிய ரேடியோ கிராமொன்று இசைத்தட்டு சங்கீதத்தை இறைந்துக் கொண்டிருக்க ஆண்களும் பெண்களும் அங்கு நடனம் பயிலும் காட்சி அவ்வில்லத்தையே ஒரு கந்தர்வ லோகம் போல் ஆக்கியது. ரோஸ்மேரி நடனம் சொல்லிக் கொடுப்பதில் கெட்டிக்காரி. ஆடுவதற்கே ஜென்மெடுத்தவள் போல் தோன்றினாள் அவள். பத்மா சகல நடனங்களையும் மிக விரைவாகவே கற்று விட்டாள். ரோஸ்மேரி அவளத் தனது சிறந்த மாணவிகளில் ஒருத்தி என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.
நடனப் பாடங்கள் பத்மாவுக்கு அவள் தனிமையைப் போக்கவும் உதவின. சில சமயங்களில் ரோஸ் மேரியிடம் நடனம் பயில வந்த வாலிப ஆண்களுடன் அவள் பால்ரூம் நடனம் பயின்றாள். இது அவளுடைய உள்ளத்திற்கும் உடலுக்கும் உல்லாசத்தைத் தந்தது. ஆனால் இதனால் அவளுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் இல்லை. கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதர் அவள் உள்ளத்திலும் உடலிலும் தோற்றுவித்த தீ இன்னும் அணைக்கப்படாமலே இருந்தது. அத்தீ கட்டிளம் காளையர் பலருடன் உடலோடு உடல் உராய பால்ரூம் நடனம் ஆடி வந்ததால் மேலும் மேலும் அதிகமாக எரிய ஆரம்பித்தது. அதனால் அவளுக்கு ஏற்பட்ட மென்மையான போதை நாளடைவில் பெரும் வெறியாகவே ஆகிவிடும் போல் தோன்றியது. அவ்வெறியைத் தீர்த்துக் கொள்ளச் சில சமயங்களில் எதையும் செய்யலாம், எப்படியும் நடந்து கொள்ளாம் என்று கூட அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவள் உள்ளத்தில் ஒவ்வோர் அணுவும் " இன்பம் இன்பம்" என்று கூவிக் கூவி அவளை உல்லாச வாழ்வுக்குத் தூண்ட அவள் மனம் கமலநாதனைச் சுற்றி அதிகமாகப் படரலாயிற்று. "ஸ்ரீதர் ஏமாற்றிவிட்டான் போலிருக்கிறது. ஒரு கடிதம் கூட அவன் எழுத வில்லையே. அவன் கொழும்பில் இருக்கும்வரை அதாவது ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக அவன் என் வாழ்க்கைக்குத் தினசரி இன்பம் கிளுகிளுப்பை அளித்துக் கொண்டு வந்ததற்காக நான் அவனுக்கு நன்றி பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அவன் இப்படித் திடீரென என் வாழ்க்கையை விட்டு, மறைந்துவிட்டதும் பெரியதொரு மந்தமல்லவா வாழ்க்கையைச் சூழ்ந்துவிட்டது. இதை என்னால் சகிக்க முடியாது. கமலநாதனை என் காதலுக்கு ஒரு "ஸ்டான்ட்-பை"யாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்தேனல்லவா? இனி அவன் தான் எனக்குத் துணை போலும். "ஸ்டான்ட் - பை" என்றாலும் அவன் ஸ்ரீதரை விட எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. அழகிலும், படிப்பிலும் பணத்திலும் வேண்டுமானால் அவன் ஸ்ரீதரை விடக் குறைவாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணைக் கவரும் ஆண்மையில் அவன் ஸ்ரீதரை விடச் சிறந்தவனாகவே விளங்குகிறான். அவன் கன்னங்கரிய மீசை ஒன்றே போதுமே." என்று பலவாறாகச் சிந்தனை செய்தாள் பத்மா.
முனிசிப்பல் விளையாட்டுச் சங்க வருடாந்த விழாவுக்குக் கமல நாதன் தனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியதைப் பத்மா உண்மையில் தனது அதிர்ஷ்டம் என்றே கருதினாள். கமலநாதனுடன் நெருங்கிப் பழக அது தனக்கு வாய்ப்பளிக்கும் என்று அவள் எண்ணியதே அதற்குக் காரணம். விமலாவும் லோகாவும் பத்மாவின் தந்தை பரமானந்தரிடம் வருடாந்த விழாவுக்குத் தாங்களும் பத்மாவும் ஒன்றாகப் போவதாகக் கூறி அதர்கு வேண்டிய அனுமதியையும் பெற்றுவிட்டார்கள்.
வருடாந்த விழாவன்று காலை பல்கலைக் கழகத்துக்குப் போவதற்காக பஸ்தரிப்பில் நின்ற பத்மாவின் முன்னால் பேரிரைச்சலுடன் கமலநாதனின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. "பத்மா இன்று விழாவுக்குக் கட்டாயம் வர வேண்டும். விமலாவுடனும் லோகாவுடனும் கூடிக் கொண்டு டாக்சியில் வந்துவிடு" என்று கூறினாள் அவன். பத்மா ஆம் என்று பதிலளித்தாள்.
அன்றிரவு எட்டு மணியளவில் வருடாந்த விழாவுக்குக் கண்ணைப் பறிக்கும் பகட்டான உடையணிந்து கமல நாதனின் சகோதரிகளுடன் டாக்சியில் வந்திறங்கினாள் அழகு மோகினி பத்மா. கமலநாதன் அவளை வரவேற்றுத் தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். சிறிது நேரத்தில் விருந்தாளிகள் எல்லோரும் நீச்சல் ராணி பத்மாவைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் அவள் கண்கள்தான் மிக அழகு என்று கூறினார்கள். இல்லை அவள் உடலமைப்பின் அழகே அழகு என்றனர் மற்றும் சிலர்.
கறுப்புக் காற்சட்டையும் வெள்ளைக் கோட்டும், ‘போ’ டையும் அணிந்து கம்பீரமாக விளங்கிய கமலநாதன் பத்மாவின் மனதைப் பரவசத்திலாழ்த்திவிட்டான். அவனோடு ஜோடியாகக் காட்சியளிப்பதில் அவளுக்குத் தனித் திருப்தி ஏற்பட்டது. கமலநாதனின் களிப்பையோ சொல்ல வேண்டியதில்லை. தங்கப் பொட்டுகளிட்ட கரிய சேலையணிந்து அப்சரஸ் போல் தோன்றிய பத்மாவின் பேரழகிலே பெருமையும் பூரிப்பும் அடைந்தவன் "பத்மா மட்டும் ஸ்ரீதரைக் கை விட்டு என்னை மணக்கச் சம்மதிப்பாளானால்..." என்பது போன்ற எண்ணங்களில் மூழ்கலானான்.
கமலநாதன் பத்மாவைப் பலவாறு உபசரித்தான். இடையிலே கதையோடு கதையாக "விமலாவும் லோகாவும் நீ நன்றாக நடனமாடக் கற்றிருப்பதாகக் கூறினார்கள். இன்று நீ என்னுடன் நடனமாட வேண்டும்." என்றான். பால்ரூம் நடனத்தில் அவனுக்கு எப்பொழுதுமே மிகவும் பிரியம். பத்மா அவனது கேள்விக்குப் பதிலாக "நான் ஒன்றும் பெரிய நடனக்காரியல்ல. என்றாலும் உங்களுடன் நடனமாடுவேன். நடனத்தில் குறைபாடிருந்தாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் அல்லவா?" என்றாள்.
விழாவின் முக்கியமான நிகழ்ச்சி நடனம்தான். பால்ரூம் நடனமும் இடையிடையே ரொக்-இன்-ரோல், டுவிஸ்ட் போன்ற நடனங்களும் நடைபெற்றன. ஆங்கில இசை மழையும், "கபரே" நடனங்களும் கூட இடம்பெற்றன. சுமார் நூறு நூற்றைம்பது பேர் வரை நடனங்களில் பங்கு பற்றினார்கள். பியர், விஸ்கி, உவைன் போன்ற குடி வகைகள் பிரவகிக்க, நடன விருந்து மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பாண்ட் வாத்திய கோஷ்டியினர் இன்னிசையை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.
பத்மா ஒரு நடன விருந்தில் கலந்து கொண்டது இதுவே முதல் தடவையானாலும் ரோஸ் மேரி வீட்டில் பலருடனும் ஆடிப்பாடிப் பழகியிருந்ததால் எவ்விதமான கூச்சமோ குழறுபடியோ இல்லாமல் மிகவும் சகஜமாக நடந்து கொண்டாள். அவளுக்கு உண்மையில் இவ்வனுபவம் அளவில்லாத இன்பத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது. போதாதற்குக் கமலநாதன் அவளுக்குச் சிறிது உவைனையும் பருகக் கொடுத்திருந்தான். இதனால் பத்மாவுக்கு இவ்வுலகம் மறந்து போக, கமலநாதனுடன் உல்லாசமாக ஆடினாள் அவள். விமலாவும் லோகாவும் சிறுமிகளானதால் பெரியவர்களாடும் ஜோடி நடனமான பாங்கு நடனத்தில் அவர்கள் பங்கு பற்றவில்லை. ரொக் இன் ரோல், டுவிஸ்ட் நடனங்களில் மட்டுமே கலந்து கொண்டார்கள். மற்ற நேரங்களில் அண்ணன் கமலநாதனுடன் தங்கள் டீச்சர் பத்மா நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
பத்மா சிறிது உவைனை உட்கொண்டிருந்த போதிலும், மதுப் பழக்கம் அதற்கு முன்னில்லாததால் அதன் போதை சற்று அதிகமாகவே அவளுக்கேறியிருந்தது. அதன் பயனாக அவள் பருவ உணர்ச்சிகள் கட்டுக் கடங்காது ஓங்க ஆரம்பித்துவிட்டன. போதாததற்கு, சுற்றிலும் கட்டிளங் காளையர்களும் கட்டழகுக் கன்னியரும் ஒருவரை ஒருவர் அணைத்து ஆடிக் கொண்டிருந்த காட்சியும் அவளுணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. இவை தவிர, அங்குமிங்கும் சில ஜோடிகள் ஒருவரையொருவர் தழுவியும் தழுவாமலும் காதல் மொழி பேசிக் கரங்களைப் பற்றி இன்பபுரியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தமையும் அவள் காதலுணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. அவளுக்கு அப்பொழுது இவ்வுலகமே மறந்து போயிருந்தது. ஸ்ரீதரின் நினைவு கூட வரவில்லை. அவளுக்கு இப்பொழுது இவ்வுலகிலே வேண்டியிருந்தது ஒன்றேயொன்று தான் காதல், காதல், காதலொன்றே அது.
கமலநாதன் அவள் இடையைத் தன் கரங்களால் பற்றி ஆடிக் கொண்டிருந்தாள். பத்மா அவன் கண்களில் தன் கண்களை நாட்டி அவனை விழுங்குவது போல் பார்த்தாள். "உங்கள் மீசை உங்கள் முகத்துக்கு மிக அழகு." என்று கூறி அவன் மீசையைத் தன் விரல்களால் பட்டும் படாமலும் தடவிவிட்டாள் அவள். கமலநாதனுக்கு அவள் வார்த்தைகள் தாங்கொணாத பெருமையையும் தன்னம்பிக்கையையும் கொடுத்துவிட்டன. அவன் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. "இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது. பத்மாவை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்." என்று தனக்குள் தானே கூறிக் கொண்டான் அவன். நீச்சலழகியாகத் தெரியப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளி வந்த அன்று, தன் படுக்கை அறையில் அவன் அவள் படத்தை இரகசியமாக மோகித்துப் பார்த்தபோது, பத்மா தன் கரங்களில் இப்படி இலகுவில் சிக்கிக் கொள்வாள் என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. இன்று உண்மையிலேயே அவள் அவன் கரங்களிலே சிக்கிக் கிடக்கிறாள். அவனது ஒரு கரம் அவள் காந்தள் விரல்களுடன் பின்னிக் கிடந்தது.
கமலநாதனுக்கு ஆடி ஆடி அலுத்துப் போயிருந்ததோடு சற்றுப் புழுக்கமாகவும் இருந்தது. அத்துடன், பத்மாவை எங்காவது தனியிடத்துக்குக் கொண்டு போய் அவளுடன் பேச வேண்டுமென்ற ஆர்வமும் அவனுக்கு ஏற்பட்டிருந்ததால், அவன் அவள் மீசையை மெச்சியதற்குப் பதிலாகத் தனது நன்றியைக் கூவி விட்டு "பத்மா இங்கே புழுக்கமாயிருக்கிறதல்லவா? சிறிது நேரம் வெளியே மோட்டார் சைக்கிளில் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வருவோமா?" என்றாள்.
மோட்டர் சைக்கிள் என்றதும் பத்மாவின் உள்ளம் துள்ளி எழுந்தது. காதலன் சைக்கிள் ஓட்டத் தான் பின்னே உட்கார்ந்து போக வேண்டுமென்ற மனத்தின் கனவு மலர்ச்சியுற்றது. ஆகவே அவனது வேண்டுகோளுக்கு "ஆம்" என்று பதிலளித்தாள் அவள். சீக்கிரமே மோட்டார் சைக்கிள் இருளைக் கிழித்துக் கொண்டு வீதியில் பறந்தது. பத்மா கமலநாதனின் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டு சைக்கிளின் பின்னாசனத்தில் உட்கார்ந்திருந்தாள். அமவாசை இருளில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்த பத்மா, திடீரென கமலநாதனிடம் "கமல், நேரமென்ன டார்லிங்" என்றாள். பத்மாவின் மனம் துணுக்குற்றது. எத்தனையோ மாதங்கள் தொடர்ந்து பழகிய ஸ்ரீதருடன் கூட அவள் இப்படி நள்ளிரவு வரை ஊர் சுற்றியதில்லை. ஆனால் அது அவளுக்கு அச்சத்தையோ வெட்கத்தையோ தரவில்லை. உற்சாகத்தையே கொடுத்தது.
பத்மா உண்மையில் மோட்டார் சைக்கிள் சவாரியை மிகவும் இரசித்தாள். காற்றுக்கெதிராகப் போய்க் கொண்டிருந்ததால், காற்று முழு மூச்சோடு அவள் முகத்தில் வீசி அவள் மென்மையான கூந்தலைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. காற்றின் ஸ்பரிசம் அவள் முகத்தில் நரம்புகளில் புதிய உயிர்த் துடிப்பை ஏற்படுத்தியது. என்றாலும் கமலநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வேகத்தைக் கண்டு அவள் நடுங்கிப் போய்விட்டாள். ஆனால் அந்த நடுக்கத்திலும் பயத்திலும் கூட ஓர் இன்பம். இராட்டின ஊஞ்சல் நிலத்திலிருந்து மேலே எழும்பிக் கீழ் நோக்கிச் சுழலும் போது யாருக்கும் பயமேற்படவே செய்யும். ஆனால் அந்தப் பயம் தான் அந்த ஊஞ்சல் சுழற்சிக்கே சுவையை ஊட்டுகிறது. அது போலத்தான் மோட்டார் சைக்கிளின் அளவு மீறிய வேகமும் அவளுக்கு இன்பத்தையே ஊட்டிக் கொண்டிருந்தது. எந்நாளும் எந்நேரமும் இப்படியே எங்காவது வேகமாக மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
உண்மையில் பத்மாவின் உள்ளத்தில் அப்போது மூன்று போதைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஒன்று காதலின் போதை; மற்றது உவனும் பியரும் குடித்ததால் ஏற்பட்ட கள்ளின் போதை; மூன்றாவது போதையோ வேகமான வாகனத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்ற நீண்ட காலம் ஆசையின் பூர்த்தியால் ஏற்பட்ட மன மயக்கம், இவை போதாவென்று அமாவாசை இருள், குளிர்ந்த காற்று, கமல நாதனின் மீசை, நடன சல்லாபம், நள்ளிரவின் தனிமை என்ற பகைப் புலங்கள், பத்மா வாழ்க்கையின் மர்மங்களைத் துலக்கிவிட வேண்டுமென்று துடி துடித்தாள். கமலநாதனை ஆதரவாக அணைத்துக் கொண்டு "கண்ணாளா" என்ரு முனகினாள்.
கமலநாதன் மோட்டார் சைக்கிளைக் கொள்ளுப்பிட்டியில் கடற்கரையோரமாக இருந்த ஒரு யாழ்ப்பாண நண்பனின் பங்களாவுக்குச் செலுத்தினான். அவ்வீட்டில் அப்பொழுது அவனது நண்பன் மட்டும்தான் இருந்தான். மற்றவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் போயிருந்தார்கள். நண்பனோ நடன விருந்தின் குடியில் மூழ்கிக் கிடந்தான். அவன் நட விருந்து முடியும் வரை வர மாட்டான்.
பங்களாவைச் சுற்றி நல்ல புற்றரை. ஒரு புறம் ஒரு சிறிய பிரதேசத்துக்கு வெண் மணல் பரப்பப்பட்டிருந்தது. காதலர்கள் தனிமையில் சல்லாபிப்பதற்கு அதைப் போன்ற தனியிடம் வேறு கிடைக்காது. பங்களா கேட் எப்பொழுதும் திறந்து கிடக்கும். வீடு மட்டும் தான் பூட்டப்பட்டிருக்கும் என்பது கமலநாதனுக்குத் தெரிந்ததே. அவன் நேராக அங்கு வந்தததற்குக் காரணம். இது விஷயத்தில் கமலநாதனிடம் மிகவும் அன்பும் மதிப்பும் கொண்ட அவனது நண்பன் "உனக்கு வேண்டிய எதையும் இங்கு செய்யலாம்" என்று பூரண அனுமதி வழங்கியிருந்தான். ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு கனவானாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே அது. கனவான் என்ற வார்த்தைக்கு இவ்விடத்தில் அக்கம் பக்கத்தார் கவனத்தை ஈர்க்காமல் இரகசியமாக காதும் காதும் வைத்தாற் போல் விஷயங்களைச் செய்து கொள்பவன் என்று பொருள். விசித்திரமான பொருள்தான். ஆனால் இன்றைய மத்தியதர மேலிட மக்கள் சிலரின் ஒழுக்கக் கோட்பாட்டுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒழுக்கம் செயலில் இல்லை, அதை வெளிப்படுத்துவதிலும் மறைப்பதிலும் தான் இருக்கிறதென்பது இந்த ஒழுக்கத்தின் அடிப்படை நியதியாகும்.
பங்களாவின் புல் தரையில் புகுந்து கேட்டை நன்கு சாத்திவிட்டு, கடலை நோக்கிய வீட்டின் பின்புறத்தில் வெண் மணல் பரப்பிய ஜாம் மர நிழலுக்கு எவித சத்தமுமில்லாமல் பூனை போல் பத்மாவுடன் சென்றான் கமலநாதன். பத்மாவுக்கு இது புது அனுபவம். ஸ்ரீதர் எப்பொழுதுமே இப்படி நடந்து கொண்டதேயில்லை. பத்மா பக்கத்திலிருந்தால் அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டும் கலகலப்பாகவுமே இருப்பான். வேடிக்கையும் விளையாட்டும் அமர்க்களப்படும். அவள் பின்னலை இழுப்பான். விரல்களை வருடுவான். ஆனால் கமலநாதன் போக்கோ முற்றிலும் வேறு விதமாக இருந்தது. ஆனால் ஒரு காதலனிடமிருந்து சாதாரணப் பெண்ணொருத்தி எதிர்பார்ப்பது எதனை? கமலநாதனிடம் ஸ்ரீதரின் வேடிக்கைப் பேச்சில்லை. அவன் எப்பொழுதும் காரியமாகவே பேசினான். பத்மாவுக்கு என்றும் எந்த நேரமும் இப்போக்கு பிடித்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இன்று இந்த நேரத்தில் கமலநாதனின் போக்கு அவளுக்கு மிகவும் பிடிக்கவே செய்தது. ஸ்ரீதர் பொய்ப் பெயர் சொல்லித் தன்னுள்ளத்தில் காதல் அலைகளைத் தோற்றுவித்த துஷ்யந்தன் என்றால், கமலநாதன் கானகத்துச் சகுந்தலையைக் காந்தர்வத்துக்கு அழைத்துச் சென்ற துஷ்யந்தன் போல் தோன்றினான் அவளுக்கு.
மணலிலே "அப்பாடா" என்று உல்லாசமாகச் சாய்ந்தாள் பத்மா. அவள் சேலை அங்குமிங்கும் பரவிச் செல்ல, கமலநாதன் அவளோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு "பத்மா, இந்த இடம் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டான். "அழகான இடம். சுவர்க்க லோகம் போலிருக்கிறது," என்று சொல்லிக் கொண்டே அவன் மீசையைத் தன் விரல்களால் பிய்த்தெடுப்பது போல் பாசாங்கு பண்ணிக் கலகலவென்று சிரித்தான் அவன்.
பங்களாவின் சுவருக்கப்பால், ரெயில் பாதைக்கு அந்தண்டை கொள்ளுப்பிட்டிக் கடல் குசுகுசுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதர் என்றால் "கடலும் வானமும் இரகசியம் பேசுகின்றன. கடலே பெண். வானம் காதலன்" என்று கூறியிருப்பானோ என்னவோ? போதையின் ஊடேயும் ஸ்ரீதரின் ஞாபகம் வந்ததும் பத்மாவின் நெஞ்சம் துணுக்குறவே செய்தது. என்றாலும், "எல்லாம் அவன் பிழைதானே. கடிதம் கூட எழுதவில்லை. நான் என்ன செய்வேன்? சும்மா இருந்த எனக்கு காதலுணர்ச்சியின் கிளுகிளுப்பைப் பழக்கி வைத்தவன் அவன். அதனால் இப்பொழுது என் மனம் பொழுது போகாத நேரமெல்லாம் அந்த அனுபவத்தைத் தானே தேடுகிறது. இதோ கமலநாதன் என் பக்கத்தில் என் காதலுக்காகக் காத்திருக்கிறான். ஸ்ரீதர் மிகப் பெரிய இடம். பார்க்கப் போனால் அவனுக்கும் எனக்கும் திருமணம் சாத்தியமில்லை தான்போலிருக்கிறது. அதனால் தன் போலும் மூன்று வாரங்களாகியும் இன்னும் ஸ்ரீதரின் கடிதத்தைக் காணோம். ஆனால் கமலநாதன் எனக்குச் சகல வகையிலும் ஏற்றவன். அவனையே திருமணம் செய்தால் என்ன? அந்தப் பிரச்சினையை இப்பொழுதே தீர்த்துக் கொண்டாலென்ன?" என்று சிந்தித்தாள் அவள்.
கமலநாதன் பத்மாவிடம், "பத்மா நீ ஸ்ரீதருடன் பழகுகிறாயல்லவா? இப்படி அவனுடனும் பல இடங்களுக்குப் போயிருக்கிறாயா?" என்றான்.
"இல்லை" என்றாள் பத்மா.
"நான் அதை நம்ப மாட்டேன். நீ எச்சிற்படுத்தப் பட்ட பழமே" என்றான் கமலநாதன்.
"இல்லை. என்னால் அதனை நிரூபிக்க முடியும்."
கமலநாதனுக்கு இச்செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. "அப்படியானால் நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். மறுக்க மாட்டாயே"
"கேளுங்கள்"
"பத்மா, நான் உன்னை நேசிக்கிறேன். உன் கொடி போன்ற அழகுக்காக மட்டுமல்ல, நீ படித்தவள், நாகரிகமானவள், பண்புடன் நடக்கத் தெரிந்தவள், வீட்டு வேலை தொடக்கம் பால் ரூம் நடனம் வரை எல்லாம் அறிந்தவள். உண்மையில் இன்றைய உலகில் குடும்ப வாழ்க்கை சிறப்பாக நடக்க ஒரு பெண்ணிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அவை எல்லாம் உன்னிடம் இருக்கின்றன. இன்னும் உன்னை என் தங்கைகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் சொல்லிச் சொல்லி அம்மாவுக்குக் கூடப் பிடித்திருக்கிறது. நீ என் மனைவியாக வேண்டும். அது தான் நான் கேட்க விரும்பியது. உண்மையில் நான் உன்னை எண்ணி எண்ணி மனம் புண்படாத நாலே இல்லை. இதுவரை ஸ்ரீதருடன் நீ நெருங்கிப் பழகியதால் என் மனத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். இன்று பாதை திறந்ததால் கேட்டு விட்டேன். நீ எச்சிற்படுத்தப்படவில்லை என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. என் கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறாய், பத்மா?" என்றாள் கமலநாதன்.
பத்மா அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தடவியவண்ணமே " நான் உங்களைத்தான் கட்டுவேன். ஸ்ரீதரைக் கட்ட மாட்டேன்" என்றாள். இதைக் கேட்ட கமலநாதனுக்கு முழு உலகமுமே தன்னை வாழுத்துவது போன்ற, உணர்ச்சி ஏற்பட்டது. வானத்தில் மலர்ந்திருந்த நள்ளிரவு நட்சத்திரப் பூக்கள் எல்லாம் தன்னை வாழ்த்தித் தேவர்கள் அள்ளி வீசிய மல்லிகை மலர்கள் போல் தோன்றின அவனுக்கு. அந்த ஆனந்தத்தில் அவளை ஆசை தீர அணைத்துக் கொண்டான் அவன்.
அவர்கள் கொள்ளுப்பிட்டிலிருந்து மீண்டும் நடன விருந்துக்குப் போன பொது இரண்டு மணியாகிவிட்டது. நடனமோ இன்னும் முற்றுப் பெற வில்லை. விடியும் வரை ஆட முடிவு செய்து நடனக்காரர்கள் இன்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள். பத்மாவும் கமலநாதனும் அவர்களுடன் சேர்ந்து தாமும் ஆடினார்கள். விமலாவும் லோகாவும் தூக்கம் தாங்காமல் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் பிரச்சினை முற்றாகத் தீர்ந்து விட்டது. மழை நீராட்டன்று ‘கால்பேசி’ல் ஸ்ரீதர் மூட்டிய தீ கொள்ளுப்பிட்டியில் ஜாம் மரத்தின் கீழே அவளது புதிய காதலன் கமலநாதனால் அணைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையை அவள் கண்டுவிட்டாள். அதன் கோணத்தை மட்டும் காட்டியவன் ஸ்ரீதர். இன்னும் அதன் முழுமையையும் காட்டி வாழ்க்கைக்குத் திருப்தி ஊட்டியவன் கமலநாதன். இனி அவன் தான் எல்லாம். வாழ்க்கைப் பிரயாணத்தில் அவனே அவள் துணைவன். இன்னும் ஸ்ரீதரின் மூன்று வார பிரிவால் ஏற்பட்ட அங்கலாய்ப்பும் தீர்ந்துவிட்டது. தான் கை விடப்பட்டு விடுவேனோ என்ற அச்சமும் பறந்து போயிற்று. எல்லாம் திட்ட வட்டமாக முடிவு செய்யப்பட்டுவிட்டன. திருமணத்துக்கு நாள் வைக்க வேண்டியதுதான் பாக்கி. இன்னும் நாளையிலிருந்து தனிமை நோயும் பறந்தது. கமல நாதனை ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது சந்தித்து உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் ஒரு சிலரால் தீர்க்கப்படாத பிரச்சினைகளை வைத்துக் கொண்டு மனச் சஞ்சலப்பட முடியாது "ஸ்ரீதர் இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாவிட்டால் அது போன்ற நன்மை வேறில்லை" என்றும் தீர்மானித்தாள் அவள்.
இச்சம்பவம் கொழும்பில் நடந்த அடுத்த நாட் காலை யாழ்ப்பாணத்தில் "அமராவதி" வளவில் ஸ்ரீதர் தன் அறையிலிருந்து தாயாரை உச்சக் குரலில் கூவி அழைத்துக் கொண்டிருந்தான். "அம்மா அம்மா எனக்கொன்றுமே தெரியவில்லை. கண் பார்வை அடியோடு மங்கிவிட்டது. நான் குருடாகி விட்டேன் அம்மா. என்ன செய்வேன்? எல்லாம் இருளாகத் தெரிகின்றதே" என்று அலறினான் அவன்.
அவனது கூக்குரலைக் கேட்டு, தாயார் பாக்கியம் மட்டும் அங்கு வரவில்லை. சிவநேசர், வேலைக்காரி தெய்வானை, கிளாக்கர் நன்னித்தம்பி, வீட்டைக் கூட்டிச் சுத்திகரித்துக் கொண்டிருந்த ஆள் வேலைகாரர் இருவர் ஆகிய எல்லோரும் ஓடி வந்தார்கள். பாக்கியம் தன் தலையைக் கைகளாலடித்துக் கொண்டு, "ஐயோ நான் என்ன செய்வேன்?" என்று கதறினாள். தெய்வானை அவளைத் தாங்கிப் பிடித்தாள்.
மோகனாவோ என்ன நடந்துக் கொண்டிருக்கிறதென்று தெரியாமல் "ஸ்ரீதர் ஸ்ரீதர்" என்று தன் அன்பு எஜமானனைக் கூவி அழைத்தது.
[தொடரும்]
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment