Friday, July 18, 2008

தொடர்நாவல்!
மனக்கண்
- அ. ந. கந்தசாமி-

[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]

5-ம் அத்தியாயம்: சலனம்!

பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்துவிடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்பியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.

பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்? இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.

ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.

பத்மாவுக்கு அன்று பஸ்ஸிலே கிடைத்த ஆசனம் இதற்கு மிக வசதியாக இருந்தது. அந்த வகையில், அந்த்ச் சோக நேரத்தில் கூட அவள் அதிர்ஷ்டசாலிதான். பஸ்ஸில் அடியோடு ஜனக் கூட்டம் இல்லாத நேரம். பஸ்ஸின் பிற்பகுதியில் தனிமையாக விளங்கிய அவ்வாசனத்தில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு, அன்றைய நிகழ்ச்சிகளை ஆராய ஆரம்பித்தாள் அவள். அவளது பொன் முகம் ஜன்னலோடு ஒன்றிக் கிடக்க, தனது நீண்ட விழிகளால் கண்ணீரை மனத்திருப்தியோடு ஓட விட்டவண்ணமே “காலையில் ஸ்ரீதரோடு ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போன போது “நானே மகாராணி!” என்று என்னுள்ளம் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் பின்னேரம் இப்படி ஆகிவிட்டதே” என்று ஏங்கினாள் அவள்.

உண்மையில் அன்றைய காலையைப் போல் அவள் உலக இன்பத்தை மட்டின்றி அனுபவித்த நாள் அவள் வாழ்க்கையிலேயே வேறு இல்லை. தந்தையாரின் கல்யாண அனுமதியினால் களிப்பில் திளைத்த மனதோடு அதிகாலையிலேயே படுக்கை விட்டெழுந்து பைப்பிலே நீராடிப் பெளடரிட்டுப் பொட்டிட்டுப் பட்டணிந்து கொண்டு தன் காதலனைக் காண உல்லாசமாகப் பல்கலைக் கழகம் வந்ததும், அங்கே அழகொழுகும் தனது மனதிற்குகந்த காதலனைச் சந்தித்து, இன்ப மொழிகள் பேசி, டாக்ஸியில் தோளோடு தோள் உராய - ஐஸ்கிறீம் பார்லருக்குச் சென்றதும், அங்கே வாய்க்கினிய ஐஸ்கிறீமைப் போதிய அளவு அருந்தி மனம் மகிழ்ந்ததும், எல்லாவற்றுக்கும் மேலாக அவளது அன்புக் காதலன் அவள் வளைக் கரங்களைத் தடவிக் கொடுத்த உடற் சுகமும் அவள் மனதில் திரைப்படம் போல் வந்துகொண்டிருந்தன. “ஆனால் சுவர்க்கமாக ஆரம்பித்த காலை பிற்பகல் நரகமாக மாறிவிட்டதே! தங்கமணிக்கு முன்னே என் கர்வமெல்லாம் அடங்கி இப்படி ஆகிவிட்டேனே. எப்படி நானென் தந்தைக்கு முன்னே போவேன்? எப்படித் தங்கமணிக்கு முன்னே தலை நிமிர்ந்து நடப்பேன்?” என்று யோசித்த வண்ணம் கண்களில் துளிர்த்த கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள், பத்மா.

இதற்கிடையில் அங்கு பஸ் டிக்கெந்த் கொடுக்க வந்த கண்டக்டர் சிங்களத்தில் “நோனா, ஏன் அழுகிறீர்கள்?” என்றான். ஒப்புக்கொரு புன்னகை செய்து கொண்டு கண்ணைத் துடைந்த வண்னம் கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்த 25 சதத்தை அவளிடம் கொடுத்து “கொட்டாஞ்சேனைக்கு ஒரு டிக்கெட்” என்றாள் பத்மா.

பஸ் இப்பொழுது கொழும்பு நகர மண்டபத்துக்கு அண்மையாக வந்து கொண்டிருந்தது. அதன் ஜன்னல் வழியாக நகர மண்டபத்தின் உயர்ந்த கோபுரத்தைப் பார்த்து அதன் பளிச்சென்ற வெண்மையான தோற்றத்தைப் பத்மாவின் மனதில் ஒருபுறம் வியந்து கொண்டிருக்க, அதன் மறுபுறம் சிவநேசர் மீது சென்றது.

சிவநேசர் பெயர் நாட்டிலுள்ள மற்ற எல்லோருக்கும் எவ்வளவு பழக்கமோ அவ்வளவுக்கு அவளுக்கும் பழக்கம்தான். உண்மையில் அவரை நேரில் அவள் காணா விட்டாலும், நேரில் கண்டால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்வாள். கம்பீரமான தோற்றம், வெள்ளைத் தலைப்பாகை, கழுத்து வரை பூட்டப்பட்ட்ருக்கும் வெள்ளைக் குளோஸ் கோட்டு, உத்தரீயம் ஆகியவற்றுடன் கூடிய அவரது படத்தை அவர் தர்மகர்த்தாவாக இருந்த கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலில் அவள் பல முறை பார்த்திருக்கிறாள். எப்போதோ ஒரு நாள் அவர் படத்தைத் “தினகரன்” பத்திரிகையிலும் பார்த்ததுண்டு. ஆம், உண்மைதான். ஸ்ரீதர் அவர் மகனாகத்தான் இருக்க வேண்டும். அவர் முகம் தான் அவனுக்கு. அதே பெரிய அகன்ற கண்கள். அதே கம்பீரத் தோற்றம். இருந்தும் இவ்விஷயத்தை ஏன் இதுவரை தான் கவனிக்கவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் பத்மா. “ நான் ஒரு மட்டி” என்று தன்னைத் தானே ஏசியும் கொண்டாள் அவள்.

பத்மா இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க “இப்பன்வலை” என்னும் ஹைட்பார்க் கோர்னரை அடைந்து, அங்குள்ள பஸ்தரிப்பில் நின்றது. அங்கே ஒரு கிழவியுடன், உடம்போடொட்ட உடை அணிந்து ஒய்யாரமாக நிமிர்ந்து நடை பயின்று வந்த ஓர் உயரமான யுவதியும், அவர்களுக்குப் பின்னால் மீசை வைத்த ஒரு வாலிபனும் ஏறினார்கள். இவர்களில் அந்த மீசையுள்ள வாலிபன் பத்மாவுக்கு நன்கு பழக்கமானவன். கமலநாதன் என்ற அவன் கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 30ம் இலக்கத் தோட்டத்தைச் சேர்ந்தவன். அவனது இரு தங்கைகளுக்குப் பத்மா ஆங்கில பாடஞ் சொல்லிக் கொடுப்பது வழக்கம். பரமானந்தர் தமிழ் சொல்லிக் கொடுப்பார். ஐந்தாறு தடவைகள் கமலநாதன் அவர்கள் வீட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணத்தைச் செலுத்துவதற்காக வந்து போயிருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அவன் ஒரு மோட்டார் சைக்கிளில் தான் வருவான். இன்று தான் அவனை முதன்முதலாக பஸ்ஸில் சந்தித்தாள் பத்மா.

மனதில் பெருங் கவலையோடிருந்த பத்மாவுக்கு அவனைப் பார்த்துச் சிரிப்பதா கூடாதா என்ற பதற்றம் ஏற்பட்டது. ஆனால், செத்த வீட்டில் கூட வருபவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தானே வேண்டியிருக்கிறது! இன்றைய உலகில் சிரிப்பு சந்தோஷத்தின் சின்னம் மட்டுமல்ல, அறிமுகத்தின் சின்னமுமாகவல்லவா மாறிவிட்டது! இன்னும் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதோடு தனக்குப் பணம் தந்து தங்கையைப் படிக்க அனுப்பும் ஒருவனை அவள் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? ஆகவே வேறு வழியின்றி இருவர் கண்களும் சந்தித்ததும் உப்புச் சப்பில்லாத அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்ந்தாள் அவள். அவள் அவ்வாறு சிரித்திருக்காவிட்டால் கர்வம் பிடித்தவன் என்று அவன் கணித்திருக்கலாமல்லவா?

ஆனால் கமலநாதன் நிலைமையோ வேறு. தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பானாலும் ஏதோ எதிர்பர்த்தது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவனது முகத்திற் பொங்கப் பதிற் புன்னகை செய்தான் அவன். அது வெறுமனே முகத்தின் புன்னகையாக மட்டும் தோன்றவில்லை. உள்ளமும் சேர்ந்து சிரித்தது போன்ற மென்மையான புன்னகை அவன் அதரங்களில் தவழ்ந்து அவனது சிவந்த கன்னங்களையும் மலர வைத்தது.

இப்பொழுது பஸ்ஸில் சுமாரான கூட்டம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஆசனங்களே காலியாக இருந்தன. ஆகவே வேறு வழியில்லாமல் பத்மாவுக்குப் பக்கத்திலிருந்த வெற்று ஆசனத்தில் கமலநாதன் உட்கார்ந்து கொண்டான். பத்மா அவனுக்கு ஒதுங்கி இடம் கொடுத்ததோடு இரண்டாம் முறையும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

பத்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்த கமலநாதன் திடீரென அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்தபோது, கைக்குட்டையால் பலமுறை துடைக்கப்பட்ட பின்னரும் கண்களின் ஓரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கண்ணீர்த் துளியைக் கண்டு கொண்டான். அதைப் பார்த்ததும், பத்மா அழுதிருக்கிறாள் -- அதன் காரணம் யாதாக இருக்கலாம் என்பதை அறிய வேண்டும் என்ற ஒரு துடிப்பு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் தனிப்பட்டவர்களின் இப்படிப்பட்ட சொந்த விவகாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் தமக்கு ஏற்படும் போது பண்புள்ள மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே கமலநாதனும் செய்தான். அதாவது தனது ஆவலை அப்படியே அடக்கிக்கொண்டான்.

இதற்கிடையில் தன் கண் தன்னைக் காட்டிக் கொடுக்கிறது என்பதை உணராத பத்மா, அவனுடன் பேச்சுக் கொடுக்க எண்ணி “ஏன் இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்கிறீர்கள்? உங்கள் மோட்டார் சைக்கிள் எங்கே?” என்று கேட்டு வைத்தாள்.

கமலநாதன் இப்படியொரு கேள்விக்காகவே தவங்கிடந்தவனைப் போன்று உற்சாகமாகப் பதிலளித்தான்: “சென்ற வாரம் நான் ஒரு மோட்டார் விபத்தில் மாட்டிக்கொண்டேன். அதனால் எனது சைக்கிளில் சிறிது பழுது ஏற்பட்டது. காரஜில் திருத்தப் போட்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடும்” என்று கொண்டே தனது உருண்டு திரண்ட வலது கை மணிக்கட்டில் பிளாஸ்டரால் போடப்பட்டிருந்த பெரிய கட்டைக் காண்பித்தான்.

பத்மா, “அப்படியா? ஆனால் உங்கள் தங்கை விமலாவோ, லோகாவோ இதைப் பற்றி வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையே? காயம் பலமோ?” என்று கேட்டாள்.

கமலநாதனுக்கு அவளது அக்கறையான பேச்சு ஒருவனாகத் திருப்தியைத் தந்திருக்க வேண்டும். ஆகவே, புன்னகையுடன் “உங்களுக்கு எத்தனையோ கவலைகள் இருக்கும். அவற்றுக்கிடையே இந்த அர்த்தமற்ற செய்தியை ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற அவர்கள் எண்ணியிருக்கலாம்” என்றான் குறும்புப் பார்வையோடு.

பத்மா அவனது கறுத்தடர்ந்த மீசையைப் பார்த்த வண்ணமே பருவத்துக்கேற்ற பரிகாசப் பேச்சுக்கள் பேசுகிறான் என்று எண்ணிக்கொண்டு, “எனக்கா கவலைகள்? யார் சொன்னது?” என்று கேட்டாள்.

“யாரும் சொல்ல வேண்டியதில்லையே? உங்கள் கண்களில் இப்பொழுது கூட ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகள் உங்கள் மனதை அப்படியே காட்டுகின்றன. கண்களைத் துடையுங்கள்” என்றான் கமலநாதன்.

பத்மா திடுக்கிடுக் கைக் குட்டையை எடுத்துக் கண்கள் இரண்டையும் அவற்றால் நன்றாகத் தேய்த்துத் துடைத்துக் கொண்டாள்.

“பார்த்தீர்களா, நீங்கள் நன்றாக அழுதிருக்கிறீகள். உங்கள் காதலனைப் பற்றிய பிரச்சினை ஏதாவது உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்றான் கமலநாதன்.

“என் காதலனா? நீங்கள் சரியான ஆள். அப்படி ஒன்றும் இல்லை” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன் கமலநாதன் “உங்கள் காதலனைப் பற்றி எனக்கெல்லாம் தெரியும். அவர் பெயர் ஸ்ரீதர் என்றும், வாட்டசாட்டமான ஆள் என்றும் விமலாவும் லோகாவும் வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஏன் இந்த விஷயம் கொலீஜ் ரோட்டில் பலருக்கும் தெரிந்ததுதான்” என்றான்.

பத்மா இதைக் கேட்டு மெளனமானாள். ஸ்ரீதரின் ஆள் மாறாட்ட மோசடி உடனே முற்றாக ஞாபகத்துக்கு வர, மீண்டும் கண்ணோரத்தில் வெளி வருவதற்குத் திமிறிய கண்ணீர்த் துளிகளை அவ்வாறு வெளிவராது கட்டுப் படுத்துவதற்குப் படாத பாடு பட்டாள் அவள். ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பி வீதிக் காட்சிகளில் மனதைச் செலுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்த அவளின் நிலையைக் கமலநாதன் ஓரளவு யூகித்துக் கொண்டு “உங்கள் மனதைப் பெரிய கவலை ஒன்று வருத்துகிறது என்று தெரிகிறது. என்ன விஷயம்?” என்று கேட்டான் அனுதாபத்துடன்.

பத்மா, அவன் மிகவும் சகஜமாக உரையாடும் முறையைக் கண்டு திடுக்கிட்டாள் என்றாலும் வீட்டுக்கு வந்து போகும் ஒருவன், தந்தையாரையும் தனது நிலையையும் நன்கு தெரிந்த ஒருவன் அவ்வாறு பேசும்போது அதனைக் குற்றமாக எண்ண முடியவில்லை. இன்னும் கமலநாதன் மரியாதையாகவும் பண்போடுமே உரையாடினான். மேலும் அப்போது அவளிருந்த மனநிலையில் யாருடனாவது பேச வேண்டும் போன்ற ஓர் உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டது. உண்மையில் தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் அவனிடம் பூரணமாகக் கொட்டிவிடுவோமா, அவனது ஆலோசனைகளைக் கேட்போமா என்ற எண்ணம் கூட அவளுக்கு உண்டாகியது. ஆனால் அதற்கு அவள் மனம் நாணியது என்பது ஒரு புறமிருக்க, பஸ்சும், சீக்கிரமே கொட்டாஞ்சேனையை அடைந்துவிடும்; அதற்கிடையில் தான் விரும்பிய எல்லாவற்றையும் கூற நேரம் போதாது என்ற மற்றோர் எண்ணமும் அவள் பேச்சைக் கட்டுப்படுத்தியது. ஆகவே அவள், “என் கவலையை உங்களுக்குக் கூறி என்ன பிரயோசனம்? உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றாள்.

அதற்குக் கமலநாதன் “அப்படிச் சொல்வது தப்பு. இவ்வுலகில் ஒருவர் கவலையை இன்னொருவருக்குச் சொல்வதால் கவலையில் பாதிக் கனம் குறைகிறது. அது மட்டுமல்ல உங்கள் கவலை தீர எனக்குத் தெரிந்த ஆலோசனைகளையும் நான் கூற முடியுமல்லவா?” என்றான்.

அதற்கு பத்மா “உங்களை எனக்குப் போதிய அளவு தெரியாத நிலையில் நான் உங்களிடம் என் கவலைகளைச் சொல்வது எப்படி?” என்றாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும், எனக்கு உங்களைத் தெரியும். உங்கள் அப்பா சில சமயங்களில் உங்களைப் பற்றி என்னுடன் பேசியிருக்கிறார். இன்னும் விமலாவும் லோகாவும் வீட்டில் உங்களைப் பற்றி அடிக்கடி அரட்டையடிப்பது வழக்கம். நீங்கள் கொலீசுக்குப் போகும்போது எதை எப்படி உடுத்துவீர்கள். தலையை எப்படி எப்படியெல்லாம் அழகாகப் பின்னிக் கட்டுவீர்கள் என்பது பற்றிக் கூட அவர்கள் பேசிக்கொள்வார்கள். அம்மா கூட உங்களைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்றுதான் இவ்வளவு தூரம் உங்களுடன் பேச்சு கிடைத்தது என்றாலும், நான் உங்களை ஓர் அந்நியனாகக் கருதவில்லை. ஆகவே உங்கள் பிரச்சினையைக் கூறினால், என்னால் சில ஆலோசனைகளைக் கூற முடியுமென்றே எண்ணுகிறேன். இன்னும் எனக்கு அன்றாட மனோதத்துவதில் நல்ல ஈடுபாடு. உண்மையில் மனோதத்துவ நூல்களைத் தான் நான் அதிகமாக வாசிப்பது வழக்கம். சொல்லுங்கள் உங்கள் பிரச்சினையை. நான் நல்ல தீர்ப்பும் கூறுகிறேனா இல்லையா என்று பாருங்கள்” என்று கூறினான் கமலநாதன்.

பத்மா, “அப்படியா? உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுமென்று எனக்குத் தெரியாமற் போனதே, பரவாயில்லை. எனது கவலையைப் பற்றி வேறொரு சமயத்தில் உங்களோடு பேசுவேன். இப்பொழுது பேசுவதற்கு நேரமும் போதாது. இதோ, பஸ் வண்டியும் மசங்கமாச் சந்திக்கு வந்துவிட்டது. அடுத்த பஸ் தரிப்பில் நாங்கள் இறங்க வேண்டுமல்லவா?” என்றான்.

கமலநாதன் “ஆம். நாங்கள் வேறு சமயத்தில் பேசிக்கொள்வோம். ஆனால் என்றும் எப்பொழுதும் என்னாலியன்று உதவிகளை நான் உங்களுக்குச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் கொட்டாஞ்சேனையில் பஸ் நின்றதும் இருவரும் கீழே இறங்கித் தத்தம் பாதைகளில் பிரிந்து சென்றார்கள். நாங்கள் இருக்கும் வட்டாரத்தில் ஜோடியாகப் போனால் பலரும் பலவிதமாகக் கதைத்துக்கொள்வார்கள் என்ற அச்சமே அவர்களை அவ்வாறு செய்யும்படி தூண்டியது. இல்லாவிட்டால் கொலிஜ் ரோட்டுக்குப் போகும் இருவரும் ஜோடியாகவே பேசிக்கொண்டு சென்றிருக்கலாம்.

வீதியில் நடந்த பத்மாவின் மனம் அன்று காலையிலிருந்து ஒன்றன்பின்னொன்றால் நடைபெற்ற அனுபவங்களை இசை மீட்டுக் கொண்டிருந்தது. ஒரே நாளில் எத்தனை சம்பவங்கள்! ஸ்ரீதருடன் முதன்முறையாக ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போய்க் கைகோத்துக் காதல் மொழி பேசிய இன்ப அனுபவம், பஸ் தரிப்பில் தங்கமணியின் சந்திப்பும் அதனால் ஏற்பட்ட விளைவும், பஸ்ஸிலே இப்பொழுது கமலநாதனுடன் உரையாடக் கிடைத்து சந்தர்ப்பம்.. அப்பாடா வாழ்க்கை என்பது பஞ்சகல்யாணிக் குதிரை வேகத்தில் அல்லவா போகிறது! சாதாரணமாக நத்தை வேகத்தில் கூடப் போகாத அவளது வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என்று அதிசயித்தாள் அவள். முன்மெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக, எவ்வித சம்பவமுமற்ற நாளாக, சுவையற்ற முறையில் கழியும். அதனால் ஏற்படும் சலிப்பைப் போக்க, தோட்டத்துப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து விளையாட்டுச் சொல்லிக் கொடுப்பது, அவர்களில் பெண் குழந்தைகளுக்குத் தலைவாரிப் பின்னி விடுவது, விடுதலை நாட்களில் கோயிலுக்குப் போவது போன்ற எதையாவது செய்வாள் அவள், இந்நிலைமை. அவள் நாடக மன்ற இணைக் காரியதரிசியாகிய பின்னர்தான் ஓரளவு மாறியது. ஸ்ரீதரின் காதலிணைப்பு ஏற்பட்ட பின்னர் அவனை அடிக்கடி காண்பதும், அவன் வீட்டுக்கு வருகையில் அவனோடு தந்தைக்குத் தெரியாது கண்ணாலும், வாயாலும் கைகளாலும் பேசிக் கொள்வதும், அவனைப் பற்றி நினைத்து நினைத்துப் புத்தக நிகழ்ச்சிகள் போல் அவளுக்குத் தோன்றின. அந்நிகழ்ச்சிகளில் சில அவளது உள்ளத்திற்கு வேதனையையும் விழிகளுக்குக் கண்ணீரையும் கொண்டு வந்த போதிலும் “வாழ்க்கையை வாழுகிறேன்” என்ற ஜீவ உணர்வு முன்னெப்போதிலும் பார்க்க இன்று அவளுக்கு மிக அதிகமாக ஏற்பட்டது. மனித இதயத்துக்குத் துன்பத்தை அனுபவிப்பதில் கூட இன்பம் இருக்கிறது. பலருக்கு வெறும் உப்புச் சப்பற்ற வாழ்க்கை வாழ்வதைவிட துன்பகரமான வாழ்க்கைகூட அதிக திருப்தியைத் தருகிறது. உண்மையில் வெறுமனே சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், மீண்டும் சாப்பிடுகிறோம் என்ற வாழ்க்கையை யார்தான் விரும்புவார்கள்!

ஸ்ரீதர் பொய்காரன் - அழகன் தான். கலைஞனும் கூடத்தான். பண்புள்ளவன் தான். ஒரு பெண்ணின் இதயத்தை மகிழ வைக்கும் அத்தனை சிறப்பம்சங்களும் பொருந்தியவன் தான். இருந்தாலும் என்ன பயன்? அவன் ஏன் பொய் சொன்னான்? என்னை ஏமாற்றிக் கைவிட்டு ஓடுவதற்காகத்தான் இருக்க வேண்டும். பணக்காரரின் போக்கு இதுதான் போலும்! பொய் விலாசம் கூறிப் பொல்லாங்கு செய்ய நினைத்த அவனுடன் மேலும் சிநேகமாய் இருப்பதும், அவனைக் காதலனாய் மதித்து உறவாடுவதும் ஆபத்தைக் கொண்டு வரவா? என்பன போன்ற கேள்விகள் பத்மாவின் உள்ளத்தில் எழுந்தன. இக்கேள்விகளைத் தொடர்ந்து அவர்களது தோட்டத்தில் 21ம் இலக்க வீட்டில் வசித்த குசுமா என்ற சிங்களப் பெண்ணின் பரிதாப நினைவும் அவளுக்கு ஏற்பட்டது. கட்டழகியான குசுமா தனது காதலனால் ஏமாற்றப்பட்டு இப்பொழுது ஒரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டாள். அவள் காதலனோ அவளைக் கைவிட்டுவிட்டு எங்கோ ஓடிப் போய்விட்டாள். முழுத் தோட்டத்தாலும் ஒழுக்கங் கெட்டவள் என்று வர்ணிக்கப்பட்ட அவள் நினைவு வந்ததும் குசுமாவின் காதலன் போலவே ஸ்ரீதரும் வஞ்சனைத் திட்டம் ஒன்றை நிறைவேற்றி விட்டு, மெல்ல மறைவதற்குத் தான் தன் ஆள்மாறாட்ட நாடகத்தை ஆடியிருக்கிறான் என்று எண்ணினாள் பத்மா. “உண்மையில் நான் தங்கமணியைக் கோபிப்பது பிசகு. அவளில்லா விட்டால் ஸ்ரீதரின் களவு வெளிப்பட்டிருக்காதல்லவா?” என்று கூடத் தனக்குள் தானே கூறிக்கொண்டாள் அவள்.

வீதியில் நடந்துகொண்டிருந்த பத்மாவின் எண்ணத்தில் கமலநாதனும் அடிக்கடி காட்சி தந்தான். அவளை அறியாமலே ஸ்ரீதருடன் கமலநாதனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் மனம். கமலநாதன் எனக்குத் தெரிந்தவன். அருகில் வசிப்பவன். அவனால் என்னிடம் இப்படிப்பட்ட பொய் சொல்லியிருக்க முடியாது. மேலும், அவனும் அழகன்தான். ஸ்ரீதரின் செருக்கான ஆடம்பரத் தோற்றம் இல்லாவிட்டாலும் அவனும் ஒரு சினிமா நடிகன் போன்ற கவர்ச்சி கொண்ட காளை தான். இன்னும் அவன் பல்கலைக் கழகப் பட்டதாரியல்ல என்றாலும் யோக்கியமான உத்தியோகம் செய்பவன் தான். முனிசிப்பல் சுகாதாரப் பரிசோதகன். தங்கைகள் மீதும் தாயின் மீதும் பிரியம் கொண்டவன். என் மீதும் அன்புள்ளம் கொண்டவன். ஸ்ரீதருக்கு மீசை இல்லை. எல்லோரும் மீசை வைக்க வேண்டியது அவசியமில்லை என்றாலும் கமலநாதனின் கறுத்தடர்ந்த அரும்பு மீசை அவனுடைய சிவந்த முகத்துக்கு ஓர் அழகைக் கொடுக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பத்மாவின் மனம் எதை எதையோ எல்லாம் சிந்தித்தது. “கமலநாதனுக்கு என் மீது ஆசை. என்னதான் உலகத்துக்குப் பயந்து பண்பாக நடந்து கொண்டாலும் அவன் என்னைப் பார்த்தப் பார்வையும் என்னுடன் பேசுவதில் காட்டிய ஆர்வமும் அதை எனக்கு வெளிக் காட்டவே செய்தன” என்று பலவாறு எண்ணினாள் அவள். “ஸ்ரீதர் தனது பொய் வெளியாகியதும் எனது வாழ்க்கையை விட்டு அகன்றுவிட்டால் நான் என்ன செய்வது?” என்ற பீதியும் பத்மாவுக்கேற்பட்டது. அப்பா என்ன சொல்லுவார்? தனது மகளின் திருமணப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவர் திடுக்கிட்டுவிட மாட்டாரா? மேலும், தோட்டத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீதர் வருவதும் போவதும் தெரிந்திருந்தன. அவர்கள் வேறு பரிகாசம் செய்வார்கள். ஐயையோ! இதை எல்லாம் எப்படிச் சமாளிப்பது? கட்டிய கோட்டைகள் எல்லாம் இடிந்து விட்டனவே! - என்று கவலையில் மூழ்கினாள் அவள்.

ஓர் இள வாலிபனோடு சிநேகமாய் இருப்பதால் ஒரு யுவதிக்கு ஏற்படும் கர்வம், இன்பம், மனப்பூரிப்பு ஆகியவற்றை அன்று தான் பத்மா பரிபூரணமாக அனுபவித்திருந்தாள். காலையில் அந்த உணர்ச்சிகளில் மூழ்கி, வாழ்க்கையை மனதார அனுபவித்துக் கொண்டிருந்த போது, அதை ஒரு நாளோடு திடீரென முடிவுறும் சிறுகதையாக அவள் எண்ணவில்லை. பல காலம் நீடிக்கும் ஒரு தொடர் கதையாக அது வளர்ந்து வரும் என்றே அவள் எதிர்பார்த்தாள். ஆனால் என்ன செய்வது? எல்லாம் வேறு விதமாகப் போய்விட்டன. ஸ்ரீதர் என்னை ஏமாற்றிவிட்டாள். நாளை நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவன் திணறுவான். அதன் பின் தன் களவு வெளிப்பட்டுவிட்டதே என்றெண்ணி ஓடி ஒளிந்து கொள்வான். பின்னர் அவன் என்னைத் தேடி வரமாட்டான். இன்னும், அவன் என்னை மனதார மணம் முடிக்க விரும்பினால் கூட, கோடீஸ்வரரான சிவநேசர் அதை அனுமதிப்பாரா? ஆகவே, சீக்கிரமே நான் தனித்துவிடுவேன். பிறகு, புது மாப்பிள்ளை பார்க்கவேண்டியதுதான். ஆனால் ஸ்ரீதரைப் போல் அற்புதமான, மனங் கவரும் மாப்பிள்ளை எங்கே கிடைப்பான்? கடந்த இரண்டு மாதங்களாக அவனுடைய உறவால் ஏற்பட்டிருந்த காதல் மலர்ச்சிக்கு முடிவு வந்துவிடும். அதை என்னால் தாங்க முடியுமா? காதல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத கறிபோல் மீண்டும் சப்பென்று ஆகிவிடுமோ, என்ன செய்வது? பொழுது போவது எப்படி? புத்தகமும் கையுமாக இருக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அப்பாவுடன் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இல்லை, அப்பாவுடன் நீண்ட நேரங்கள் பேசி அவளுக்குப் பழக்கமில்லை. அடுத்த வீட்டு அன்னம்மாவுடன் அரட்டை அடிக்கலாம். ஆனால் அவளுக்குத் தோசையைப் பற்றியும், உழுந்தைப் பற்றியும் இறந்து போன அவளது கணவனைப் பற்றியும் தான் பேசத் தெரியும்? இன்னும் மனதைக் கவர்ந்த ஓர் ஆணழகனுடன் பேசும் கொஞ்சு மொழிகளுக்கு அவை ஈடாகுமா, என்ன? பருவத்தின் தாகத்தை அவை தணிக்குமா? ஸ்ரீதருக்குப் பதிலாகக் காதலர்களைச் சம்பாதிப்பது கஷ்டமல்ல. பத்மாவின் பொன்னிற உடலும் தளுக்கு நடையுமே போதும் அதற்கு. ஆனால் கல்யாணம் என்ற முடிவு வரை நின்று பிடித்து, வாழ்க்கைத் துணையாக அவளுடன் வரத் தயாராக இருக்கும் நல்ல காதலன் எங்கே கிடைப்பான் என்று கவலையடைந்த பத்மா மனதில் கறுத்தடர்ந்த மீசை கொண்ட கமலநாதன் மீண்டும் காட்சியளித்தான்.

ஆனால் அவளுக்கு அதனால் மீண்டும் இன்பம் ஏற்படவில்லை. தான் இதுவரை தீட்டியிருந்த காதற் கனவும் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரணான இரு துருவங்கள் போல் அவளுக்குக் காட்சியளித்தன. உண்மையில் பத்மா தனது காதலை ரோமியோ - சூலியட், லைலா - மஜ்னு காதலுக்குச் சமமான ஒரு காதலாகவே இது வரை எண்ணியிருந்தாள். அத்தகைய காதலில் கமலநாதன் போல் ஓர் இரண்டாம் காதலனுக்கு இடமேது? ஆகவே கமலநாதனின் நினைவு வரக் கூடாதென்றே அவளது மனதின் ஒரு பகுதி விரும்பியது. ஆனால் ஸ்ரீதருக்கும் ரோமியோ - மஜ்னுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அழகிலும் கவர்ச்சியிலும் ஒரு வேளை ஸ்ரீதர் ரோமியோவையும் மஜ்னுவையும் மிஞ்சியவனாகக் கூட இருக்கலாம். ஆனால் காதலில்...? ரோமியோவோ, மஜ்னுவோ ஸ்ரீதரைப் போல் பொய்யர்களல்ல. குசுமாவின் காதலனைப் போல் தங்கள் காதலியரைக் கற்பழித்துவிட்டுக் கம்பி நீட்டியவர்களல்ல. அவர்கள் தங்கள் காதலிமாருக்குப் பொய் விலாசம் கொடுத்துக் காதல் புரிந்துவிட்டு ஓடிப் போனவர்களல்லவே! ரோமியோ சரியாக நடந்தால் சூலியட்டும் சரியாக நடந்து கொள்வாள். ஆனால் இன்றைய கள்ள ரோமியோக்களுக்கு நல்ல சூலியட்டுகள் எங்கே கிடைப்பார்கள்? ஸ்ரீதரும் ஒரு கள்ள ரோமியோ தானே? அவனுக்காக என் வாழ்க்கையை நான் நாசமாக்கிக் கொள்ளக் கூடாது. மேலும் உயிர் துறக்கும் காதல் எல்லாம் நாடகத்துக்கும் காவியத்துக்கும் தான் சரி. இன்றைய உலகுக்குச் சரிப்படாது. மேலும் அக்காலத்துக்கு லைலா - மஜ்னு காதல் ஆதர்சம் என்றால், இன்றைய உலகிற்கு ஹொலிவூட் நடிகர்களின் காதல்தான் ஆதர்சம். இளவர்சர் அலிகான் - ரீட்டா ஹேவொர்த் காதல்தான் இன்றைய உலகிற்கு முன்மாதிரி. உலகம் அவர்களைப் புறக்கணித்துவிட்டதா என்ன? உயர்த்தித்தானே பேசுகிறது? அன்று சூலியட் புகழை ஷேக்ஸ்பியர் பாடினார். இன்று அலிகான் - ரீட்டா காதலைப் பத்திரிகையாளர்கள் பாடுகிறார்கள். ஆகவே ஸ்ரீதர் போனால் புதிய மாப்பிள்ளை வேண்டும் என்று எண்ணுவதில் என்ன தவறிருக்கிறது? இன்றைய நாகரிகப் பெண்கள் உலகெல்லாம் செய்வதைத்தானே நானும் செய்ய நினைக்கிறேன்? ஆனால் காதலனைத் தேடும் படலத்தில் மறுபடியும் இன்னொரு பொய்யனைத் தேடிக்கொண்டுவிடக் கூடாது. கமலநாதன் பற்றிய விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். அவனால் என்னிடம் பொய் கூற முடியாது. அவனையே என் காதலனாக ஏற்றுக் கொண்டாலென்ன? அழகும் பண்பும் கொண்ட அவன் பஸ்ஸில் எவ்வளவு அருமையாக என்னுடன் பழகினான்? என்னுடன் நெருங்கிப் பழக அவனுக்குச் சிறிது இடம் கொடுத்தாலென்ன? ஸ்ரீதர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டதும் அவன் செய்தது அதுதானே? நான் இப்பொழுது இந்தத் துறையில் அனுபவசாலி. ஒன்றும் தெரியாத நிலையிலேயே சிறிதும் அனுபவம் இல்லாமலே ஸ்ரீதர் விஷயத்தில் நான் வெற்றி பெற்றேன். எனவே கமலநாதன் விஷயத்தில் வெற்றி பெறுவது மிக மிகச் சுலபம்! இன்னும் கமலநாதனுக்கோ என்னை ஏற்கனவே பிடித்திருக்கிறது. லோகாவும் விமலாவும், என் பின்னலைப் பற்றிப் பேசுவார்களாம்! சாமர்த்தியமாகத் தனக்கு என் மீதுள்ள ஆசையை எவ்வளவு தளுக்காக வெளிப்படுத்திவிட்டான் அவன்? அவளது அம்மாவுக்கும் என்னைப் பிடிக்கிறதாம்! கமலநாதனுக்கு என் மீது காதல்தான். ஐயமில்லை. பத்மா இவ்வாறு யோசித்து முடிவதற்கும் வீட்டுக்குள் புகுவதற்கும் சரியாய் இருந்தது. அப்பா பரமானந்தர் சாய்மனை நாற்காலியில் பத்திரிகை வாசித்தபடியே தூங்கிப் போயிருந்தார். ஓசைப்படாது உள்ளே புகுந்த பத்மா, கண்களை நிமிர்த்திச் சுவரிலிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. வழக்கம் போல் அடுத்த வீட்டு அன்னம்மா மத்தியான உணவை மேசை மீது பரப்பியிருந்தாள். கருவாட்டு மணம் மூக்கைத் துளைத்தது. அதைச் சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் கட்டிலில் படுத்திருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், “ஹாண்ட் பாக்”கையும் படிக்கும் மேசை மீது அலுப்போடு வீசிவிட்டுத் தனது அறைக்குள் புகுந்தால் பத்மா. அப்பொழுது “இன்னும் ஒரு மணி நேரத்தில் கமலநாதனின் தங்கையர் இருவரும் வருவார்கள். அவர்களின் வாயைக் கிண்டி அவர்கள் அண்ணனைப் பற்றிப் பேச வேண்டும்” என்றும் தீர்மானித்தாள்.

அதே நேரத்தில் கொலீஜ் ரோடு 30ம் இலக்கத் தோட்டத்திலிருந்த கமலநாதன் வீட்டில் ஒரு சம்பவம்.

விமலாவும் லோகாவும் அவர்கள் புத்தகங்களை அழகாக அடுக்குவதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“பார்த்தாயா, எனது புத்தகங்கள் தான் அழகு!” என்றாள் விமலா.

“போ, என் புத்தகங்கள் தான் அழகு. இதோ பார். உன் புத்தகத்தின் மட்டையில் எவ்வாறு மையைக் கொட்டி வைத்திருக்கிறாய்!” என்றாள் லோகா.

“அந்த மை நீ கொட்டியதுதானே!” என்று சீறினாள் விமலா.
கமலநாதன் “என்ன சண்டை?” என்று கொண்டே உள்ளே நுழைந்தவன் “உங்கள் டீச்சர், வாசிப்பதற்குப் புத்தகம் கேட்டதாகச் சொன்னாயல்லவா? நான் ஒரு புத்தகத்தைத் தருகிறேன். கொண்டு போய்க் கொடுங்கள்’ என்றான்.

“என்னிடம் கொடு, அண்ணா.” என்றாள் விமலா.

“என்னிடம் கொடு, அண்ணா. நான் தானே டீச்சருக்குப் புத்தகம் வேண்டுமென்று உன்னிடம் சொன்னேன்?” என்றாள் லோகா.

“சரி. இரண்டு புத்தகம் கொடுக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கொண்டு போங்கள். ஆனால் பத்திரமாகத் திருப்பி வாங்கித் தந்துவிட வேண்டும்.” என்றான் அண்ணன்.

அதன் பிறகு தன் புத்தக அலமாரியிலிருந்து இரு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான் கமலநாதன். ஒன்று “கவலைகளைத் தீர்ப்பதெப்படி?” என்ற ஆங்கில மனோதத்துவ நூல். மற்றது தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட காதல் நவீனம்.

விமலாவும் லோகாவும் மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள். “எனது புத்தகம் தான் அழகானது” என்றாள் ஆங்கில புத்தகத்தைப் பெற்றா விமலா. “கதைப் புத்தகம் தான் டீச்சருக்குப் பிடிக்கும். பார்ப்போமா?” என்றாள் லோகா துள்ளிக்கொண்டு.

கமலநாதன் தங்கையின் பேச்சைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்துக்கொண்டானாயினும் பஸ்ஸில் பத்மாவின் சந்திப்பால் ஏற்பட்ட மனச்சலனம் அவன் மனதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருந்தது. “ பிறனொருவனால் நேசிக்கப்படும் ஒரு பெண் மீது நான் என் புலனைச் செலுத்துவது சரியா?” என்பதே அது.


[தொடரும்]

No comments: